திருச்சி. நவ. 6- 2026ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார்.
திருச்சியில் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நுண்ணிய அளவில் வரைமுறை செய்து ஏராளமான பொறுப்பாளர்களை நியமிக்க முடிவு எடுத்துள்ளோம். கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கெனவே நாங்கள் 7 ஆண்டுகளாக தொடர்ந்து தி.மு.க.கூட்டணியில் இருந்து வருகிறோம்.
அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளோம். இரண்டு கூட்டணிகளை உருவாக்கிய தில் விடுதலை சிறுத்தைக ளுக்கு பங்கு உண்டு. நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் பலப்படுத்த வேண்டும். முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்பதில் தான் என்னுடைய கவனம் இருக்கிறது. இந்த கூட்டணியை விட்டு விட்டு இன் னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவை எங்களுக்கு இல்லை. ஏற்கெனவே பல முறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன். திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். நம்பகத்தன்மையை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.
இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மதசார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி.
வருகிற 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி தொடரும். அம்பேத்கர் குறித்த புத்தகவெளியீட்டு விழாவில் முதலமைச்சர் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஓர்ஆண்டுக்கு முன்பே நான் சம்மதம் தெரிவித்துவிட்டேன். தற்போது அந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து எங்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன்.
-இவ்வாறு அவர் கூறினார்.