சென்னை, அக். 28- நான் வைக்கும் ஒவ்வொரு தேர்விலும் உதய நிதி 100 மார்க் எடுக்கிறார் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
பரிசளிப்பு விழா
மறைந்த தி.மு.க. தலைவரும், மேனாள் முதலமைச்சருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க. இளைஞரணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில் மாநில அளவில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று (27.10.2024) காலைசென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில், தி.மு.க. தலைவரும், முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் 9 புத்தகங்களை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
உதயநிதிக்கு 100 மார்க்
பேச்சுக்கலை மிகமிக வீரியமிக்கது. சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அப்படித்தான், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை உதயநிதியிடம் நான் ஒப்படைத்தேன். இளைஞரணிச் செயலாளர் என்பது பதவி கிடையாது. அது பெரும் பொறுப்பு.
அந்தப் பொறுப்பை உணர்ந்து, அவர் செயல்பட்டு வருகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், என்னைப் பொறுத்தவரையில், அந்த பொறுப்பு நான் அவருக்கு கொடுத்த பயிற்சி. அப்படி பார்க்கும்போது, நான் வைக்கும் ஒவ்வொரு தேர்விலும் அவர் 100 மார்க் எடுக்கிறார்.
100 பேச்சாளர்கள் தேர்வு
2019-ல் ஊராட்சி மன்றக் கூட்டங்கள் தொடங்கி, அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள், ‘நீட்’ தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் சேலத்தில் இளைஞரணி மாநாட்டை நடத்திக் காட்டினார். சுமார் 6 லட்சம் இளைஞர்கள் கூடிய அந்த மாநாட்டில் நான் பேசும்போது, “இந்த இயக்கத்துக்கு 100 ஆண்டுகளுக்கான போர் வீரர்கள் தயாராகிவிட்டார்கள்” என்று சொன்னேன்.
அந்த களப்போர் வீரர்களுக்குத்துணை நிற்கும் சொற்போர் வீரர்களை அடை யாளம் காணும் முன்னெடுப்பு தான் இது. தி.மு.க.வால் தமிழ்நாடு வளர வேண்டும். இது தான் நம் லட்சியம். தலைவர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, கட்சியின் பல்வேறு சார்பு அணிகளுக்கும் பல்வேறு பணிகளை நான் வழங்கி இருந்தேன். அதில், இளைஞரணிக்கு வழங்கப்பட்ட கடமைதான், கட்சிக்காக 100 பேச்சாளர்களைத் தேர்வு செய்யும் மாபெரும் பணி.
எதிர்காலத் தலைமுறை
17 ஆயிரம் பேர். 78 நடுவர்கள். மாவட்ட அளவில் தேர்வானவர்களுக்கு மண்டல வாரியாகப் போட்டிகள். இன்று வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு என்று மிகப் பிரமாண்டமாக நடத்தி இருக்கிறார்கள். நான் கேட்டது 100 பேச்சாளர்கள். ஆனால், இப்போது 182 பேச்சாளர்களை அடையாளம் கண்டிருக்கிறார், உதயநிதி.
சொற்களை வென்ற இந்தச் செல் வங்களுக்கான பரிசுத் தொகையை நீங்கள் இன்னும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன். இனி மாவட்டங்களில் நடை பெறும் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் இங்குள்ள 182 பேச்சாளர்களை நீங்கள் பயன்படுத்தி ஆக வேண்டும். ஏன் என்றால், இங்கிருப்பவர்கள் பேச்சாளர்கள் மட்டும் அல்ல, இவர்கள்தான் திராவிட இயக்கத்தின் எதிர்காலத் தலைமுறை.
தலைநிமிரச் செய்வோம்
திராவிட இயக்கம் இளைஞர்களால், இளைஞர்களுக்காகத் தொடங்கப்பட்ட இளைஞர் இயக்கம். இங்கு கொள்கை வீரர்களாக வாருங்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அண்ணா சொன்னதை நெஞ்சில் தாங்கிக் கருத்துகளைச் சொல்லுங்கள். கலைஞர் சொன்ன அய்ம்பெரும் முழக்கங்களைக் கடைக்கோடிக்கும் எடுத்துச் செல்லுங்கள். நாம் எல்லோரும் உடன்பிறப்புகள் என்ற பாசஉணர்வோடு, தமிழ்நாட்டைத் தொடர்ந்து தலைநிமிரச் செய்வோம்.
-இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.