சென்னை, நவ. 7- தமிழ்நாட்டின் மின்தேவை 2026-2027-ஆம் ஆண்டில் 23,013 மெகாவாட்டாக உயரும் என மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் மின்நுகா்வு தினசரி சராசரியாக 15,000 மெகாவாட் முதல் 19,000 மெகாவாட் வரை உள்ளது. புதிய மின்னிணைப்பு பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் மின்நுகா்வு அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில் வீடுகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் மின்விசிறி, குளிர்சாதன வசதிகளின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால், அச்சமயம் மின்நுகா்வு உச்ச அளவை எட்டும்.
இதன்படி கடந்த மே 2 -இல் எப்போதும் இல்லாத வகையில் மின்நுகா்வு 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரையிலான உச்சபட்ச அளவாக உள்ளது. தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும், மின் வழித்தடங்கள் மற்றும் மின்சாதனங்கள் பழுதடைவதால் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே 2026-2027-இல் தமிழ்நாட்டின் உச்ச மின்தேவை 23,013 மெகா வாட்டாக இருக்கும் என மத்திய மின்சார ஆணைய ஆய்வு அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப மின்சாரம் கிடைக்கும் என்றாலும், அதற்கு ஏற்ப சீரான மின் விநியோகத்துக்கான கூடுதல் வழித்தடங்களை ஏற்படுத்தவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேபோன்று, கா்நாடகத்தின் மின்தேவை 20,066 மெகாவாட்டாகவும், ஆந்திரத்தின் மின்தேவை 16,262 மெகாவாட்டாகவும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்கள்
அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு
மதுரை, நவ. 7- விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 5.11.2024 அன்று உத்தரவிட்டது.
மதுரை மானகிரி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமார் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு தமிழ்நாடு அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், தனியார் மதுக் கூடங்களுக்கு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் அனுமதி வழங்கி வருகிறது. இந்த மனமகிழ் மன்றங்களில் பதிவு செய்த உறுப்பினா்களுக்கு மட்டுமே மது விற்க வேண்டும். தமிழ்நாட்டில் எப்.எல். 2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் சட்டவிரோதமாக, உறுப்பினா் அல்லாதவா்களுக்கும் மதுவை விற்பனை செய்கின்றன.
விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்களின் பதிவுகளை பதிவுத் துறை ரத்து செய்யலாம். மனமகிழ் மன்றங்கள் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டாலும், அரசியல் பின்புலம் கொண்டவா்களின் தலையீடு காரணமாக உரிமங்கள் ரத்து செய்யப்படுவதில்லை. இதுதொடா்பாக பதிவுத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தார். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரியகிளட் அமா்வு முன் செய்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், மனமகிழ் மன்றங்களில் உறுப்பினா் அல்லாதவா்களுக்கும் மது விற்பனை செய்யப்படுவதால், நாள் முழுவதும் செயல்படும் மதுக் கடைகளாக அவை மாறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அரசு வழக்குரைஞா் திலக்குமார் முன்னிலையாகி முன்வைத்த வாதம்: மனமகிழ் மன்றங்களை மாதந்தோறும் இருமுறை வட்டாட்சியா் உள்ளிட்ட பிற அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா் என்றார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனமகிழ் மன்றங்கள் விதிகளின்படி முறையாகச் செயல்படுகின்றனவா? என்பதை உறுதி செய்வது அரசின் கடமை. விதிமுறைகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பதிவுத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
இதுகுறித்து தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத் தீா்வைத் துறை, பதிவுத் துறைச் செயலா், பத்திரப் பதிவுத் துறைத் தலைவா் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை டிச. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.