பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தரின் உரை
நேற்று (19.10.2024) வல்லத்தில் நடந்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்புப் பெருவிழாவில், பல் கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் அளித்த உரை வருமாறு…
மாண்புமிகு வேந்தர் அவர்களே, பட்டமளிப்பு விழா முதன்மை விருந்தினர் அவர்களே, நிர்வாக குழு உறுப்பினர்களே, கல்விக் குழு உறுப்பினர்களே, நிதிக் குழு உறுப்பினர்களே, மதிப்புமிக்க விருந்தினர்களே, பட்டம் பெற உள்ள மாணவச் செல்வங்களே, பெருமைமிகு பெற்றோர்களே, போற்றுதலுக்குரிய ஆசிரியர்களே, ஊடகவியலாளர்களே மற்றும் இங்கே வருகைபுரிந்துள்ள பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம். உங்கள் அனைவரையும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 32–ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு வருக, வருக என வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
இன்றைய நாள் பட்டம் பெறவுள்ள இந்த மாணவ மாணவிகளின் வாழ்வில் ஒரு முக்கியமான மைல்கல் (திருப்புமுனை). மிகுந்த மரியாதையுடனும், ஆழ்ந்த கடமை உணர்ச்சியுடனும் உங்கள் முன் நின்று இந்தப் பட்டமளிப்பு விழாவினை தலைமையேற்று நடத்தி, பட்டங்களை வழங்கி மாணவர்களை கவுரவிக்க வருகை புரிந்துள்ள நமது பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்களை வருக வருக என வரவேற்கின்றேன்.
நமது நிறுவனத்தின் தொலை நோக்கு சிந்தனை யாளரும், தொடர்ந்து எங்களை உற்சாகத்துடன் வழி நடத்துபவருமான வேந்தர் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிறுவனத்தின் இலக்கை நாங்கள் அடைய கல்விக்காகவும், சமூதாய மாற்றத்திற்காகவும் உங்களின் ஓய்வறியா அர்ப்பணிப்பும், வழிகாட்டுதலும் எங்களை உத்வேகமாக கல்விப் பணியாற்றச் செய்கிறது. சமுதாய நலனுக்காகவும், சமூகவளர்ச்சிக்காகவும் தங்களின் அர்ப்பணிப்பு எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. நினைவில் என்றும் நிலைத் திருக்கும். மேலும் இந்த தருணத்தில் நான் நமது சிறப்பு விருந்தினர், வேந்தர் அவர்களை வரவேற்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.
சிறப்புவிருந்தினரான (இந்திய வருவாய் பணி) ஆணையர் எஸ்.மருதுபாண்டியன் அய்.ஆர்.எஸ். வருவாய்துறை (வரிவிலக்கு) நம்முடைய அழைப்பினை பரிவுடன் ஏற்று இங்கே வருகை புரிந்து, பட்டமளிப்பு விழா பேருரையாற்றவுள்ளார். அவரை வருக வருக என வரவேற்கின்றேன். தங்களுடைய பட்டமளிப்பு விழா பேருரையை கேட்ப தற்கு நாங்கள் அனைவரும் ஆர்வமுடன் உள்ளோம். தங்கள் பேருரை இந்த இளம் பட்டதாரிகளை அறிவுப்பூர்வமாக உற் சாகப்படுத்தும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
கர்நாடக இசையில் சிறந்து விளங்கும்
டி.எம். கிருஷ்ணா அவர்களும் இங்கே நம்மிடையே உள்ளார் என்பது பெருமைப்படத்தக்க ஒன்றாகும். அவர் ஓர் எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் கட்டுரையாளரும் ஆவார். இன்றைய நாள், இவரும் உங்களுடன் ‘Doctor of Letters’ என்றழைக்கப்படும் மதிப்புறு முனைவர் பட்டம் பெறவுள்ளார். அவர்களையும் நான் வரவேற்கின்றேன். தங்கள் வருகையால் நாங்கள் பெருமையடைகின்றோம்.
பட்டம் பெறவுள்ள நம்முடைய மாணவச் செல்வங்களை மனதார வாழ்த்துகிறேன். இன்று உங்கள் கடின உழைப்பிற்கான, விடா முயற்சிக்கான மற்றும் அர்ப்பணிப்பிற்கான விழா. உங்களின் இந்த சாதனைகள் உங்களது தனிப்பட்ட முயற்சினால் மட்டும் கிடைக்கப் பெற்றதல்ல. உங்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உங்கள் வயதில் உள்ள உற்ற நண்பர்களின் ஆதரவும் காரணமானதாகும். இந்த வெற்றிப் பயணம் முழுவதிலும் உங்கள் உயர்வில் தூண்களாக இருந்த உங்களின் பெற்றோர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த விழாவினையும் எங்கள் சாதனைகளையும் ஆவணப்படுத்தவும், வெளி உலகத்திற்கு எடுத்துரைக்கவும் இங்கே வருகை தந்துள்ள ஊடகவியலாளர்களையும் மகிழ்வுடன் வரவேற்கின்றேன்.
எங்கள் மாணவ மாணவிகளின் கடின உழைப்பால் பெற்ற கல்வி அதனால் பெற்ற சிறப்பான சாதனை களுக்கு இந்த பட்டமளிப்பு விழாவே ஒரு சான்றாகும். இன்று பல பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 1,494 மாணவ, மாணவிகள் பட்டம் பெற உள்ளார்கள். அவர்களின் சாதனை களை பாராட்டி மகிழ்கின்றோம். இவர்க ளில் 1,109 மாணவ, மாணவியர்கள் இளங்கலைப் பட்டங்களையும், 372 மாணவ, மாணவியர்கள் முதுகலைப் பட்டங்களையும், 13 மாணவ, மாணவியர்கள் முனைவர் பட்டங்களையும் பெறவுள்ளனர்.
இவர்களில் இங்கே 101 மாணவ, மாணவியர்கள் பட்டங்களுடன் பதக் கங்களையும், பெறவுள்ளனர் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமை அடைகின்றேன். இவர்களின் 40 பேர் தங்க பதக்கங்களையும் 33 பேர் வெள்ளிப்பதங்களையும் 28 பேர் வெண்கலப்பதக்கங்களைத் தங்களின் மிக உயரிய கல்வி சாதனைக்காக பெறவுள்ளனர்.
கல்வியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்து பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்றோர், தங்கம், வெள்ளி வெண்கலப்பதக்கம் பெறவுள்ளோர் மற்றும் பட்டம் பெற உள்ள அனைத்து மாணவ, மாணவிகளையும் நான் இந்த தருணத்தில் மனமாற வாழ்த்துகிறேன்.
இந்த மாணவ, மாணவிகளின் சாத னைகளைக் கொண்டாடக் கூடியிருக்கும் இந்த வேளையில் இந்த வளாகத்தின் நல்ல நோக்கத்தில் தொடர் வளர்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்துடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் பற்றி நீங்கள் அனைவரும் தெறிந்துகொள்ள வேண்டும்.
அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியால் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் தரம் வாய்ந்த கல்வியை தொடர்வளர்ச்சியின் அவசியத் தேவையை அறிந்து வழங்கவும் வளாகச் செயல்பாட்டை மேம்படுத்தவும் முனைந்து செயல்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட உலகத் தேவையறிந்து மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தரமான கல்வியை வழங்குவதில் நமது நிறுவனம் முன்னோடி நிறுவனமாக திகழும் என நான் உறுதியாகக் கூறுகிறேன். தொடர் வளர்ச்சிக்காக நம் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை வளாகத்தில் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுதலை குறைக்க நம்மால் முடியும், இயற்கை வளங்களை அதிக அளவில் பயன்படுத்தி கற்பதற்கு ஏற்ற மேம்பட்ட சூழலை ஏற்படுத்த அனைத்து செயல்பாட்டு நன்மைகளையும் பெறுவதுடன் தொடர் வளர்ச்சிக்கான கற்பதற்கு ஏற்ற சூழலை நம் நிறுவனம் விரைவில் வழங்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கற்பித்தல் கருவிகளை உருவாக்கும் திட்டம், தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அமைப்பு முறை, மாணவர் ஆசிரியர் கற்றல் கற்பித்தல் அனுபவத்தினையும் கல்விச்செயல்பாடுகளையும் மேம்படுத் துதல் மற்றும் எளிதில் கல்வி பெறும் வாய்ப்பை அதிகரித்தல் அடிப்படையில் உலகத்தரம் வாய்ந்த முன்னனி பல்கலைக் கழகமாக நம்முடைய நிறுவனம் திகழும்.
தகவல் பகுப்பாய்வு அணுகுமுறையின் அடிப் படையில் முடிவை மேற்கொண்டு மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் களமாக நமது பல்கலைக்கழகம் திகழும் இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. இதனைக் கண்காணிக்க ஒரு அர்ப்பணிப்புக் குழு அமைக்கப்பட்டு, அதற்கான பணியும் வரையறை செய்யப்பட்டு அனைத்து செயல்பாடுகளிலும் அய்க்கிய நாடு களின் நிலையான வளர்ச்சிக்கான வழி காட்டுதல்களின் படி உள்ளதா என்பதை இக்குழு உறுதி செய்கிறது.
கல்விக்காகவும், சமூதாயக் கடமைக்காகவும் முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்ற நமது நிறுவனம் நிலையான தொடர் வளர்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் ஒரு தனித்துவம் பெற்ற முன்னோடி நிறுவனமாக உருவெடுத்து வருகிறது.
இதுபோன்ற செயல்பாடுகளை பின்பற்றுவதனால் நம் கல்வி வளாகம் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கு ஒரு முன் எடுத்துக்காட்டாக இருப்பதுடன் நிலையான உலக வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தனது பங்களிப்பை வழங்கும். நாம் வளரும்போது இந்த முன்னேற்றங்களை நம்மால் உணரமுடியும். வருங்கால சந்ததியினர் மிகச்சிறந்த செழுமையாக பசுமையான எதிர்காலத்தை கிடைக்க பெறுவர் என உறுதியளிக்கின்றோம்.
இன்று இங்கு வருகை தந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றி யினை தெரிவித்துக் கொள்கிறேன். பட்டம் பெறும் இந்த நாள் உங்கள் வாழ்வில் என்றும் நினைவிருக்க வேண்டும் என்று கூறி உங்கள் எதிர்காலப் பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.