‘‘ஹிந்து, ஹிந்துத்துவா, சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ்.’’
எனும் தலைப்பில் வகுப்பெடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்!
கோபி, அக்.27 ‘‘மாவட்டம் தோறும் பயிற்சிப்பட்டறை நடத்த வேண்டும்‘‘ என்ற கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதல்படி 46 ஆம் மாவட்டமாக கோபிசெட்டிபாளையத்தில் பெரி யாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. அதில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கலந்து கொண்டு பாடங்களை நடத்தினார்.
எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்ட இருபால் மாணவர்கள்
சத்தியமங்கலம் தாளவாடி வட்டம் பழைய ஆசனூர் சுற்றுலா விடுதியில் கோபிசெட்டிபாளையம் மாவட்டக் கழகம் சார்பில் நேற்றும் (26.10.2024), இன்றும் (27.10.2024) ஆகிய இரண்டு நாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது.
ஆண்கள் 83, பெண்கள் 48 என மொத்தம் 131 மாணவர்கள் பங்கேற்றனர்.
பள்ளியளவில் ஆண்கள் 34, பெண்கள் 14.
கல்லூரி அளவில் ஆண்கள் 27, பெண்கள். 26.
பட்டம் பெற்றவர்கள் ஆண்கள் 24, பெண்கள் 8 ஆகும்.
இதுமட்டுமன்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு கழக வெளி யீடுகள் பாதி விலைக்குக் கிடைக்கும் என்று அறி விக்கப்பட்டிருந்தது. இப்பணிகளை புத்தக விற்பனைத் தோழர்கள் ராஜேந்திரன், குணா, யோகேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மருத்துவர் கவுதமன் பேய். பிசாசு, பில்லி சூனியம் என்ற தலைப்பிட்ட புத்தகத்தை மாண வர்களுக்கு நன்கொடையாக அளித்து சிறப்பித்தார்.
ஒரே நாளில் 9 வகுப்புகள்!
காலை 9 மணி முதல் பதிவுகள் தொடங்கின. இதில் பகுத்தறிவு ஆசிரியரணித் தோழர்கள் மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர், மாநில ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, வெள்ளத்துரை, பழனிச்சாமி, மோகன் ஆகியோர் ஒருங்கிணைத்துச் சிறப்பித்தனர்.
தொடர்ந்து ஊடகத்துறை மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, ‘‘தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு” எனும் தலைப்பிலும், கிராமப்பிரச்சாரக்குழுவின் மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ,‘‘கடவுள் மறுப்பு” எனும் தலைப்பிலும், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், ‘‘பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு” எனும் தலைப்பிலும், பெரியார் மருத்துவக் குழுமம் தலைவர் மருத்துவர் இரா.கவுதமன், ‘‘பேயாடுதல், சாமியாடுதல் அறிவியல் விளக்கம்” எனும் தலைப்பிலும், பொதுச் செயலாளர் முனைவர் துரை.
சந்திரசேகரன், ‘‘சமூக நீதி வரலாறு” எனும் தலைப்பிலும், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ‘‘பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலடி” எனும் தலைப்பிலும், கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, ‘‘ஹிந்து ஹிந்துத்துவா சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ்.”
எனும் தலைப்பிலும், திண்டுக்கல் ஈட்டி கணேசன், ‘‘மந்திரமா? தந்திரமா?” எனும் தலைப்பிலுமாக 8 வகுப்புகளும், இரவு உணவுக்குப் பிறகு, ‘‘பெரியார் திரைப்படம்” திரையிடல் ஒரு வகுப்புமாக மொத்தம் 9 வகுப்புகள், காலை 9.30 மணிக்குத் தொடங்கி இரவு 9:45 மணி வரையில் பயிற்சி நடைபெற்றது.
தேவையான தலைப்புகளும், வகுப்புகளும்!
முதல் வகுப்பில் மா. அழகிரிசாமி, தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை ஒளிப்படங்களைத் திரையிட்டுக் காட்டி விளக்கினார். இரண்டாம் வகுப்பில் ”கடவுள் மறுப்பு” எனும் தலைப்பில் கிராமப்புற பிரச்சாரக்குழுவின் மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் வகுப்பெடுத்தார். மூன்றாம் வகுப்பில் துணைத் தலைவர் பார்ப்பனியப் பண்பாட்டுப்பாட்டுப் படையெடுப்பு நமது பெயர்கள் உட்பட எந்தெந்த வகைகளில் ஊடுருவியுள்ளது என்பதை விளக்கினார். நான்காம் வகுப்பில் சாமியாடுதல் பேயாடுவது அறிவியல் விளக்கம் வகுப்பில் பார்ப்பானும், பாப்பாத்தியும் ஏன் சாமியாடுவதில்லை? படித்தவர்கள் ஏன் சாமி யாடுவதில்லை? பெரிய கோயில்களில் ஏன் சாமி யாடுவதில்லை? ஆண்கள் ஏன் பேயாடுவதில்லை? என்ற 4 கேள்விகளைக் கேட்டு அதற்கு பதிலளித்தார். அதைத் தொடர்ந்து அய்ந்தாம் வகுப்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சமூக நீதி வரலாறு பற்றி வகுப்பெடுத்தார். அதில், நீதிக்கட்சி தொடங்கி, தந்தை பெரியார், அதைத்தொடர்ந்து காமராசர் ஆட்சிக்காலத்தில், எம்.ஜி.ஆர்., கலைஞர் காலத்தில், ஜெயலலிதா ஆட்சியில் என விரிவாக இடஒதுக்கீடு பற்றி வகுப்பெடுத்தார். அடுத்து பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலடி எனும் வகுப்பில் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு, மாணவர்களிடம் பெரியார் மீதான என்னென்ன அவதூறுகள் இருக்கின்றன என்று கேள்வி கேட்டு அவர்கள் சொன்ன பல்வேறு அவதூறுகளுக்கு நிதானமாக பதிலளித்தார். ஈட்டி கணேசனின் கலகலப்பான மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மாணவர்களின் பங்கேற்புடன் சிறப்புடன் நடைபெற்றது.
அம்பேத்கர் கனவை நினைவாக்கிய
திராவிடர் இயக்கம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் ‘‘ஹிந்து ஹிந்துத்துவா சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ்.’’ எனும் தலைப்பில், சுயமரி யாதை இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இரண்டும் ஒரே காலகட்டத்தில் உருவானது என்றும் இரண்டும் நேர் எதிர் எதிரான கொள்கைகளை உடையது என்றும், மதத்தை அடிப்படையாக கொண்டு, மறைமுகமான சூழ்ச்சியான திட்டங்களோடு இயங்குவது
ஆர்.எஸ்.எஸ். அதற்கு மாறாக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படையாக இயங்குவது சுயமரியாதை இயக்கம் என்றும் இரண்டு பண்பாட்டு இயக்கங்களை அறிமுகம் செய்வித்தார். ஹிந்து மதத்திலிருந்து ஜாதியை கழித்துவிட்டால் மிஞ்சுவது சுழியம் தான் என்றார். மதவாதத்தில் கேள்வி கேட்பதற்கு இடமில்லை. சுயமரியாதை இயக்கத்தில் கேள்விகள் ஊக்குவிக்கப்படுகின்றன என்று இரண்டுக்குமான அடிப்படை வேறுபாட்டை விளக்கினார். இதே போன்று பெண் விடுதலையில் இரண்டுக்கும் என்னென்ன நிலைப்பாடு என்றும் அதற்கு எடுத்துக்காட்டாக புரட்சியாளர் அம்பேத்கர் 1954 இல் ஹிந்து கோட் பில் கொண்டு வந்து ஹிந்து பெண்களின் உரிமைகளுக்காகப் போராடி தோற்றுப் போனதும், திராவிடர் இயக்கம் 1989 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கொண்டு வந்ததையும், அதே சட்டம் தி.மு.க. அங்கம் வகித்த யுபிஏ அரசில் 2004 இல் கொண்டு வரப்பட்டதையும் கூறி ஹிந்து, ஹிந்துத்துவா, சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை அம்பலப்படுத்தி மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். அத்தோடு ஆர்.எஸ்.எஸ் மூன்று முறை தடை செய்யப்பட்ட மனித விரோத அமைப்பு என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில்
திண்டுக்கல் ஈட்டி கணேசன், ”மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சி
1பெரியாரியல் பயிற்சிப்பட்டறை
சிறக்க பணியாற்றியவர்கள்!
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கோபிசெட்டிபாளையம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், மாவட்டச் செயலாளர் வெ.,குணசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டக் காப்பாளர்கள் ந.சிவலிங்கம், பெ.இராஜமாணிக்கம், மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் த.சிவபாரதி, மாவட்டத் துணைத் தலைவர் பொன்.முகிலன், நம்பியூர் கழக செயலாளர் செ.பிரசாந்த்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் அ.பாட்டுச்சாமி, க.யோகானந்தம், மாவட்ட துணைச் செயலாளர் க.மூர்த்தி மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களான மாநில அமைப்பாளர் அ.குப்புசாமி, க.பழனிச்சாமி, கி.வெள்ளதுரை, த.விஜயசங்கர், எஸ்.சங்கீதா, பெ.மல்லிகா, முகுந்தன், கா.சந்திரன், ப.வெள்ளதுரை, எஸ்.சக்திவேல் மற்றும் இளைஞரணித் தோழர்களான மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிவேல், மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.அஜித்குமார், நம்பியூர் ஒன்றிய இளைஞரணித் தலைவர் ஜெ.தட்சிணாமூர்த்தி, இளைஞரணிச் செயலாளர் சுரேஷ், நம்பியூர் ஒன்றிய அமைப்பாளர் கார்த்தி, சக்தி ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் ஹரிபிரசாத், நம்பியூர் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் அ.தனபால், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மா.சூர்யா, பவானிசாகர் ஒன்றியச் செயலாளர் காசி. விஸ்வநாதன், சக்தி ஒன்றிய அமைப்பாளர் சம்பத், மாவட்ட மகளிர பாசறைத் தலைவர் ப.திலகவதி, மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் வெ.திவ்யா, மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் சி.அறிவுச்செல்வி, பாசறைத் தோழர் ஆர்.துளசிமணி, தலைமைக்கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேஷ், ஈரோடு மாவட்டக் காப்பாளர் சிவகிரி சண்முகம், திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் முத்து, மாவட்ட துணைச் செயலாளர் வெ.ப.அரங்கசாமி, அந்தியூர் ஒன்றிய தலைவர் லோகநாதன், அந்தியூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தன், கோபிசெட்டிபாளையம் சுமி எலக்ட்ரானிக்ஸ் கவுரிசங்கர், சின்னாரிபாளையம் கிளைச் செயலாளர் சுபாஷ் மற்றும் தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவர் செ.சண்முகம், தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் என்.சி.சண்முகசுந்தரம், இந்திய தேசிய காங்கிரஸ் நம்பியூர் வட்டாரத் தலைவர் கே.பி.சண்முகசுந்தரம், கோபிசெட்டிபாளையம் ஆர்.ரமேஷ், ஆதித்தமிழர் பேரவை ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி, கோபி ஆவின் சக்திவேல் மற்றும் அருகாமை மாவட்டத்திலிருந்து கழக வழக்குரைஞரணி மாநிலத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், மாநில வழக்குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த்தன், மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் மதுரை கணேசன், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், ம.தி.மு.க.வைச் சேர்ந்த எழுத்தாளர் அருணகிரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பழைய ஆசனூர் சுற்றுலா விடுதியின் சிறப்புகள்!
மேற்கு தொடர்ச்சி மலையின் வானுயர்ந்த அடுக்கடுக்கான மலை முகடுகளின் மத்தியில், பாக்கு மரங்கள் சுற்றுச்சுவர் போல அரண் செய்ய மரங்கள் சூழ்ந்த பகுதியாக கோபிசெட்டிபாளையம் மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி வட்டம் பழைய ஆசனூர் ரிசார்ட்ஸ் இருந்தது. மெல்லிய குளிர் தழுவும் சூழல் நிலவியது. பயிற்சிப்பட்டறை அரங்கத்திற்கு பக்கத்திலேயே சமையல் கூடமும், சாப்பிடும் இடமும் அமைந்துள்ளது. அத்தோடு தங்கும் இடங்களும் பயிற்சி அரங்கத்திற்கு முன்னும் பின்னுமாக அமைந்திருந்தன. இது பெரியாரியல் பயிற்சிப்பட்டறைக்கு மிகச்சிறந்த இடமாக அமைந்துவிட்டது. அத்தோடு, இரவில் வெளியில் செல்ல முடியாத வகையில் காடு சூழ்ந்த இடம். பார்வையாளர்களாக வந்திருந்த பெண்கள் தங்கள் குழந்தைகள் விளையாட சிறிய பூங்காவும் அமைந்திருந்தது சிறப்பான ஒன்று. அத்துடன் வெளி வாசலில் காவல் துறையினரது பணி சிறப்பானதாக இருந்தது. ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆறுதலாக இருந்தது. ஆக மொத்தத்தில் இடம் தேர்வு செய்ததிலிருந்து சிறப்பாக நடைபெற்ற வகுப்புகள், உணவு, தங்குமிடம் என அனைத்தும் சிறப்பாக இருந்தன. மாணவர்கள் பங்கேற்பும் இதுவரை இல்லாத அளவாக சாதனை படைக்கும் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.