இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம் மெல்போர்னில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பெருமிதம்

viduthalai
2 Min Read

சென்னை, நவ.10 இந்தியாவிலேயே தமிழ்நாட் டில்தான் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம் என்று மெல்போர்னில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற 67-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார்.

பின்பு, அங்கிருந்து புறப் பட்டு மெல்போர்ன் நகரை சென்றடைந்தார். அங்கு வசிக்கும் தமிழர்கள் சார்பில் பள்ளியில் நேற்று (9.11.2024) நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

இந்தியாவிலேயே பட்டப் படிப்பு படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது. இந்தியாவில் 2035-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதம் பேர் பட்டம் பயில வேண்டும் என்ற இலக்கோடு புதிய கல்விக்கொள்கையை பிரதமர் கொண்டுவந்திருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கெனவே 51 சதவீதம் பட்டம் பெற்றவர்கள் இருக் கிறார்கள். தமிழ்நாட்டில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்களும் பட்டம் படித்திருக்கிறார்கள். தமிழ் நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனுக்காக ஒரு தனித் துறை உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த பகுதியில் வசிக்கும் தமிழர்களானாலும், அவர்களுக்கு சிறு இடர்பாடு ஏற்பட்டாலும் அதுகுறித்து, அந்தந்த நாடுகளில் இருக்கும் அயலக அணிகளின் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கப்பட்டால், எத்தனை கோடி ரூபாய் செலவானாலும்கூட, நம்மு டைய தமிழ் சொந்தங்களை காப்பாற்றிகொண்டுவருகின்ற பணிக்காக ஓர் அமைச்சரே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு காலத்தில், ஏதே னும் ஒரு நாட்டுக்கு சென்றவர், அங்கேயே இறந்து விட்டால், அவருடைய உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு 5 மாதம் அல்லது 6 மாதங்கள் வரை ஆகும். ஆனால், இப்போது அயலக தமிழர் நல வாரியம் அமைத்ததன் மூலமாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையை உடனடியாக தொடர்பு கொண்டு, மூன்றே நாட்களில், அந்த உடலை விமானத்தில் கொண்டுவருவதற்கான செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்கிறது.
இணையவழியில் தமிழ் கற்கலாம்: இணையதளம் மூலமே நீங்கள் தமிழை கற்றுக்கொள்ளலாம். 1-ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான புத்தகங்கள் எவ்வளவுவேண்டும் என்பதை ‘தமிழர் குடும்பம்’ மூலமாக எங்களுக்கு கடிதம் எழுதினால், உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் ‘வெளிநாடு வாழ் தமிழர்கள் நாள்’ ஜனவரி மாதம் கொண் டாடப்படுகிறது. அப்போது நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது, உங்கள் கோரிக்கை மனுவை என்னிடம் அளித்தால், அதை முதலமைச்சர் கவனத்துக்கு எடுத்துச்சென்று, அவற்றை செய்து கொடுப்பதற்கு தயா ராக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *