சேலம், அக். 26- சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டு கோவையில் இருந்து சென்னைக்கும், பெங்களூருவிற்கும் வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் இணைத்து இயக்குவதற்காக வந்தே பாரத் மாற்று இன்ஜின் ஒன்று, எப்ேபாதும் கோவை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த மாற்று வந்தே பாரத் விரைவு வண்டி இன்ஜினில் நேற்று முன்தினம் (24.10.2024) அதிகாலையில், லோகோ பைலட்டுகள் ஏறினர்.
அப்போது, ரயில் இயக்கத்திற்கான புரோகிராம் அனைத்தும் மாற்றி வைக்கப்பட்டிருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லோகோ பைலட்டுகள், உடனடியாக சேலம் கோட்ட இயக்கப்பிரிவு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அப்போது, அந்த இன்ஜினில் ஒரு நபர் ஏறி, ரயில் இயக்கத்திற்கான புரோகிராமை மாற்றி வைத்திருப்பது தெரியவந்தது.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து புரோகிராமை மாற்றிய கோவை ரயில் நிலையத்தில் உள்ள லோகோ பைலட்டுகளுக்கான ஓய்வறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர் ஹரிகரன் (28) என்பவரை ஆர்பிஎப் காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர், குடிபோதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்ஜினில் ஏறி புரோகிராமை மாற்றி அமைத்தது தெரியவந்தது.