சென்னை, அக்.26 மணவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இணையர்களை நேரில் ஆஜ ராகும்படி கட்டாயப்படுத்தாமல், காணொலியில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ்நாட்டைச் சோ்ந்த இணையர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் மணவிலக்கு வழங்கக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கில் ஆஜராக விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னை வர இயலாததால், காணொலி மூலம் ஆஜராகிய நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை எனக் கூறி, அவா்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்ய சென்னை குடும்ப நல நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதை எதிா்த்து, மனைவி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை 23.10.2024 அன்று விசாரித்த நீதிபதி நிா்மல்குமாா், குற்ற வழக்குகளில்தான் சம்பந்தப்பட்டவா்களை நேரில் ஆஜராவது கட்டாயம் எனக் கூற முடியும். பிற வழக்குகளில் குறிப்பாக, மணவிலக்கு வழக்கு களில் காணொலி மூலம் ஆஜராக வாய்ப்பளிக்க வேண்டும். நேரில் ஆஜராக வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது.
மேலும், பரஸ்பரம் மணவிலக்கு கோரி இணையர்களின் பொது அதிகாரம் பெற்றவா்கள் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம். காணொலி மூலமே வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.