சென்னை, அக். 29- மார்பகப் புற்றுநோய் ஒழிப்புக்காக 250 பெண்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
காவேரி மருத்துவமனை மற்றும் பெண்கள் மோட்டார் ஸ்போர்ட் கிளப் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணா்வு பேரணி வடபழனி காவேரி மருத்துவமனையிலிருந்து தொடங்கி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நிறைவு பெற்றது.
ஒய்எம்சிஏ மைதானத்தில் 250 இரு சக்கர வாகனங்களும் மார்பகப் புற்றுநோய் ஒழிப்பை வலியுறுத்தும் இளஞ்சிவப்பு சுருள் (பிங்க் ரிப்பன்) வடிவத்தில் நிறுத்தப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து இந்நிகழ்வு ஆசிய சாதனை புத்தகத்திலும், இந்திய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றதாக விழா ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
இதில் பங்கேற்ற பெண்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்வில், மக்களவை உறுப்பினா்கள் தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயா் பிரியா ராஜன், துணை மேயா் மகேஷ் குமார், காவேரி மருத்துவ மனை செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், கதிர்வீச்சு புற்றுநோய் மய்ய இயக்குநா் மருத்துவர் ஏ.என்.வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.