திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 20.10.2024 அன்று மாலை 5 மணி முதல் ஏழு மணி வரை திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் காஞ்சி கதிரவன் கடவுள் மறுப்பு கூறினார். கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரை ஆற்றினார்.
கழகத் தலைவர் ஆசிரியர் உரை
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், ‘‘தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகெங்கும் பறைசாற்றி வரக்கூடிய வேளையில் நம்முடைய கனவுத் திட்டமான பெரியார் உலகம் என்ற மாபெரும் திட்டத்தின் பணிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாமும் அடிக்கடி கள ஆய்வு செய்து வருகிறோம்.
பல்வேறு பணித் தோழர்களும், தலை சிறந்த பொறியாளர்களும், உலக அளவில் முன்னணி நிறுவனங்களாக பணியாற்றக் கூடிய நிறுவனங்களும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடிய வகையில் தொடர்ச்சியான பணிகளை மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் செய்து வருகின்றார்கள்.
நாம் எந்தத் திட்டத்தை தொடங்கினாலும் அது பல்கலைக்கழகம் ஆனாலும் சரி, பாலிடெக்னிக் கல்லூரியாக இருந்தாலும் சரி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், நூறு ரூபாய் என்று தான் முதலில் வைத்து ஆரம்பித்தோம். அது இன்று எந்த அளவுக்கு வளர்ந்து உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அதுபோலவே தான் இந்த பெரியார் உலகமும் அமைய வேண்டும். அதற்கான பணிகளை மக்கள் மன்றத்தில் விளக்கமாக பேச்சாளர்கள் எடுத்துரைக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கு ஏராளமான பொருள் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகிறது’’ என்று திட்டம் குறித்த செயல்பாடுகளை, விவரங்களை மிகச் சிறப்பாக எடுத்து கூறி விளக்க உரையாற்றினார். மேலும்,
தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய ஓராண்டில் ஒரு சிறப்பானக் கொள்கை முடிவை தோழர்களுக்கு தந்தை பெரியார் அவர்கள் வழங்கினார்.
ஓர் இயக்கம் என்றால்,
1. உத்தமமான தலைவர்
2. உண்மையான தொண்டர்கள்
3. உறுதியான கொள்கை (இயக்கம்)
4. யோக்கியமான பிரச்சாரகாரர்கள் – என்று சுயமரியாதை இயக்கம் தொடங்கிய ஓராண்டு காலத்திலேயே திட்டங்களை மிகச் சிறப்பாக தோழர்களுக்கு வகுத்து அளித்த பெருமைக்குரிய தலைவர் நம் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்.
நிறைய பணிகள், நிறைய கூட்டங்கள் அடுக் கடுக்காக நடைபெற்றாலும் இளைஞர்களை, மாணவர்களை இயக்கத்தில் அதிக அளவில் சேர்க்கக்கூடிய அளவில் பேச்சாளர்கள் மக்களி டம் எளிய பாங்குடன் பேசி ஈர்க்க வேண்டும்.
மேடைப்பேச்சு வேகமாகவோ, வெறுப் புணர்வை தூண்டும் வகையிலோ இருக்கக் கூடாது. பகுத்தறிவுச் சிந்தனையை, அறிவியல் மனப்பான்மையை தூண்டக்கூடிய வகையிலே உங்களுடைய பேச்சு நடை அமைய வேண்டும்.
இதனை சரியாக பயன்படுத்தினாலே இயக்கத்தின் மீது மாணவர்கள் இளைஞர்கள் எளிதில் நம்மிடம் வந்து அடைவார்கள்.
சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையிலே நம்முடைய பேச்சுகள் எப்பொழுதும் அமைய வேண்டும் என்று கழகத் தலைவர் ஆசிரியர் கூறினார்.
திராவிடர் கழகத் துணை தலைவர் உரை
கழகத்தின் ஆற்றல்மிகு பேச்சாளராக உள்ள நீங்கள் இயக்க நூல்களை அனைத்தையும் முழுமையாக வாசியுங்கள். எழுதுங்கள்.
நீட் தேர்வு, ஆதார் அட்டை, ஜி.எஸ்.டி. சேவை மற்றும் சரக்கு வரி நிலைப்பாடு குறித்து அன்றைய பாஜக அரசு குறிப்பாக மோடி தலைமையிலான அரசு குஜராத்தில் என்ன செய்தது என்பதை போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
தெருமுனைக் கூட்டம், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், வீதி நாடகம் உள்ளடக்கி நிகழ்ச்சிகளை தொய்வில்லாமல் நடத்திட ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.
நம்முடைய பிரச்சார முறையில் அதிகம் மக்களை அன்றாடம் சந்திக்கும் போது தான் இயக்கம் மேலும் மேலும் சிறப்புற வளரும்.
அப்படித்தான் இன்று ஒவ்வொரு பேச்சாளரும் வந்து உள்ளீர்கள் தொடர்ச்சியாக நீங்கள் இளைஞராக இருக்கும் போது பணியாற்றிய கரும்பலகை, சுவரெழுத்துப் பிரச்சாரங்களை ஊக்குவித்து செயல்படுத்த வேண்டும்.
இப்பொழுது நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டம் என்பதை தெள்ளத் தெளிவாக பார்க்க முடிகிறது. தொடர்ந்து நம்முடைய செயல்பாடுகள் வேகமாகவும், சிறப்பாகவும் அமைய வேண்டும் என்று கழகத் துணை தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாெரசு பெரியார்
நம்முடைய பேச்சாளர்கள் ஊடகங்களில் பேசுவதற்கு அனைத்து விதமான ஏற்பாடு களையும் கழகத் தலைவர் செய்து கொண்டு இருக்கிறார். அதில் நம்முடைய ஆற்றல்மிகு பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் சென்னையில் வந்து இடைவெளி விட்டு, இடைவெளி விட்டு தொலைக்காட்சி விவாதங்களில், சமூக ஊடகங்களான யூடியூப், பேஸ்புக், போன்ற தளங்களில் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி ,கூடிய வகையில் ஒவ்வொருவரும் நேரத்தை செலவிட்டு சென்னையில் வந்து பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பள்ளி, கல்லூரிகள், புத்தகக் காட்சிகள் போன்றவற்றில் முக்கியமான சில தோழர்கள் உரையாற்றக் கூடிய நிகழ்ச்சிகளிலும் நாம் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்.
நாம் மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக களம் ஆடினாலும், தொலைக்காட்சிகளில் இலவசமாக நம்முடைய பிரச்சாரங்களை நம்முடைய கருத்துகளை எடுத்துரைத்து மக்களிடம் எளிதில் செல்ல முடிகிறது. அதில் வருங்காலங்களில் நிச்சயமாக நம்முடைய பேச்சாளர்கள் கவனம் செலுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அது போலவே பேச்சாளர்கள் நிதானமாகவும் ஆழமான கருத்துகளையும் எடுத்துரைக்க வேண்டுமென்று குறிப்பிட்டார்.
கழக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் சொற்பொழி வாளர்கள் அதிரடி அன்பழகன் (கிராமப்புற பிரச்சாரக் குழு ஒருங்கிணைப்பாளர்) தஞ்சை இரா.பெரியார் செல்வன், இராம.அன்பழகன், யாழ் திலீபன், மாங்காடு மணியரசன், தேவ. நர்மதா, தகடூர் தமிழ்ச்செல்வி, அரூர் சா.ராஜேந்திரன், ஈட்டி கணேசன், மு.விஜேந்திரன், என்னாரெசு பிராட்லா, ஆண்டிமடம் சிந்தனைச் செல்வன், கோ செந்தமிழ்ச்செல்வி, வழக்குரைஞர் மணியம்மை, கழக செயலவை தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூர்பாண்டியன், தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயகுமார், உரத்தநாடு குணசேகரன், மாவட்ட கழக நிர்வாகிகள் ஆரோக்கியராஜ், மோகன்தாஸ், தமிழ் சுடர், வடலூர் குணசேகரன் நெய்வேலி பாவேந்தர் விரும்பி சென்னை கலைமணி மற்றும் திருச்சி மாவட்ட கழக முன்னணியினர் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர். இறுதியாக அதிரடி க.அன்பழகன் நன்றியுரை ஆற்றினார்.