சென்னை, நவ.9- பருவமழை காலத்திலும் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்ப தற்கான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ள மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு பராமரிப்பு
தமிழ்நாடு மின்வாரியம் சார் பில் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வரையில் மொத்தம் 13 லட்சத்து 73 ஆயிரத்து 51 சிறப்பு பராமரிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக, 47 ஆயிரத்து 380 மின் கம்பங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. சாய்ந்த நிலையில் இருந்த 33 ஆயிரத்து 494 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு உள்ளன.
புதிதாக 27 ஆயிரத்து 329 மின் கம்பங்கள் இடைச்செருகல் செய்யப்பட்டுள்ளன. 2 லட்சத்து 17 ஆயிரத்து 775 இடங்களில், பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டு உள்ளன. 41 ஆயிரத்து 508 இடங்களில் மின்கம்ப தாங்கு கம்பிகள் புதுப்பிக்கப்பட்டு இருக் கின்றன. பழுதடைந்த 7 ஆயிரத்து 118 இடங்களில் பில்லர் பாக்ஸ்கள் சரி செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, சுமார் 2,927 கி. மீட்டருக்கு பழைய மின் கம்பிகள் புதியதாக மாற்றப் பட்டுள்ளன.
அமைச்சர் ஆய்வு
இதற்கிடையே மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில், பருவ மழைக் காலம் மற்றும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று (8.11.2024) நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மின் பகிர்மான வட்டம் வாரியாக விரிவான ஆய்வு மேற் கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, வட்ட அளவில் அதிக அளவு மின்தடைகள், மின் மாற்றிகள் பழுது மற்றும் புகார்கள் கொண்ட பகுதிகளில் மேற்பார்வை பொறியாளர்கள் தனது பணிகளில் தனிகவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் இருக்கும் துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள், பில்லர் பெட்டிகள் ஆகியவற்றில் உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தனி கவனம் செலுத்திடவும், மின் நுகர்வோரிடம் இருந்து வரும் புகார்களை குறைப்பதற்கு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
சீரான மின்சாரம்
30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும், அதற்கான காரணத்தையும் அதிகாரிகளிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டறிந்தார். மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உட னுக்குடன் சரி செய்ய வேண்டும் என்றும், பொது மக்களிடம் இருந்து சமூக வலைதளங்கள் வாயிலாக பெறப்படும் புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டுள்ளார்.
தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர், மேலாண்மை இயக்குநர் நந்த குமார், இணை மேலாண்மை இயக்குநர் விஷூ மகாஜன், இயக்குநர் (பகிர்மானம்) ஏ. ஆர்.மஸ்கர்னஸ் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களும் பங்கேற்றனர்.