மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வற்றில் ‘ஆன்லைன்’ மோசடி வலையில் விழாமல் இருப்பதுதான் முதன்மையானது.
ஒவ்வொரு நாளும் செய்தி ஏடுகளைப் புரட்டும்போதும் தவறாமல் இடம் பெறுவது – திருடுவது, மோசடி செய்வது என்பனவற்றை விஞ்ஞான ரீதியாகச் செய்கின்றனர். விஞ்ஞானம் தெரிந்தவர்களே, படித்தவர்களே ஏமாந்து போவதுதான் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உரியதாகும்.
(ஆன்லைன் சூதாட்டத்தை நீதிமன்றம் ஏற்கும் அவலத்தை என்னவென்று சொல்ல)
‘‘ஹலோ…’கூரியர்’ நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. இது குறித்து மும்பை சி.பி.அய். அதிகாரிகள் உங்களிடம் விசாரிக்க உள்ளனர். காத்திருங்கள் என்று சொல்லி அலைபேசி இணைப்பை மற்றொரு நபரிடம் கொடுப்பார்கள். எதிர்முனையில் பேசும் நபர், சி.பி.அய். அதிகாரிபோல் தோரணையாகப் பேசி, உங்களிடம் ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லி ‘ஸ்கைப்’, ‘வாட்ஸ் அப்’, ‘சிக்னல்’ போன்ற செயலிகளை அலைபேசியில் பதிவிறக்கம் செய்யச் சொல்வார்.
செய்த பின்னர், காவல்துறை போன்று சீருடை அணிந்து ‘வீடியோ’ அழைப்பில் வரும் நபர், ‘உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடைபெற்று இருக்கிறது.
உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள சேமிப்பு, வைப்புத்தொகையை நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள் – ஆய்வு செய்ய வேண்டும். இதுபற்றி வேறு நபர்களிடம் தகவல் தெரிவித்தால் கைது நடவடிக்கை உடனடியாக பாயும் என்று மிரட்டும் தொனியில் பேசுவார். மேலும் நம்மைப் பீதியாக்கும் வகையில் போலியாக தயாரிக்கப்பட்ட கைது உத்தரவு போன்றவற்றை ‘வாட்ஸ் அப்’ எண்ணிலும் அனுப்பி வைப்பார்கள்.
இதற்குப் பயந்துபோய் அவர்கள் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்பினால் நாம் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணம் ஒரு நிமிடத்தில் களவாடப்படும்.
இதுபோன்ற ‘சைபர்’ குற்றங்கள் குறித்து காவல் துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தாலும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. அதற்கு எடுத்துக்காட்டு – இந்த ஆண்டு இதுவரையில் மட்டும் ரூ.132 கோடியே 46 லட்சத்து 34 ஆயிரத்து 766 அய் ஆன்லைன் மோசடி கும்பல் சுருட்டி உள்ளது. இதுதொடர்பாக சென்னை ‘சைபர் கிரைம்’ காவல் நிலையத்தில் 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தமோசடிக் கும்பலின் மிரட்டலுக்குப் பயந்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி பெரியமேட்டில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த நிகழ்வு குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சைபர் குற்றங்கள் கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து அரங்கேறி வருவதை சென்னை ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் கண்டறிந்து உள்ளனர். ஆனால் இந்த மோசடி கும்பலை நாடு கடந்து கைது செய்வது என்பது காவல்துறையினருக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. எனினும் அதற்கான முயற்சிகளை சென்னை காவல்துறை ஆணையர் அருண் உத்தரவின் பேரில் ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அருண் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
எந்தவொரு மாநில காவல் துறையோ, சி.பி.அய். போன்ற புலனாய்வு அமைப்புகளோ இது போன்று ‘ஸ்கைப், வாட்ஸ்அப், சிக்னல்’ போன்ற செயலிகள் மூலம் அழைத்து விசாரணை செய்வதில்லை.
* சந்தேக நபர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால் அந்த எண்களை உடனடியாக நிராகரித்து விட வேண்டும் அல்லது முடக்கம் செய்ய வேண்டும்.
* அடையாளம் தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
* முன்பின் தெரியாத நபர்களிடம் நம்முடைய தனிப்பட்ட வங்கி சார்ந்த மற்றும் பண இருப்பு விவரங்கள், ‘பாஸ்வேர்ட், ஓ.டி.பி.’ எண்களை தெரிவித்து அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம்.
* பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக சென்னை காவல்துறையில் 4இணை ஆணையர் அலுவலகங்கள் இயங்கும் பரங்கிமலை, சேத்துப்பட்டு, அண்ணாநகர், தண்டையார்பேட்டை காவல் நிலையங்கள் மற்றும் 12 துணை ஆணையர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் ‘சைபர் கிரைம்’ காவல் நிலை யங்கள் மற்றும் ‘சைபர் கிரைம்’ குழுக் கள் ஆகியவற்றை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.
* சைபர் குற்றங்கள் மூலம் பண இழப்பு ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண்1930, https://cybercrime.gov.in-இல் புகார் தெரிவிக்கலாம்.
உடனடி உதவி தேவை இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது அவசர உதவி எண் 100 அய் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார்.
ஆன்லைன் மோசடி நிகழ்வுகள் பல வழிகளில் நடக் கின்றன. உங்கள் முகநூலில் நீங்கள் ஆபாசப் படங்களைப் பார்த்துள்ளீர்கள். உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் வங்கி கணக் கிற்கு குறிப்பிட்ட தொகையை அனுப்ப வேண்டும் என்று மிரட்டியும் பணம் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பக்தி பெருகுகிறது பெருகுகிறது என்று ஒரு பக்கத்தில் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். ஆனால் பண்பாட்டை வளர்க்கிறாதா?
கடவுளுக்கே காணிக்கை செலுத்தி வரம் வேண்டு கிறார்கள் – வெட்கக்கேடு!