சென்னை, நவ.9- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (8.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்து மக்களின் வாழ் வாதாரத்தை சீரழித்தது இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும். மோடி உருவாக்கிய பணமதிப்பு நீக்க பேரழிவு என்பது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடியாகும். கருப்புப் பணம், கள்ளப் பணம் ஒழிக்கப்படும் என்றார்கள். ஆனால் அவர்கள் கூறியபடி ஒன்றும் நடக்க வில்லை. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.15.44 லட்சம் கோடி நோட்டுகளில் ரூ.15.31 லட்சம் கோடி நோட்டுகள் அதாவது, 99.9 சதவிகிதம் வங்கிகளுக்கு திரும்ப வந்து சேர்ந்து விட்டன. அப்படியானால் கள்ளப் பணம் எங்கே, கருப்பு பணம் எங்கே என 8 ஆண்டுகள் கழித்து மோடி ஆட்சியை நோக்கி பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டிய நாள் நவம்பர் 8.
நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மக்களுக்காக குரல் கொடுக்கிற மகத்தான தலைவராக ராகுல்காந்தி செயல்பட்டு வருவது மோடி தலைமையிலான ஆட்சியாளர்களுக்கு கலக் கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
எனவே, பணமதிப் பிழப்பு போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் எதையாவது அறிமுகப் படுத்த பிரதமர் மோடி முயல்வாரேயானால், ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி அதை முறியடித்து வெல்லும் என்பது உறுதியாகி வரு கிறது. இதன்மூலம் புதிய நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டு வருகிறது.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.