தஞ்சாவூர்,நவ.8- தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பி இருப்பவர் களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திராவிட இயக்கம்
தஞ்சையில் நேற்று (7.11.2024) நடந்த தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வருவதற்கு உரிமை கிடையாது. படிப்பதற்கு உரிமை கிடையாது. ஆனால் இவை எல்லாவற்றையும் மாற்றியது யார்? என்று கேட்டால் அதுதான் நமது திராவிட இயக்கம். பெண்களின் அடிமை விலங்கை உடைத்தவர் பெரியார். அரசு திட்டங்கள் மூலம் பெரியார் விரும்பியதை அண்ணாவும். கலைஞரும் பெண்கள் தங்கள் வாழ்வில் மென்மேலும் வளர, உயரே பறக்க சிறகுகள் தந்தார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்
அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என எண்ணற்ற திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார்.
இன்றைக்கு இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் அரசு என்றால் அது நம்முடைய திராவிடமாடல் அரசு. தான். தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் எப்படி சிறந்து விளங்கு கிறது என்று நிட்டி ஆயோக், ஒன்றிய புள்ளியல் துறை அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. இன்றைக்கு தி.மு.க.வை அழிப்பேன் என்று பலபேர் கிளம்பி இருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டு மக்கள் அதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள்.
தி.மு.க. தொண்டர்கள் உணர்ச்சி வசமாக, மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கிறார்கள். இந்த உற்சாகம்தான் நம் முடைய எதிரிகளுக்கு மிகுந்த எரிச்சலை தருகிறது. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாம் பெறும் தொடர் வெற்றிதான் அவர்களுக்கு பெரும் எரிச்சலை தருகிறது.
துண்டுபோட்டு காத்து இருக்கிறார்கள்
அ.தி.மு.க. பல்வேறு அணிகளாக பிரிந்து நிற்கிறது.இப்படி தனித்தனி அணிகளாக சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வும், யாருமே சீண்டாத பா.ஜனதாவும் எப்படி யாவது தி.மு.க. கூட்டணியில் விரிசல் விழுந்து விடாதா?என துண்டுபோட்டு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நமது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான நம்முடைய கூட்டணி வலுவாக உள்ளது என தலைவரும் சொல்லிவிட்டார். நமது கூட்டணிக் கட்சி தலைவர்களும் அதிலே தெளிவாக இருக்கிறார்கள்.
இலக்கை நோக்கி உழைக்க வேண்டும்
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய நமது தலைவர் மு.க.ஸ்டாலின், நமது தலைமையிலான கூட்டணி குறைந்தது 200-க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற இலக்கை நமக்கு அளித்து இருக்கிறார்கள். இந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும்.
ஒவ்வொரு வீடாக சென்று நமது தி.மு.க.அரசின் சாதனைகளை, முதலமைச் சரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தி.மு.க. அரசின் முகமாக இருந்து செயல்பட வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் வென்றது, தி.மு.க. தலைவர் மீண்டும் 2-ஆவது முறையாக முதலமைச்சர் ஆனார். தி.மு.க. 7-ஆவது முறையாக ஆட்சி அமைத்தது என்ற வரலாற்றுப் பதிவை உருவாக்க வேண்டும். அதற்கான உறுதியை தஞ்சை மண்ணில் ஏற்றுக் கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தஞ்சை அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளை திறப்பு விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நேற்று (7.11.2024) மாலை நடந்தது.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் கலந்து கொண்டு 17 துறைகளின் சார்பில் 14 ஆயிரத்து 525 பயனாளிகளுக்கு ரூ.154 கோடியே 10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.