கேள்வி 1: கொஞ்சம் விட்டால் நம் மக்கள் மைல் கல்லுக்கு ‘மைலேஸ்வரன்’ என்று பெயர் வைத்து கும்பிட ஆரம்பித்து விடுவார்கள் என்று தந்தை பெரியார் தொலைநோக்குப் பார்வையோடு அன்றே சொன்னது, தற்போது வேடசந்தூரில், திண்டுக்கல் சாலையில் இருக்கும் மைல் கல்லுக்கு நெடுஞ்சாலைத் துறையினர் சந்தனம், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வாழைக் கன்றுகளைக் கட்டி ஆயுதபூஜை கொண்டாடியது நினைவுக்கு வருகிறது அல்லவா?
– செல்விபாபு, மதுரை.
பதில் 1: திண்டுக்கல் வேடசந்தூரில் யாரோ ஒரு விவசாயிதான் அப்படி நடப்பதற்குக் காரணம் – நெடுஞ்சாலைத் துறையினர் அல்ல என்றும் கூறப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகரிகள் இவ்வளவு கீழிறக்கத்திற்குச் சென்றிருக்க முடியாது!
என்றாலும், இதுபோன்ற கேலிக் கூத்து இனி நடைபெறாமல் பார்க்க வேண்டியது அத்துறையின் அதிகாரிகளின் பொறுப்பாகும்.
– – – – –
கேள்வி 2: அவ்வப்போது நடைபாதைகளிலும், அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் ஒரு சிலரால் கோயில்கள் கட்டப்படுகின்ற நிலையில், தாங்கள் அதனைக் கண்டித்து ‘விடுதலை’ நாளேட்டில் ஒளிப்படங்களுடன் பெட்டிச் செய்தியாக வெளியிடுவதும், அரசு அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதும் வழமையாக உள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?
– எஸ். பத்ரா, வந்தவாசி.
பதில் 2: அப்படி கோயில்கட்டி பிழைப்பு நடத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கூடிய சட்டத்திருத்தங்களும் – முன்கூட்டியே கண்காணிக்கும் காவல் உளவுத் துறையின் கடமையுமே தீர்வு.
– – – – –
கேள்வி 3: ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என்று மேனாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது அல்லவா?
– அங்காளம்மாள், திருவொற்றியூர்.
பதில் 3: அவரது உளறல்களுக்கெல்லாம் நாம் நமது நேரத்தைச் செலவழிக்கவேண்டாம். பதவி இல்லாமை – தொடர் தோல்வியின் விரக்தியின் விளைவு – இதெல்லாம்!
– – – – –
கேள்வி 4: மக்களிடத்தில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டிய ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் பொறுப்பில் உள்ளோர் மூட நம்பிக்கையை வளர்க்கின்ற வகையிலும், அதனை ஊக்குவிக்கும் வகையிலும் செயல்படுவது சரியா?
– அலமேலு, சென்னை
பதில் 4: என்ன செய்வது? படிப்பு வேறு, பதவி வேறு; பகுத்தறிவு வேறு என்பதற்கு சரியான அடையாளமே இது!
– – – – –
கேள்வி 5: பணி ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளிலும், அவர்களின் நடவடிக் கைகளிலும் தடுமாற்றமும், தடம் மாற்றமும் காணப்படுகிறதே கடந்த பல ஆண்டுகளாக?
– மன்னை சித்து , மன்னார்குடி – 1
பதில் 5: ‘அதற்கும் மேலே’ என்ற நப்பாசை கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். யாம் அறியோம்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்பு (அயோத்தி இராமர் கோயில் தீர்ப்பு வழங்கியவர்) மாநிலங்களவையில் இடம் பெற்றதுதான் நமது நினைவுக்கு வருகிறது!
– – – – –
கேள்வி 6: சுயமரியாதைத் திருமணச் சட்டம் என்பது ஹிந்து மதத்தினருக்கு மட்டுமே பொருந்துகிறது. மதமறுப்புத் திருமணங்களையும் சுயமரியாதைத் திருமண சட்டத்தின்கீழ் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே. அதை ‘திராவிட மாடல்’ அரசு கொண்டுவர முயற்சிக்கலாமே?
– அப்பாஸ், ராஜகம்பீரம்
பதில் 6: அதை ‘திராவிட மாடல்’ அரசு கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல; ஏற்கெனவே தனி திருமணச் சட்டப்படி (Special Marriage Act)செய்ய வாய்ப்புண்டு.
காலம் மாறும்: அப்போது சட்டங்கள் தானே வந்து கதவைத் தட்டும்!
– – – – –
கேள்வி 7: அமலாக்கத் துறையின் தன்னிச்சையான நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் கூட பலமுறை கண்டித்துள்ள போதும், அத்துறையின் அத்துமீறிய செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமைக்கு அடிப்படைக் காரணம் என்ன?
– க.அரசு, மாதவரம்
பதில் 7: அரசியல்! அரசியல்!! தான் என்றே தோன்றுகிறது.
– – – – –
கேள்வி 8: கேரளாவில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு மூன்று மாதங்களாகியும், அப்பகுதி மக்களின் மறுவாழ்வுக்கு நிதி வழங்காது புறக்கணித்து வரும் ஒன்றிய மோடி அரசின் நிலைப்பாடு பற்றி தங்கள் கருத்து என்ன?
– அ.லாசர், கவுதமபுரம், சென்னை
பதில் 8: மாநிலமா? எதிர்க்கட்சி ஆளுகிறதா? என்ற ஓரவஞ்சனை – பழிவாங்கும் போக்கே மூல காரணமாக இருக்கும்!
– – – – –
கேள்வி 9: ஒவ்வொரு ஆண்டும்
தீபாவ(லி)ளிக் கொண்டாட்டம் என்பது சுற்றுச்சூழலை மேலும் மேலும் பாழ்படுத்திக் கொண்டே வருகிறதே. இதைத் தவிர்க்க ஏதாவது வழி உண்டா?
– திவ்யபாரதி, சென்னை
பதில் 9: சட்டத்தைவிட, பகுத்தறிவுப் பிரச்சாரம் – மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதலே அவசியம்.
– – – – –
கேள்வி 10: தீபாவளி, ஆயுத பூஜை போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்தாலும் மக்களிடையே எடுபடாமல் போகிறதே?
– ஆ.அன்பரசு, சைதை
பதில் 10: அது எடுபடும் காலமும் வரும்; நம் பணியில் நாம் ஓயக்கூடாது.
அறிவும், விழாவும் இணைந்த ஒன்றே ஒன்று பொங்கல் என்ற திராவிடர் திருவிழாதான்.
மற்றவை – தொற்று நோய்கள். மருத்துவம் மெதுவாகவே வேலை செய்யும். தொற்று வேகமாகப் பரவும். அதற்காக மருத்துவர்கள் தோல்வி அடைந்தனர் என்று தீர்ப்பு எழுத முடியுமா?