சென்னை, அக். 30- கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தை பெருநிறுவன நிதியுதவி மூலம் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளது. மற்றபடி, இந்த மருத்துவமனை தனியாருக்கு தாரை வார்க்கப்பட மாட்டாது. தன்னார்வலா்களுக்கு தத்து கொடுக்கப்படவும் மாட்டாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தீக்காய சிகிச்சைப்பிரிவு: முன்னதாக, தீபாவளியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.
இந்த வார்டில் ஆண்களுக்கு 12 படுக்கைகள், பெண்களுக்கு 8 படுக்கைகள், குழந்தைகளுக்கு 5 படுக்கைகள் என மொத்தம் 25 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் ஒருபகுதியாக பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது தொடா்பாக தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவக் கல்லூரி மாணவா் களின் விழிப்புணா்வு நாடகமும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மருத்துவமனை முதல்வா் டாக்டா் லியோ டேவிட், தீக்காய சிகிச்சை பிரிவு துறைத் தலைவா் டாக்டா் நெல்லையப்பா், மருத்துவமனை கண் காணிப்பாளா் டாக்டா் பாஸ்கரன், நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் வாணி, அண்ணாநகா் தொகுதி சட்டப் பேரவை எம்.கே.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.