சென்னை, அக். 23- தமிழ்த் தாய் வாழ்த்து தொடர்பாக ஆளுநர் ரவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நடந்துவரும் கருத்து மோதல் தொடர்பாக இந்து ராம் சில விளக்கங்களை அளித்திருக்கிறார்.
கடந்த வாரம் தூர்தர்ஷன் பொன்விழா மற்றும் ஹிந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். அங்கே ஒலித்த தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியை தவிர்த்துவிட்டுப் பாடப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “ஆளுநரா? ஆரியநரா?” என்று அறிக்கை விட்டிருந்தார்.
அதற்கு ஆளுநர் ரவி, “எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து இருப்பதாகவும் அவசரகதியில் முதலமைச்சர் பொதுவெளியில் வைத்ததால், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” மறுப்பு தெரிவித்திருந்தார். ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளும் கட்சியான திமுகவுக்கும் அவருக்குமான கருத்தியல் ரீதியான யுத்தம் நடந்து வருகின்றன. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது, ஸநாதன தர்மத்தை ஆதரித்தவர் வள்ளலார் என்று பேசியது எனப் பல சர்ச்சைகள் தொடர்ந்து நடந்துவந்த நிலையில் தான் இப்போது தமிழ்த் தாய் வாழ்த்து தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முரசொலி செல்வம் மறைவையொட்டி நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய இந்து பத்திரி கையைச் சேர்ந்த என்.ராம், திராவிட இயக்கம் உண்மையானது என்று கூறி, ஆளுநருக்குப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது பேச்சின் போது, “கடந்த 2003ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் முத லமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஏப்ரல் மாதம் இந்து பத்திரிகையில் ‘Rising Intolerance’ என்று ஒரு தலையங்கம் வெளியானது.
அதற்காக 5 பேரைக் கைது செய்வதற்கான வாரண்ட் வந்தது. தலையங்கத்தை தமிழில் வெளியிட்டதற்காக ‘முரசொலி’ ஆசிரியர் மீதும் வாரண்ட் போட்டார்கள். அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டரீதியாகப் போராடி வழக்கில் வெற்றி பெற்றோம். அப்போதும் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. தைரியமாக எதிர்த்துப் போராடி னோம். அப்போது உறுதியாக நின்றவர் முரசொலி செல்வம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முரசொலியில் ‘கொக்கென்று நினைத்தாயா?’ என்ற தலைப்பில் முரசொலியில் ஒரு கட்டுரை எழுதினார் செல்வம். அது ஆளுநர் ரவியின் நடவடிக்கைகளைக் கேள்வி எழுப்பி எழுதப்பட்ட கட்டுரை. முதன்முதலாக ரவிக்கு எதிராகச் சவால் விட்டவர் செல்வம்தான். ஆளுநர் ரவி மறைமுகமாக ஹிந்தி யைத் தமிழ்நாட்டில் திணிக்க முயன்றார். அதற்கு, ‘ஆளுநர் ரவி காவல்துறையிலிருந்து ஆளுநராகப் பொறுப்புக்கு வந்துள்ளார். காவல்துறையில் வேண்டுமானால் அடி, தடி பாணிகள் கைகொடுக் கலாம். அரசியலில் அது செல்லாக் காசு’ என்று எழுதி இருந்தார் செல் வம்.
இன்றைக்கு பாஜக ஆட்சியில் உள்ள பல மாநிலங்களில் பத்தி ரிகை சுதந்திரமும் உரிமையும் மறுக்கப்படுகிறது. ஆட்சியை விமர்சித்து எழுதினால், உடனே எதிரி போல் பார்க்கிறார்கள். கடுமையான தாக்குதலை நடத்துகிறார்கள். அல்லது வேறு மாதிரி மறைமுகமாக ஒடுக்க நினைக்கிறார்கள். திராவிட இயக்கம் என்பது உண்மையானது. அது ஆளுநர் ரவி சொல்வது போல் இல்லை. தமிழ்நாடு என்பதைத் தமிழகம் என்று மாற்ற வேண்டும் என்றார். அப்படி எல்லாம் மாற்ற முடியாது. இப்போது தமிழ்த் தாய் வாழ்த்தில் சில வரிகளை நீக்கப் பார்க்கிறார்.
இப்படிப் பல வேலைகளைச் செய்கிறார் ஆளுநர் ரவி. அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்திருக்கிறார். ஆளுநர் மீது தனிப்பட்ட வகையில் எந்த விரோதமும் இல்லை. அவர் செயல்பாட்டின் மீதுதான் நமக்கு விமர்சனம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.