சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபைமீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான திட்டம் வகுக்க வேண்டும்

Viduthalai
2 Min Read

பொது தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.8 சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (7.11.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹரி சங்கர், கோயில் விவகாரத்தில் தலையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை. கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அரசு நெருக்கடி கொடுக்கிறது என்றார்.
அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞர் அருண் நடராஜன், ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் இதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 6 கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில், கனக சபையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று பொது தீட்சிதர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது என்றார்.

அப்போது நீதிபதிகள், தொடர்ந்து அரசுக்கும் பொது தீட்சிதர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுவது ஏன்? இதை தவிர்க்க வேண்டும். கடவுள் முன் யார் பெரியவர் என்று போட்டி கூடாது. கடவுள்தான் அனைவருக்கும் மேலானவர் என்பதால் இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும். கோயிலில் கனக சபையில் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை என்பதை தீட்சிதர்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்கு தீட்சிதர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் அரசு ஏன் தலையிடப் போகிறது.
நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்ததால்தான் அரசு அரசாணை பிறப்பித்து இருக்கிறது என்றனர்.

அப்போது, அறநிலையத் துறை தரப்பு வழக்குரைஞர், தீட்சிதர்கள் சுய ஒழுங்கு முறையுடன் செயல்பட வேண்டும். கோயிலுக்குள் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 6 கால பூஜை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் கனக சபையில் பக்தர்களை எப்படி அனுமதிப்பது, எந்த நேரத்தில் அனுமதிப்பது என்பது குறித்த வழிமுறைகளுடன் திட்டத்தை வகுத்து நவம்பர் 14ஆம் தேதிக்குள் பொது தீட்சிதர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *