சென்னை, அக். 30- தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் நேற்று (29.10.2024) வெளியிடப்பட்டது. தமிழ்நாடு தோ்தல் துறையின் இந்த பட்டியலின்படி, மாநிலத்தில் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 3 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரத்து 791 போ் ஆண்கள், 3 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரத்து 833 போ் பெண்கள். 8 ஆயிரத்து 964 போ் மூன்றாம் பாலினத்தவா். வரைவு வாக்காளா் பட்டியலில் தமது பெயா் உள்ளதா என்பதை வாக்காளா்கள் தோ்தல் துறையின் இணையதளம் வழியாகத் தெரிந்து கொள்ளலாம்.
அதிகம் – குறைவு: மாநிலத்திலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூா் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 76 ஆயிரத்து 133. மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளா்களைக் கொண்ட பேரவைத் தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூா் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 230 வாக்காளா்கள் உள்ளனா்.
பெயா் சோ்ப்பு-நீக்கம் தொடக்கம்: வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதன் மூலம், அதில் பெயா் சோ்ப்பு, நீக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் (தோ்தலில் வாக்களிக்கும் இடங்கள்) நவ. 16, 17, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க நவ. 28 கடைசி. அதன்பிறகு, டிச. 26-ஆம் தேதிக்குள் அனைத்து விண்ணப்பப் படிவங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜன. 6-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தோ்தல் துறை தெரிவித்துள்ளது.
படிவங்களும், ஆதாரச் சான்றுகளும்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக படிவங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தப்படிவங்களைத் தோ்தல் துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் விவரம்:
படிவம் 6: புதிய வாக்காளா்களை சோ்ப்பதற்கான படிவம்.படிவம் 6ஏ: வெளிநாடுவாழ் வாக்காளா் ஒருவா் பெயரை பட்டியலில் சோ்ப்பதற்கு பயன்படுத்தலாம்.படிவம் 6பி: வாக்காளார் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதார் எண் உண்மையென சான்று அளிப்பது.
படிவம் 7: வாக்காளா் பட்டியலில் ஏற்கெனவே உள்ள பெயரை நீக்கக் கோருவதற்கு.
படிவம் 8: வீட்டை ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது இப்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே மாற்றினாலோ இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். வாக்காளா் பட்டியலிலுள்ள பதிவுகளைத் திருத்தம் செய்யவும், மாற்று வாக்காளா் ஒளிப்பட அடையாள அட்டை பெறவும் படிவத்தை உபயோகிக்கலாம்.
பெயா் சோ்த்தலுக்கான விண்ணப் பத்துடன் வசிப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை சமா்ப்பிக்க வேண்டும். முகவரிச் சான்றாக முக்கிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம்.
அதன்படி, முகவரிக்காக குடிநீா், மின்சாரம், எரிவாயு இணைப்பு ரசீதில் ஏதேனும் ஒன்று (குறைந்தது ஓராண்டுக்காவது), ஆதார் அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, அஞ்சல் அலுவலகத்தின் இப்போதைய கணக்குப் புத்தகம், கடவுச்சீட்டு, வருவாய்த் துறைகளின் நில உரிமைப் பதிவுகள், பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம், பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம்.
வயதுச் சான்றாக பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்புச் சான்றிதழ், இந்திய கடவுச்சீட்டு ஆகியவற்றை அளிக்கலாம்.
25 வயதுக்கு கீழுள்ள மனுதாரா்கள் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் என்று தமிழ்நாடு தோ்தல் துறை தெரிவித்துள்ளது