காரைக்குடியில் நடைபெற்ற குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை

Viduthalai
8 Min Read

தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமக்கென வாழாதவர் – தொண்டின் உருவமாக விளங்குகிறவர்!
எங்களை இணைப்பது தொண்டு – எங்களை இணைப்பது கொள்கை – எங்களை இணைப்பது சமத்துவம்!
எங்களைப் பிரிப்பது குலதர்மம் – இணைப்பது சமதர்மம்!

காரைக்குடி, அக்.30 தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமக்கென வாழாதவர் – தொண்டின் உருவமாக விளங்கு கிறவர். எனவே, எங்களை இணைப்பது தொண்டு – எங்களை இணைப்பது கொள்கை – எங்களை இணைப்பது சமத்துவம்; எங்களைப் பிரிப்பது குலதர்மம் – இணைப்பது சமதர்மம் என்று தந்தை பெரியார் சொன்னதை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா
கடந்த 31.8.2024 அன்று காரைக்குடியில் நடைபெற்ற குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில்,- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அந்தப் பாசம் என்பது வெறும் வரவேற்போடு முற்றுப் பெறுவதல்ல நண்பர்களே! வேறு எந்த மடத்திற்குச் சென்றிருந்தாலும், சமத்துவமாக உட்கார்ந்து, அந்த இடத்திலே பேசக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்குமா?

கொள்கைப் பசியைத் தீர்த்தார்- மக்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபணம் செய்தார்!
வேறு எந்த மடத்திற்குச் சென்றிருந்தாலும், ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவிற்குரிய நிலைமை இருக்கின்றதா? அடிகளாரும் உணவு சாப்பிட எங்களோடு அமர்ந்தார் என்பது இருக்கிறதே, அது வெறும் உணவு மட்டுமல்ல – காலங்காலமாக இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, சம்பிரதாயத்தின் பெயரால், சடங்குகளின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் அல்ல; இந்த மடம் என்பது சமத்துவத்திற்கான ஒரு கேந்திரம் என்பதை காட்டுவதற்காக, அடிகளார் எங்களுடைய கொள்கைப் பசியைத் தீர்த்தார்.
வெறும் வயிற்றுப் பசியைத் தீர்த்தார் என்று சொல்ல முடியாது. கொள்கைப் பசியைத் தீர்த்தார். மக்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபணம் செய்தார்.

தந்தை பெரியார் சொன்னார், ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்று சொன்னார்.
அழகு என்றால் என்ன?
பல பேருக்கு அழகு என்றால், புறத்தோற்றம்தான் என்று நினைப்பார்கள். அல்ல நண்பர்களே, மானமும் அறிவும்தான் ஒருவருக்கு அழகு.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஏன் பெரியார் இடத்தில் ஈர்க்கப்பட்டார் என்றால், இரண்டு செய்திகளைச் சொல்லவேண்டும்.
அழகு என்று சொல்லும்பொழுது, அழகுசார் நிலையத்திற்குப் போவது தவறில்லை. உடல் அழகு என்பது வயது ஏற, ஏற அது மாறும்.
என்னைப் பார்த்து நண்பர்கள் சொல்வார்கள், ‘‘கருகரு என்று எவ்வளவு முடி இருந்தது” என்று.
ஆனால், மானமும், அறிவும் என்று சொல்லக்கூடிய இரண்டும் அவை வளர்ந்துகொண்டே போகும். குறைந்து கொண்டே போகாது; அது வெளுக்காது- அது என்றைக்கும் கருப்பாகவே இருக்கும்.

மனிதர்களுக்குள்ளே ஏன் பிறவி பேதம்?
ஜாதி என்று சொல்லுகின்ற நேரத்தில், நூற்றாண்டு விழா நாயகர் அடிகளார் அவர்கள் துடித்தார். இங்கே நம்முடைய அருமைச் சகோதரர் தென்னவன் அவர்கள், சொன்னார்கள்.
இன்றைக்கு ஜாதியைக் கட்டிக் காப்பதற்காகவே அமைப்புகள் இருக்கின்றன!
இந்த நாட்டில் ஜாதி ஒழிக என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்; ஜாதி இருக்கவேண்டும் என்று நியாயம் பேசுகிறவர்களும் இப்பொழுது இருக்கிறார்கள். அவர்களுடைய அமைப்புகளும் இருக்கின்றன. அதைக் கட்டிக் காப்பதற்காகவே புதிய புதிய வாய்ப்புகளும் இருக்கின்றன.
அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், ஜாதிய
ஒழிப்பு என்பதற்காக பிரச்சாரத்தை மய்யப்படுத்தி, ஜாதிகள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அடிகளார் வந்தார்கள்.
இந்தத் துணிச்சல் அடிகளாரைத் தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது.

‘‘தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிவுப் பெட்டகம்!’’ புத்தகம்
அதனால்தான், அடிகளாரைப்பற்றி மற்றவர்களும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே ‘‘தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிவுப் பெட்டகம்” புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறோம். தயவு செய்து அந்தப் புத்தகத்தை நீங்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கவேண்டும்.
அந்தப் புத்தகத்தில் உள்ளவை நம்முடைய வார்த்தைகள் அல்ல; அடிகளாரின் கருத்து – பேச்சுதான்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்பது மட்டுமல்ல, அய்யா தந்தை பெரியார் அவர்கள், எப்படி நம்மவர்களை மதிப்பது – அவர்கள் பெற்றிருக்கக் கூடிய இடத்தை எப்படி சிறப்புப்படுத்துவது என்று நினைத்தார்.
அதைத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். தமிழருக்கு இருக்கின்ற புத்தி, யாரையும் பாராட்டத் தெரியாது. பாராட்டுகிறவனை சகிக்கவும் மாட்டார்கள். அவனுடைய காலை இழுக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நிலையில், தந்தை பெரியார் அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்; சிறப்பாக, தெளிவாக அந்தப் பாடத்தை உணர்ந்தவர்கள் நாம்.

இங்கே வெளியிடப்பட்ட புத்தகத்தில், படங்களையும் வெளியிட்டு சிலவற்றைப் பதிவு செய்திருக்கின்றோம்.
அதிலுள்ள ஒரு படம், அடிகளார் அவர்கள், தந்தை பெரியார் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துகிறார். அப்படி, அவர் பொன்னாடை போர்த்தும்பொழுது, பெரியார் அவர்கள் எப்படி குனிந்து வாங்குகிறார் என்பதைத் தெளிவாக அந்தப் படத்தில் நீங்கள் எல்லாம் பார்க்கலாம்.
இது எவ்வளவு பெரிய விஷயம்! சாதாரணமானதல்ல. ஏனென்றால், இது இரண்டு நபர்களுக்கிடையே உள்ள பிரச்சினையல்ல; இரண்டு தத்துவங்கள்.

நம்மவர்களைத் தோளில் தூக்கி உயரமாகக் காட்டுங்கள்; பெருமைப்படுத்துங்கள்!
நம்மவர்களை, தோளில் தூக்கிக் காட்டவேண்டும். பெரியாருக்கு என்ன பழக்கம் என்றால், ‘‘இந்த சமுதாயம் வளரவேண்டுமானால், முன்னேறவேண்டுமானால், நம்மவர்களைத் தோளில் தூக்கி உயரமாகக் காட்டுங்கள்; பெருமைப்படுத்துங்கள்; அவர்களை சாதாரணமாக நினைக்காதீர்கள். நாம் எப்படி மரியாதை காட்டுகிறோமோ, அதை வைத்துத்தான் இந்த இனத்திற்கு மரியாதை” என்பார்.
எங்கள் அமைச்சர், எங்களுக்கு நெருக்கம்தான். ஆனால், மாண்புமிகு அமைச்சர் என்று வரும்பொழுது, அவருக்கு உரிய இடத்தை நான் கொடுத்தாக வேண்டும்.

பல இடங்களில் பூட்டுறவு உண்டு; எங்களிடையே உள்ளது கூட்டுறவு!
இன்னும் சிறப்பு இந்த மேடைக்கு என்னவென்றால், கூட்டுறவு. இந்தக் கூட்டுறவினால்தான், இந்தக் கூட்டமே!
எங்கள் உறவு எப்பொழுதுமே கூட்டுறவுதான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை. பல இடங்களில் பூட்டுறவு உண்டு; எங்களிடையே உள்ளது கூட்டுறவு.
அடிகளார் அவர்கள் சொன்னார்,
‘‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”
அந்தப் பண்பு மிக முக்கியமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், ஒரு செய்தியை இங்கே குறிப்பிடவேண்டும்.
எப்படி மதிக்கவேண்டும் என்பதற்கு எங்க ளுக்கெல்லாம் பாடம் எடுத்தார், 50 ஆண்டுகளுக்கு முன்பு. இந்த நூலின் தொகுப்புரையில் அவற்றை யெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறோம்.
தந்தை பெரியார் சென்னை பெரியார் திடலில் 1962 ஆம் ஆண்டு ஒரு மாநாடு நடத்துகிறார்.

மாநாட்டுப் பணி நடக்கவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் வந்து அமர்ந்திருக்கிறார். அவர் சொல்கின்ற பணிகளை நாங்கள் செய்துகொண்டிருந்தோம். எல்லாவற்றையும் அய்யா அவர்களே நேரில் கண்காணிப்பார். ஏனென்றால், அதிகமாக செலவு செய்துவிடப் போகிறோம்; சிக்கனமாக செலவு செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.
சென்னை பெரியார் திடலில் வாக்காளர் மாநாடு நடத்த பெரியார் திட்டமிட்டிருந்தார். மாநாட்டிற்குத் தலைமை ஏற்க அடிகளாரை அழைத்தார்கள். அது குறித்து ‘விடுதலை’யில் அறிவிப்பு வெளியிட அய்யா கைப்பட வாசகங்களை என்னிடம் எழுதித் தந்தார்கள். அந்த வாசகத்தைப் படித்துப் பாருங்கள் – அடிகளார் மீது அய்யா கொண்டிருந்த மதிப்பு புலப்படும்.

‘விடுதலை’யில் வெளிவந்த பெட்டிச் செய்தி!
‘சென்னை மாநாட்டுச் செய்தி ‘ என்று தலைப்பிட்டு முதல் பக்கத்தில் பெட்டிச் செய்தியாக வெளியிடப்பட்டது. அதில் இருந்த வாசகம்:
“தவத்திரு குன்றக்குடி அடிகளார் சன்னிதானத்தை 07.01.1962 ஆம் தேதி நடக்கும் ஓட்டர்கள் மாநாட்டு பிரதம ஸ்தானத்தை ஏற்றுக் கொள்ள பிரார்த்தனை செய்யப்பட்டு இருக்கிறது.”
அய்யா எழுதிக் கொடுத்த வாசகத்தை வாசித்த பெரியாரின் தனிச்செயலர் புலவர் இமயவரம்பன் வியப்படைந்தார். சிறிது தயக்கம் கொண்டார். வெளி யிடலாமா? என்பதை உறுதிப்படுத்த அய்யாவிடம் கேட்டார்.
‘ஆமாம்! நான் எழுதிக் கொடுத்ததை அப்படியே வெளியிடுங்கள்’ என்று கூறினார் அய்யா. அந்த அள விற்கு அடிகளார் மீது அய்யா மரியாதை வைத்திருந்தார்.
என்னிடம் கொண்டு வந்து அந்தச் செய்தியை கொடுத்தார் புலவர் இமயவரம்பன் அவர்கள்.

சிந்திக்கவேண்டியது பெரியார் – செயல்படவேண்டியது
அவருடைய தொண்டர்கள்!
‘‘அய்யா அவர்கள் என்ன சொல்கிறாரோ, அதைச் செய்யவேண்டியதுதான் நாம். சிந்திக்கவேண்டியது பெரியார் – செயல்படவேண்டியது அவருடைய தொண்டர்கள்.
நமக்கொன்றும் சொந்தமாக சிந்திக்கவேண்டிய வேலையில்லை” என்று நான் புலவர் இமயவரம்பன் அவர்களிடம் சொன்னேன்.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், தந்தை பெரியாரும் சேர்ந்திருந்தார்களோ அந்தக் காலத்தில். அதுபோல, இப்பொழுது, பொன்னம்பல அடிகளாரும், நாங்களும் ஒன்றாக இருக்கிறோமே என்று சிலர் நினைக்கலாம்.
தென்னவன் அவர்கள் இங்கே அழகாகவும் சுருக்கமாகவும் ஒரு வார்த்தை சொன்னார், ‘‘வேற்றாரும், மாற்றாரும் எப்படி நடந்தார்கள்?” என்று.
வேற்றாருக்கு எச்சரிக்கை, மாற்றாருக்கு அறிவுப் பாடம் – உற்றாருக்கு, உறவு, நெருக்கம்தான் இந்த நிகழ்ச்சி.
அடிகளாரைப்பற்றி தந்தை பெரியார் சொல்கிறார் கேளுங்கள்:
‘‘பெருமைக்கும், மரியாதைக்கும் உரிய அடிகளார் அவர்களே! பேரன்புள்ள தாய்மார்களே, தோழர்களே, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமுவந்த நன்றி!
இன்றைக்கு எனக்கு பொன்னாடையும், பொற்பதமும் அளிக்கப்பட்டது அடிகளார் அவர்களால். அது எனக்குப் பெருமை அளிக்கிறது; லாபமும் அளிக்கக் கூடியது மட்டுமல்ல.

அடிகளார் தமக்கென வாழாதவர் –
தொண்டின் உருவமாக விளங்குகிறவர்!
முதலாவதாக, சாமிகளுடைய தலைமையும், ஆசியுமே லாபமும், பெருமையும் தருவதாகும். எங்கள் இருவருக்கும் ஏதாவது கருத்து வேற்றுமை இருக்கக்கூடும் என்று பலர் கருதுகிறார்கள். உண்மையில் எங்கள் இருவருக்கும் கருத்து வேற்றுமை இருக்கவேண்டிய அவசியமில்லை. அன்றும் – இன்றும் – என்றும்!
தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமக்கென வாழாதவர். தொண்டின் உருவமாக விளங்கு கிறவர்கள். எனவே, எங்களை இணைப்பது தொண்டு – எங்களை இணைப்பது கொள்கை – எங்களை இணைப்பது சமத்துவம்; எங்க ளைப் பிரிப்பது குலதர்மம் – இணைப்பது சமதர்மம் என்பதை மிகத்தெளிவாக எடுத்துச் சொல்லி யிருக்கிறார்.
அடிகளாரைத்தான் பல நேரங்களில் மிக முக்கிய பொறுப்பேற்கும்படி செய்தார் தந்தை பெரியார் அவர்கள். மாநாட்டுத் திறப்பு விழாவிற்கு அப்படி எழுதினார்.

‘விடுதலை’க்குப் புதிய பணிமனை!
‘விடுதலை’க்குப் புதிய பணிமனையைத் திறந்து வைத்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான்.
அதற்கு முன்பு அண்ணா அவர்கள் காலத்திலிருந்து, நான் பொறுப்பேற்ற காலமான 62 ஆண்டுகாலத்திற்கு முன்பு ‘விடுதலை’க்குப் பழைய அலுவலகம் இருந்தது தேவகோட்டையைச் சேர்ந்த நகரத்தார் ஒருவரின் இடத்தில்தான். வாடகை செலுத்தித்தான் நீண்ட காலமாக அங்கே இருந்தார். நாற்காலிகளில் ஒரு கால் இருக்காது. அதில் தந்தை பெரியார்கூட அமர்ந்து எழுதுவார். அதற்குப் பிறகுதான், புதிய இடம் வாங்கப்பட்டு, ‘விடுதலை’ பணிமனைக்காக கட்ட டங்கள் கட்டப்பட்டன.

‘விடுதலை’ பணிமனையை திறக்கப்போவது யார்?
அப்பணிகள் முடிவுற்றவுடன், ‘விடுதலை’ பணிமனையை திறக்கப்போவது யார்? என்று தந்தை பெரியார் அவர்களிடம் கேட்டோம்.
திறப்பு விழா செய்யவேண்டுமா? அதற்காக செலவாகுமே? என்றார் அய்யா.
விளம்பரப்படுத்துவதற்காக அதனைச் செய்ய வேண்டும் என்றோம் நாங்கள். அன்னை மணியம்மையார் அவர்களும், ‘‘வீரமணி சொல்வது சரிதான்; புதிய இடத்திற்கு ‘விடுதலை’ அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது என்று எல்லோருக்கும் தெரியவேண்டும் அல்லவா?” என்றார்.
உடனே அய்யா அவர்கள், ‘‘தவத்திரு அடிகளாரை அழைத்துத் திறக்கவேண்டும்” என்றார்.
இன்றைக்கு ‘விடுதலை’ அலுவலகம் இருக்கும் இடத்தைத் திறந்து வைத்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்தான்.

(தொடரும்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *