சி.ஆரோக்கியசாமி
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் அறிவியல் தொழில் நுட்பம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அலோபதி மருத்துவமும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதன் வளர்ச்சி பாய்ச்சல் நிலையில் இருக்கும். பக்க விளைவுகள் குறைந்த சித்தமருத்துவமும் பெரும் வளர்ச்சி பெற வேண்டும்.
முப்பதுகோடி முகமுடையாள் இன்று?
இந்த வளர்ச்சியானது அனைத்து மக்களையும் சென்று சேரவில்லை. இந்த வளர்ச்சி வணிக நோக்கங்களுக்கே அதிகம் பயன்படுகிறது – பயன்பட்டு வந்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. அதே நேரம் அலோபதி மருத்துவத்தின் பெரும் வளர்ச்சி கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உலகமக்கள் தொகையைப் பெருக்கியிருப்பதோடு சராசரியான மனித ஆயுட் காலத்தையும் நீட்டித்துள்ளது. இதில் உலகமதங்களும், அவற்றின் கடவுளர்களும் பங்கு வகித்தார்கள் என்பதற்கு சான்றுகள் இல்லை.
அண்மைக்காலமாக “மக்கள் தொகை மரபியல்” என்னும் புதிய அறிவியல்துறை பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இது கடந்த காலத்தைப் புரட்டிப் போடக்கூடிய ஒரு துறை எனலாம். உலகோரின் மூதாதையர் ஆப்பிரிக்கரே!
உலகில் இன்று வாழும் அனைத்து மக்களின் மூதாதையரும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களே என்பதை இந்தத்துறை இதுவரை கிடைத்துள்ள மறுக்க இயலாசான்றுகளின் அடிப்படையில் நிறுவியுள்ளது. இதில் மேல் நாட்டு அறிவியலாளர்களின் பங்கு மகத்தானது. ஆக இன்று உலகில் வாழும் அனைத்து மக்களும் வெவ்வேறு காலங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்தவர்களின் வழித்தோன்றல்களே என்பதை மரபியல் ஆய்வுகள் உறுதிசெய்து வருகின்றன.
இந்த உண்மையின் வெப்பத்தில் இன்றுவரை பீற்றிக் கொள்ளப்படுகின்றகீழ்கண்ட பெருமைகள் யாவும் புனையப்பட்ட பொய்களே என்பது நிறுவப்பட்டுள்ளதோடு அந்தப் பொய்கள் பொசுங்கிக் கொண்டுள்ளது.
நிறப் பெருமை, வர்ணப் பெருமை, பிறப்புப் பெருமை தேசப்பெருமை, இனப்பெருமை, குலப்பெருமை குடிப்பெருமை, ஜாதிப் பெருமை… போன்ற எல்லாப் பெருமைகளும் வெற்றுப் புழுகுகளே, புனைவுகளே என்பது, வலுவான ஆதாரங்களின் மீது வெளியாகத் தொடங்கி விட்டது. முகப் பிறப்பு, தோள் பிறப்பு, தொடைப் பிறப்பு, கால் பிறப்பு, புனிதயோனிப் பிறப்பு, பாபயோனிப் பிறப்பு என்பன வெல்லாம் வெறும் புனைவுகளே – கற்பனைகளே – பிறப்பால் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுவிட்டது. தாம் உழைக்காமல் அடுத்தவன் உழைப்பில் உண்டு கொழுக்க, செய்து கொண்ட ஏற்பாடுகளே இவை என்பதும், மற்றவற்றைவிட தாம் உயர்ந்த பிறப்பு என்ற பொய்களும் பெரும் அளவில் தெளிவாகவே வெளியாகிறது. இந்தக் கதைகள்- பொய்யாய் பழங்கதையாய்ப் போயிக் கொண்டுள்ளது என்பது வெளியாகிக் கொண்டே உள்ளது.போலிப் பெருமைகளில் வாழ்பவர்களின் புலம்பல்களில் இருந்தும் இதை அறித்து கொள்ளலாம்.
டார்வின் கொள்கை பொய் என்றால்
உண்மை எது?
டார்வினின் உயிர்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்பன எல்லா மதங்களின் படைப்புக் கொள்கைகளையும், புரட்டிப் போட்டு விட்டது. அந்தந்த மதங்களும் இறைவர்களும் பொருளற்றுப் போயிக் கொண்டுள்ளார்கள்.
“அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே”
நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல் தெளிவாகச் சொல்கிறது,”அவரவர் தங்கள் தங்கள் அறிவுக்கு எட்டிய / புரிந்த வகைகளில் அவரவர் கடவுளர் என்று (பல வகைப்பட்ட தெய்வங்கள் முன்) அடி பணிந்து தொழுகின்றனர் அவரவரின் தெய்வங்களும் (பலன்கள்
அருளுவதில்) குறையில்லாத தெய்வங்களே (அவரவரின் உணர்தலால்/புரிதலால்) அவரவர்க்கு விதிக்கப்பட்ட ‘தத்துவப்பாதையில்… (அத்தெய்வங்களைச்) சென்றடைய அவர்கள் வணங்கி நிற்கின்றனர்.
1200 ஆண்டுகள் கடந்தும் இந்த எளிய பாடலைப் புரிந்து கொள்ளாத மதத்தார் இன்றும் மற்ற மதங்களின் மீது வெறுப்பைக் கக்குகிறார்கள். மதம் அரசியலாக்கப் படுவது இப்படித்தான். கடவுளை விட அரசியலே முக்கியம்!
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை அதுவும் மேல் நாட்டார் கண்டுபிடிப்புகளை வைத்துக் கொண்டு அவற்றின் வழிதான் இவர்கள் தங்கள் பழம் பெருமைகள் என்பனவற்றை தம்பட்டம் அடிக்கிறார்கள். செல்போனும், மின்சாரமும்,தொலைக் காட்சியும் இல்லாமல் வாழ்க்கை இனி உண்டா? டார்வின் கண்டுபிடிப்பை தடைசெய்ய முயற்சிக்கிறார்கள். இரண்யாட்சன் பூமியைப் பாயாய் சுருட்டிய கதையையும் அதை திருமால் வராக அவதாரம் எடுத்து மீட்ட கதையையும் பாடத்திட்டத்தில் இனி சேர்ப்பார்களோ? பூமியை பாயாக சுருட்டி எந்தக் கடலில் ஒழித்து வைத்தார். இரண்யாட்சன்?அதை எங்கு எதன் மீது நின்று வராக மூர்த்தி தூக்கிமீட்டார் என்றெல்லாம் கேள்வி கேட்கப்படக் கூடாது. கேட்டால் தேசவிரோதி. இந்து விரோதி. ஆனால் மதங்களின் மீதும் அவற்றின் கடவுளர்களின் மீதும் நமக்கு விருப்போ வெறுப்போ கிடையாது.
டார்வின் கண்டுபிடிப்புப்படி மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான் என்பது உண்மையானால் ஏன் மனிதன் குரங்கில் இருந்து இன்று தோன்றவில்லை என்று அதிபுத்திசாலிகளாய் நினைத்துக் கேள்விகேட்டுக் கொண்டு திரிகிறார்கள். சரி. இன்று ஏன் மனிதர் இறைவனின் முகத்தில் இருந்தும், தோளில் இருந்தும், தொடையிலிருந்தும், பாதத்தில் இருந்தும் பிறக்கவில்லை என்று கேட்டால் பதில் என்னவோ?
புலம்பல்கள் புலம்பல்கள்
இடப்பெயர்ச்சிகள் நடந்ததற்கான சான்றுகள். குவிந்து கொண்டே உள்ளன. இதை பொறுக்க முடியாதவர்கள் தாங்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் என்று புலம்பித்திரிவது அதிகமாகிக் கொண்டே உள்ளது.
“யுரேசிய ஸ்டெப்பிப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள், அய்ரோப்பாவிலிருந்து தெற்காசியாவரை மிகப் பெரிய பிராந்தியத்தின் மக்களமைப்பைப் பெருமளவுக்கு மாற்றியமைத்ததை உறுதி செய்யும் பண்டைய டி.என்.ஏ. சான்றுகள் மலைபோலக் குவிந்துள்ள போதிலும், ஆரியர்களின் இடப்பெயர்ச்சிக் கோட்பாடு ஒரு சதித் திட்டம் என்று ஒருசிலர் கூறிக் கொண்டுதான் திரிகின்றனர். இந்தச் சதித் திட்டம் பல தலைமுறைகளுக்கு நீண்டுள்ளது, பல கண்டங்களை உள்ளடக்கியுள்ளது என்றும் அதில் பல அறிவியல் துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர்கள் புகார் கூறுகின்றனர்” என்கிறார் எழுத்தாளர் டோனி ஜோசப்.
“இனம் (Race), இன சித்தாந்தம் (Racism) மற்றும் இனவெறித்துவம் | நிறவெறித்துவம் (Racialism): கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் (Miscegenation] என்பது முன்னமே இருந்த கொள்கைதான். இனம் (Race), இனசித்தாந்தம் (Racism), மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் (Racialism] முதலியவற்றுடன். கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் சேர்ந்திருந்தன. போர்ச்சுகீசியர் தாம் சென்ற நாடுகளில், அந்தந்த நாட்டின் பெண்களுடன் புணர்ந்து. புதியதாக கலப்பினத்தவரை உண்டாக்கினர். அத்தகையோர் தமக்கு விசுவாசமாக இருப்பர் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது. அவ்வாறு உருவாக்கிய குழுமத்தை காஸ்டா (cas ta] என்று குறிப்பிட்டனர். அது பிறகு காஸ்ட் [caste) / ஜாதி என்றாகியது. போர்ச்சுகீசியர் கலப்பினத்தவரை சுத்தமானவர் / தூய்மையான இனத்தவர் என்று கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் தங்களது நிறவெறித்துவ தீவிரவாதக் கொள்கைகளை உலக யுத்தங்கள் முடிந்த பிறகு, ஹிட்லரின் மீது சுமத்த, “ஆரிய இனம்” என்று உருவாக்கி, பரப்ப ஆரம்பித்தனர். இனரீதியில், அது யூதர்களை பாதித்ததால், இனம் பொய், கட்டுக்கதை என்று மாற்றினர். பிறகு, இப்பொழுது, உலகமயமாக்கம் போன்றவற்றில் வியாபாரம் தான் முக்கியம் எனும் போது, “எல்லோரும் ஒன்று” போன்ற பொய்மை சித்தாந்தங்களை உருவாக்க, வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தான். டோனி ஜோசப் போன்ற வியாபார ஏஜெண்டுகள். “எல்லோருமே வந்தேறிகள்” என்று சித்தாந்தத்தை மாற்றியமைக்கப் பார்க்கின்றனர்.”Ó(வேதபிரகாஷ்15-07-2019https://vedaprakash.files. wordpress.com/2022/09/t-s-subramanian-frontline. book-lauched.jpg)
ஏன் இந்த எரிச்சல்? தமது வர்ணப் பெருமைகள் – சமூகத்தில் தாம் செலுத்தி வந்த ஆதிக்கம் எல்லாம் பொய். கடைந்தெடுத்த பொய். இந்தப் பொய்களின் மீது அமர்ந்து தாம் வாழ்ந்த பரம்பரிய வாழ்க்கை முடிவுக்கு வருகிறதே என்ற வயிற்றெரிச்சல் தான்.’ நாமா இதற்குக் காரணம்! அறிவியலே இதற்குக் காரணம். எந்த மந்திர தந்திரங் களாலும் இந்த அறிவியலை அழிக்க முடியாது. மாபெரும் புரட்சிகளை DNA ஆய்வுகள் தரப்போகின்றன. வேண்டுமானால் காலப்போக்கில் உங்கள் புனித நூல்களில் இருந்து இந்த அறிவியல் திருடப்பட்டது என்று சொல்லிக் கொள்ளலாம்.
அர்த்த சாத்திரம் 9 ஆம் அத்தியாயம் சொல்கிறது, “மிகச்சிறந்த குலத்தில் பிறந்தவன், உத்தம குணங்கள் கொண்டவன், ஆறு அங்கங்களைக் கொண்ட வேதங்களை நன்கு ஓதியுணர்ந்தவன், தெய்வம் முன் கூட்டிக் காட்டும் சூசகங்களையும் சகுனங்களையும் நன்கு அறிந்தவன், தண்ட நீதி சாத்திரத்தை நன்கு அறிந்தவன், தெய்வத்தால் வழிபடும் ஆபத்துக்களில் இருந்தும் மனிதர்களால் விளைவிக்கப்படும் ஆபத்துக்களில் இருந்தும் வேதமந்திரங்களை பிரயோகிக்கும் நிறன் கொண்டவன், மற்ற உபாயங்களாலும் காக்கக்கூடியவன் – இத்தன்மைகளைக் கொண்டவனைப் புரோகிதனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மன்னன் அப்புரோகிதனிடத்தில் தந்தையிடம் பிள்ளை போன்றும், எஜமானனிடம் வேலையாள் போன்றும் பணிவுடன் அனுசரித்து நடக்க வேண்டும்.”
ஆக இப்புரோகிதன் கடவுளை விட, நாடாளும் அசரனை விட உயர்ந்தவனாகச் கொண்டாடப்பட வேண்டியன். அதனால் தான் இக்குலத்தோரின் பேச்சுக்கு மறு பேச்சில்லையோ! இதனை நாமும் கடைப்பிடித்து வாய்மூடி வாழவேண்டும்!இதைத் தான் இந்த தெய்வப்பிறவிகளும் அவர்களின் எடுபிடிகளும் நீட்டி முழங்கித் திரிகிறார்கள் சனாதனதாமம்” என்று நீட்டி முழங்குவதன் பின்னால் இவை இல்லை என்றால் தீண்டத்தகாதவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று exclustveness எதற்கு இவர்கள் நீட்டி முழங்கும் வசுதைவ குடும்பத்தில் இதற்குத்தான் inclusiveness என்று பொருளோ?
பெரியார்
இங்கே பெரியார் சொன்னதை நினைவு கூர வேண்டியுள்ளது. நான் சொல்வதை நம்பு இல்லாவிட்டால் பாவம் என்று நான் சொல்லவில்லை, எதிலும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நாடு முன்னேற்றம் அடையுமேயன்றி, என்னுடைய பாட்டன். முப்பாட்டன் போனவழியில் தான் போகிறேன், என்ற மூடக் கொள்கையினால் நாடு நாளுக்கு நாள் நாசமடைவது திண்ணம். என் புத்திக்கு எட்டியதை எடுத்துக் காட்டினேன், அதில் சரியெனத் தோன்றியதை ஒப்புக் கொண்டு அதன்படி நடக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நான் சொல்வதிலும் பிசகிருந்தால் என் அறியாமைக்குப் பரிதாபப்படும் படி கேட்டுக் கொள்கின்றேன்.
மற்றபடி நான் கேட்காவிட்டால் நரகம் நிச்சயம் என்றோ, கேட்டால் சொர்க்கம் நிச்சயம் என்றோ பெரியார் சொல்லவில்லை. அவர் ஒரு சுயமரியாதைக் காரர். அவரைப் பொறுத்தவரை மனிதர் அனைவருக்கும் சுயமரியாதை, சமூகநீதி, சமதர்மம் என்பதே முதன்மை: மக்கள் தொகை மரபியல் துறை”பெரியார் சொன்ன இனி வரும் உலகம் கருத்துக்களுக்கு சான்றாகிறது எனலாம்.
(நன்றி: காக்கைச் சிறகினிலே, ஜூலை 2023)