ஈரோடு, நவ.6- தாளவாடி அருகே தமிழ்நாடு கருநாடக பக்தர்கள் பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது. இதில் ஒருவர் மீது ஒருவர் சாணி வீசிக்கொண்ட னர்.
சாணியடி திருவிழா
ஈரோடு மாவட்டம் தாள வாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து அடுத்துவரும் 3ஆவது நாள் சாணியடித் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா 3.11.2024 அன்று காலை பூஜை தொடங்கியது. இதற்காக கிராமத்தில் உள்ள அனைத்து மாட்டு சாணங்களும் சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சாமி போன்ற வேடமணிந்தவரை கழுதை மீது அமர வைத்து ஊர் குளத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர் அங்கு பீரேஸ்வரன் சிலைக்கு ஆண்கள் மேலாடை அணியாமல் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.
ஒருவர் மீது ஒருவர் வீசினர்
இதைத்தொடர்ந்து கோவில் பின்புறம் குவித்து வைக்கப்பட்டுள்ள சாணத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அங்கு திரண்டு இருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமிழ்நாடு கர்நாடக மாநில பக்தர்கள் இணைந்து அனைவரும் குவித்து வைக்கப்பட்ட சாணத்தை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்தனர்.
நிவாரணம் பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுகும் நிலை
உயா்நீதிமன்றம் வேதனை
சென்னை, நவ. 6- பல நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவா்கள் தங்களுக்கான நிவாரணத்தைப் பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
சுற்றுலா செல்வதாகக் கூறி ரூ.13 லட்சத்து 66 ஆயிரத்து 725-அய் வசூலித்து ஏமாற்றியதாக, சென்னையைச் சோ்ந்த ஜெயசிங் வசந்த், ரஞ்சித் ஆகிய இருவருக்கு எதிராக வேலூரைச் சோ்ந்த மனோகா் தாஸ் என்பவா் கடந்த 2020-ஆம் ஆண்டு சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகார் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, அவா் கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்றத்தில் விசாரணையின்போது இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மனோகா் தாஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கடந்த 2022-ஆம் ஆம் ஆண்டு பிப். 16-ஆம் தேதியில் இருந்து தற்போது வரை கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியில் இருந்த நான்கு துணை ஆணையா்கள், மூன்று உதவி ஆணையா்கள் மற்றும் 6 ஆய்வாளா்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று (5.11.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 11 காவல் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகியிருந்தனா். காவல் துறை தரப்பில் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மருத்துவ விடுப்பில் உள்ள இரண்டு அதிகாரிகளைத் தவிர மற்றவா்கள் ஆஜராகி உள்ளனா். சம்பந்தப்பட்ட நபா் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்தும் வகையில் வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுபோன்று பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பாதிக்கப்பட்டவா்கள் தங்களுக்கான நிவாரணத்தைப் பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இருக்கிறது. அதிகாரிகளை தண்டிக்கும் நோக்கம் நீதிமன்றத்துக்கு இல்லை. அவா்கள் தவறை உணர வேண்டும் எனக் கூறினார்.
இதையடுத்து, காவல் துறை தயாரிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறையின் வரைவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடா்பாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்த காரணங்களை விளக்கி காவல் துறை மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
பின்னா், விசாரணையை நவ. 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய நாள் கோயம்பேடு காவல் நிலையத்தில் தற்போது பணியில் இருக்கும் உதவி ஆணையா் மற்றும் ஆய்வாளா் ஆஜராகவும், மற்ற அதிகாரிகள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.