கோவை, நவ. 8- கோவையைத் தொடா்ந்து, விருதுநகரில் நவ.9, 10 ஆகிய தேதிகளில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து, கட்சி யினருக்கு அவா் நேற்று (7.11.2024) எழுதியுள்ள கடிதம்:
கடந்த 5, 6 ஆகிய தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வை நடத்தினேன். அதைத் தொடா்ந்து மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கட்சிப் பணிகளையும் ஆய்வு செய்யத் தீா்மானித் துள்ளேன்.
ஓட்டை விழவில்லை: மேற்கு மண்டலத் திமுகவில் ஓட்டை விழுந்து விட்டது போல அரசியல் களத்தில் சித்தரிக்கப்படுவதற்கு மாறாக, கொள்கை உரமிக்க மூத்த நிர்வாகிகளையும், லட்சிய நோக்கத்துடன் செயல்படும் இளைய பட்டாளத்தையும் கொண்ட கட்சியின் கோட்டையாக மேற்கு மண்டலம் இருக்கிறது. இதை கோவையில் தரையிறங்கியதுமே உணர முடிந்தது.
தொலைநோக்குப் பார்வை கொண்ட திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காலத்திற்கேற்ற வளா்ச்சிக் கட்டமைப்புகளை உருவாக்குவது வழக்கம். அதன்படி, கோவை பயணத்தின்போது புதிய டைடல் பூங்கா திறக்கப்பட்டது. இதேபோன்று, வீட்டுவசதி வாரியத் துறை சார்பில் நடந்த நிகழ்வு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றேன். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் புது உத்வேகம் உருவாகியிருப்பதை உணர முடிந்தது.மீண்டும் திமுக ஆட்சி: 2026 சட்டமன்றத் தோ்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்திருப்பதாகவே கருதுகிறேன்.
மக்கள் பணியை லட்சியமாகக் கொண்டிருப்பதால் மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்.மக்களின் பேரன்பில் கோவை மாவட்டக் களஆய்வு மகிழ்வாக அமைந்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை வழங்கி, நவ.9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகா் மாவட்டத்தில் ஆய்வுப் பணியை மேற்கொள்ள உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.