திருமணத்திற்காக ரூ. 50 கோடி வரதட் சணையை எய்ம்ஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற ஒரு மருத்துவர் கேட்டுள்ள நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் வரதட்சணை சட்டவிரோதமாக இருந்த போதிலும் மறைமுகமாக இன்றும் கொடூரமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
நன்கு படித்து வெளித்தோற்றத்தில் மதிப் பானவர்களைப் போல் தோற்றமளிப்பவர்கள் கூட வரதட்சணை வாங்குவதை இன்னும் பின்பற்றும் சூழலே நிலவுகிறது. தெலங்கானா வில் ஒரு நிகழ்வு இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடந்துள்ளது.
அய்தராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நிபுணராக இருக்கும் பெண் மருத்துவருக்கு அதே துறையைச் சேர்ந்தவரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
இதனை அடுத்து எய்ம்ஸ் மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவரோ தனக்கு வரதட் சணையாக ரூ.50 கோடி வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அவர் எய்ம்ஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வந்தவர். இது தொடர்பாக மற்றொரு பெண் மருத்துவர் கூறும் போது, அவர் இதே போன்று தனது சக தோழிக்கு மாப்பிள்ளை பார்த்த போதும் கோடிக்கணக்கான ரூபாய் வரதட்சணை கேட்டதாகவும் – தங்களது கல்வியை இப்படி கோடிக்கணக்கான ரூபாய் வரதட்சணை வாங்குவதற்கு பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வரதட்சணைக்காக அந்தப் பெண் மருத்துவரின் பெற்றோர் தங்களது ஒட்டு மொத்த வாழ்நாள் சேமிப்பையும் கொடுக்க வேண்டி இருப்பதாகவும், அவர்களுக்கு மற்றொரு மகளும் இருப்பதாகவும் கூறி யுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது சமூகவலைதள பக்கங்களில் பேசுபொருளாகி பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவர் ஒரு மருத்துவர்; சொந்தக் காலில் நிற்க திராணி இல்லாமல் இப்படி, வரதட்சணையை நம்பி இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சமூகவலைதளங்களில், ‘‘இப்போதெல்லாம் பல கோடி ரூபாயை கொட்டி படிக்கவேண்டி உள்ளது, வாழ்நாள் முழுவதும் வேலை பார்த்தால் கூட அதை சம்பாதிக்க முடியாது. ஆகையால் வரும் மனைவியின் மூலம் வரதட்சணையாக வரும் பணத்தில் ஈடுகட்டப் பார்க்கின்றனர் – இதில் தவறு ஒன்றும் இல்லை. ரூ.50 கோடி வாங்கினாலும் கணவன் மனைவி இருவரும் தானே அதை அனுபவிப்பார்கள்’’ என்றும் கூறி ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட மருத்துவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
வரதட்சணை கேட்பது சட்டப்படி குற்றமே! வரதட்சணை கேட்பவராக இருந்தாலும், அப்படிக் கேட்பவர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களும், கருத்துத் தெரிவிப்பவர்களும் குற்றவாளிகளே!
அதிக செலவு செய்து படிக்கிறார்களாம். அதனால் மனைவி மூலம் வரதட்சணைத் தொகையைப் பெறுகிறார்களாம்!
அப்படிப் பார்க்கப் போனாலும் அந்தப் பெண்ணும் மருத்துவர்தானே, அவரும் அதிகம் செலவு செய்து தானே படித்து மருத்துவராகி யிருக்கிறார். அதை வசதியாக மறைப்பது ஏன்?
எல்லாவற்றையும்விட பெண் என்றால் அடகு பொருளா? திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும்தானே! பெண் வீட்டார் மட்டும் ஏன் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழாதா?
பெண் என்றால் ஆணுக்கு அடிமை என்ற மனவியாதிதான் இதற்குள் அடங்கியிருக்கிறது!
ரூ.50 கோடி வரதட்சணை கேட்ட மருத் துவர் மீதும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆசாமிகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை அவசியமாகும்.
இது ஒரு பாடமாக மற்ற ஆண்களுக்கும் அமையட்டும்!