நீதிதேவதை என்று சொல்லப்படும் சிலை வடிவத்தை வழக்குரைஞர் சங்கத்தை ஆலோசிக்காமல் மாற்றலாமா?
உலகளவில் ஒப்புக்கொண்ட சிலையின் வடிவத்தை மாற்றுவதன் பின்னணி என்ன?
பழைய சிலை வடிவம் நீடிக்க மறுபரிசீலனை செய்க!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
நீதிமன்றத்தில் நீதியின் அடையாளமாக உலகெங்கும் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ள நீதிக்கு அடையாளமான சின்னத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் கருத்தையும் கேட்காமல் ஒரு சார்பாக, தன்னிச்சையாக மாற்றியுள்ளது சரியானதல்ல; மேலும், அந்தச் சிலையின் நெற்றியில் ஹிந்து மதம் என்ற குறிப்பிட்ட அடையாளமான ‘திலகத்தை’ நெற்றியில் வைத்திருப்பது – இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும் என்றும், இந்த நிலையில், பழைய சிலையே நீடிக்க மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சுப்ரீம் கோர்ட்டில்
நீதி தேவதை சிலையில் மாற்றம் செய்ததற்கு வக்கீல்கள் அதிருப்தி
எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினர்
புதுடில்லி, அக்.25- பழைய ‘நீதி தேவதை’ சிலை யில் மாற்றம் செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நீதி தேவதை சிலை
இந்திய நீதித்துறையின் தலைமைப்பீடமான உச்சநீதிமன்றத்தில் நிறுவப்பட்டிருந்த நீதி தேவதை சிலை வலது கையில் தராசு மற்றும் இடது கையில் வாளுடன் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதன் கண்கள் கருப்புத் துணி யால் கட்டப்பட்டும் இருந்தது.
நீதி வழங்குவதில் பாரபட்சமற்ற தன்மை இன்றி நேர்மையை கடைப்பிடிப்பதைக் குறிக்கும் வகையில் கண்கள் கட்டப்படுவதும், சமமான நீதி வழங்குவதை உறுதி செய்வதைக் குறிக்கத் தராசும் இடம்பெற்றிருந்தது. மேலும் சட்டத்தின் வலிமையை குறிக்கும் வகையில் வாளுடனும் அமைக்கப்பட்டிருந்தது.
மாற்றங்களுடன் புதிய சிலை
தற்போது இந்தச் சிலையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமாக, வெள்ளை நிற பாரம்பரிய உடை அணிந்திருக்கும் நீதி தேவதையின் கண்களில் கருப்புத்துணி இல்லை. அதேபோல் இடது கையில் வாளுக்கு பதிலாக அரசியல் சாசனப் புத்தகம் இடம்பெற்றுள்ளது. நீதி தேவதையின் தலையில் கிரீடம் மற்றும் நெற்றியில் திலகத்துடனும் வடிவமைப்பட்டுள்ளது.
இந்த சிலையை கடந்த வாரம் உச்சநீதிமன்ற நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் திறந்து வைத்தார்.
தீர்மானம் நிறைவேற்றம்
நீதி தேவதையின் சிலையில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்துக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன்) கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தைக் கலந்து ஆலோசிக்காமல் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை வழக்குரைஞர்கள் ஒருமனதாக நிறைவேற்றி உள்ளனர். இந்த தீர்மானத்தில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கபில்சிபல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
‘நாங்களும் பங்குதாரர்கள்!’
அந்த தீர்மானத்தில், ‘உச்சநீதிமன்ற வழக்கு ரைஞர்களைக் கலந்தாலோசிக்காமல், நீதிமன்றத்தின் சின்னம் மற்றும் நீதி தேவதை சிலையில் சில தீவிரமான மாற்றங்களை உச்சநீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக செய்துள்ளதை உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயற்குழு கவனித்து வருகிறது. நாங்களும் நீதி நிர்வாகத்தின் சம பங்குதாரர்கள். ஆனால் இந்த மாற்றங்கள் எங்கள் கவனத்தில் கொண்டு வரப்பட வில்லை. இந்த மாற்றங்களின் பின்னணியை நாங்கள் அறியவில்லை’ என கூறப்பட்டுள்ளது.
இதைப்போல உச்சநீதிமன்றத்தில் தாங்கள் உணவு விடுதி அமைக்கக் கோரிக்கை விடுத்து வரும் இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க விடுத்திருக்கும் பரிந்துரைக்கும் வழக்குரைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட செய்தி இன்றைய (25.10.2024) நாளேடு ஒன்றில் வெளிவந்துள்ளது.
நீதிதேவதை என்று நீதி வழங்குமுறை நேர்மையாக ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து செய்வதன் தத்துவத்தை அறிவுறுத்தும் வகையிலே உலக அளவில் உள்ள அந்த பாரம்பரியம் மிக்க சிலையை மாற்றி, அந்தத் தத்துவத்தையே சிதைக்கும் வண்ணம் மாற்றம் செய்ய இப்போது என்ன அவசியம் வந்ததோ, யாருக்கும் புரியவில்லை.
வழமையான முந்தைய நீதிதேவதை சிலையில் கண்கள் கருப்புத் துணியால் கட்டப்பட்டிருக்கும் – தராசு சாயாமல், வாள் ஒன்றும் கையில் இருக்கும்.
மதச்சார்பின்மை தத்துவத்திற்கே
முற்றிலும் நேர்முரண்!
நீதி வழங்குவதில் யார் பக்கமும் கண்ணோட்டம் அமையக்கூடாது என்பது Fiat Justitia‘ என்ற இலச்சினைச் சொற்கள் லத்தின் மொழியில் அமைந்துள்ளதை இப்போது மாற்றி, கண்கள் கட்டப்பட்ட கருப்புத் துணி அகற்றப்பட்டு, நீதிதேவதையின் சட்டத்தின் வலிமை யைக் குறிக்கும் வாளும் அகற்றப்பட்டு – கிரீடம் இடம்பெற்றதோடு, புதிதாக நீதிதேவதை நெற்றியில் பொட்டும் வைக்கப்பட்டுள்ளது!
இது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம்பெற்றுள்ள மதச்சார்பின்மை – செக்குலர் தத்துவத்திற்கே இந்தப் பொட்டு வைத்தல் முற்றிலும் நேர்முரண் ஆகும்.
பொட்டு வைத்துக் கொள்ளுவது முழுக்க முழுக்க இந்து மதத்தினை அடையாளப்படுத்தும் குறி – வெறும் அழகுக்கல்ல!
விதவைக் கோலத்தை, கணவனை இழந்த பெண்ணை பொட்டு வைத்துக் கொள்ள ஸநாதன வைதீக ஹிந்து மதம் அனுமதிப்பதில்லை – சாஸ்திரப்படி!
கிறிஸ்துவ மதத்தினருக்கோ, இஸ்லாமிய மதத்தின ருக்கோ– நெற்றியில் பொட்டு (பெண்களுக்கு) இடம்பெறுவதில்லை!
எனவே, அதிலும் ஒரு மதச் சார்புதான் என்ற நிலைதானே இதன்மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்குள்ளேயே பிரிவினை – பேதம் காட்டும் குறியீடாக, தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் குறியீடாக அல்லவா ‘பொட்டு’ கருதப்படுகிறது.
உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சட்டப்படி உள்ள தங்களது உரிமைக் கண்ணோட்டப்படி மேலே உள்ள கேள்வியை எழுப்பினர்.
மதச்சார்பின்மைக்கு இது எதிரான ஒரு மதச்சார்பு என்ற சந்தேகத்திற்கு இடமளிப்பதாகாதா?
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக நடந்துகொள்ளவேண்டும் என்று மாண்பமை உயர்நீதி மன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள்தானே அடிக்கடி கூறுவர் – தங்களது தீர்ப்புகளில், நீதிமன்ற விசாரணைகளின்போது.
அப்படி இருக்க, இப்படி ஹிந்துத்துவா மறைமுகப் பிரச்சாரமே என்ற அய்யம் ஏற்படும்படி நடந்துகொள்வது நியாயந்தானா?
அரசமைப்புச் சட்ட மாண்புகளை, விழுமியங்களைக் காப்பாற்றுக!
உலக அளவில் உள்ள அந்த நீதிதேவதை சிலையில் இப்படி மாற்றம் செய்தால், நீதிதேவதையின் கண்களில் கண்ணீர்தான் வடியும்!
நீதி வழங்குமுன் விருப்பு வெறுப்புக்கு இடம்தரும் கண்ணோட்டம் நுழையும் என்ற அனுமானத்திற்கு இடம் தர நேரிடக் கூடும்.
எனவே, மறுபரிசீலனை செய்து, புதிய சிலையை அகற்றி, பழைய சிலையை வைப்பதே அரசமைப்புச் சட்ட மாண்புகளை, விழுமியங்களைக் காப்பாற்றிட பெரிதும் உதவிடும்.
சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களாக!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
25.10.2024