சென்னை, நவ.2 ஒன்றிய அரசின் ஓய்வூதியதாரா்கள், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்களுக்கு அஞ்சல் ஊழியா் மூலம் வீடுதேடி வந்து எண்ம (டிஜிட்டல்) உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்படும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அஞ்சலகக் கோட்டம் சார்பில் நேற்று (2.11.2024) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஒன்றிய அரசு ஓய்வூதியதாரா்கள், தொழிலாளா் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரா்கள், மாநில அரசின் ஓய்வூதியதாரா்கள், ராணுவ ஓய்வூதியதாரா்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரா்கள் நவம்பா் 1-ஆம் தேதி முதல் தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஓய்வூதியதாரா்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை அஞ்சல் துறை ஊழியா் மூலம் சமா்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வூதியதாரா்கள் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் ஊழியா் மூலம் பயோமெட்ரிக் அல்லது பேஸ்ஆா்டி முறையைப் பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.70-அய் அஞ்சல் ஊழியரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி அஞ்சல் ஊழியரிடம் ஆதார் எண், கைப்பேசி எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதியக் கணக்கு விவரங்களைத் தெரிவித்து, கைவிரல் ரேகையைப் பதிவு செய்தால் ஒரு சில நிமிஷங்களிலேயே உயிர்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும். இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரா்கள் அருகிலுள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி அஞ்சல் ஊழியரைத் தொடா்புகொள்ளலாம். இந்த சேவையை வழங்க விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த வசதியைப் பயன்படுத்தி அனைத்து ஓய்வூதியதாரா்களும் வீட்டிலிருந்தபடியே தங்கள் பகுதி அஞ்சல்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமா்ப்பித்து பயன்பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளார்.