அதற்காகத்தான் சிந்துவெளி நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைக்கின்றோம்; நீங்கள் அதனைத் தொடர்ந்து கொண்டு செல்லவேண்டும்!
சிந்துவெளி நாகரிக பிரகடன நூற்றாண்டு: பேராசிரியர் அ.கருணானந்தன் சிறப்புரை
சென்னை, அக்.20 நமது தொன்மையைத் தக்க வைக்கவேண்டும் என்றால், நமது தொன்மையை நாம் மதிக்கவேண்டும் என்றால், தேசிய வரலாறு என்பது, நமக்கும் பங்களிக்கின்ற வரலாறாக இருக்கவேண்டும் என்றால், மார்ஷல் கண்டுபிடித்த சிந்துவெளி நாகரிகத்தைப்பற்றிய உண்மைகளை தொய்வில்லாமல், மறந்துவிடாமல், இந்தத் தலைமுறையினர்மீது கொண்டு செல்லவேண்டும். அந்தப் பணிக்காகத்தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. அதனை நாம் தொடங்கி வைக்கின்றோம்; நீங்கள் அதனைத் தொடர்ந்து கொண்டு செல்லவேண்டும் என்றார் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்கள்.
சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா!
கடந்த 24.9.2024 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழாவில், பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஆரியர் அல்லாத கருப்பர்கள்!
இரண்டு நகர நாகரிகங்களுக்கும் உரிமையாளர்கள் ஆரியர் அல்லாத கருப்பர்கள்.
அதனால்தான், பின்னாளில் வந்த அரசர்களைப் பார்க்கின்றபொழுது, கருப்புக் கண்ணனையும், கருப்பு ராமனையும் அவர்கள் கொண்டாடுகிறார்கள். கருப்பர்கள்தான், ஆனால், விபீஷணனைப்போல சோரம் போய்விட்டார்கள்.
ஆகவே, அவர்களை புராண நாயகர்களாக மாற்றி விட்டார்கள்.
இந்த வேத நாகரிகத்தில் வேளாண்மை செய்கின்ற முறை தெரியாது; ஆகையால், தடுப்பணை கட்டி நீரை ஒதுக்குவதை அசுரர்களின் செயலாகப் பார்த்தார்கள். பாம்பை வைத்துக்கொண்டு நீரைத் தடுத்ததாகச் சொல்லி, விருத்தாசூரனை அந்தப் பாம்பாகச் சித்தரித்து, இந்திரன் அவனைக் கொன்று, அணையிலிருந்து நீரை விடுவித்தான்.
அணைக் கட்டுவதையே பாவம் என்று கருதியவர்கள் ஆரியர்கள்.
நீர்ப்பாசன வசதி இல்லாமல், உபரி வேளாண்மை இருக்குமா?
பிராமணன் உழவுத் தொழில் செய்வது பாவம்; உழவால் உயர்ந்தது சிந்துவெளி!
ஸ்மிருதிகளின்படி, பிராமணன் உழவுத் தொழில் செய்வது பாவம். உழவால் உயர்ந்தது சிந்துவெளி. இதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.
வணிகம் செய்வது பாவம். ஏனென்றால், வேத கால ஆரியர்களுக்கு கொள்ளையடித்துப் பொருள்களைப் பெறுவதுதான் நியாயமே தவிர, பாணிகளை மிரட்டிப் பணம் வாங்குவதுதான் நியாயமே தவிர, உழைத்துப் பணத்தை வாங்குகின்ற மரபு அவர்களுக்கு இல்லை.
அத்துணை புராண நாயகர்களும் கொள்ளையடிக்கின்ற நாயகர்களாகத்தான் சித்தரிக்கப்படுகின்றார்கள்.
வணிகம் என்பது ஆரியர்களுக்குக் கிடையாது. ‘கடல் கடந்தால் தீட்டு’ என்று காந்தியார் யுகம் வரையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் ஆரியர்கள்.
கடல் கடந்து பொருளீட்டியவர்கள் சிந்துவெளியைச் சார்ந்தவர்கள்.
ஆகவே, வணிகத்திற்கும் புறம்பானவர்கள் ஆரி யர்கள். இவர்கள் எப்படி சிந்துவெளியின் தந்தையாக முடியும்?
கி.பி.2 ஆம் நூற்றாண்டு வரை
எழுத்துகள் கிடையாது!
எழுத்தே அறியாத ஸ்ருதிகளை வைத்துக்கொண்டு நம்மை ஏமாற்றியவர்கள். கி.பி.2 ஆம் நூற்றாண்டு வரை எழுத்துகள் கிடையாது.
கி.மு.6, 7 நூற்றாண்டுகளிலேயே நமக்கு எழுத்து ருக்கள் உண்டு. கீழடி போன்ற இடங்களில் கிடைக்கின்ற பானை ஓடுகளே சான்றுக்குப் போதும்.
சிந்துவெளியில் எழுத்து உண்டு. எழுத்தை வைத்து மொழியை வளர்த்தவன், உயர்ந்த நாகரிகத்தைக் கொண்டவனா?
எழுத்தே இல்லாமல் உருட்டிக் கொண்டு திரிந்த வர்கள், அவர்கள் சிறந்த நாகரிகத்தைக் கொண்டவர்களா?
ஆரிய மொழிகளில், சமஸ்கிருதம் முதல் மொழியல்ல என்ற உண்மையை மறைத்தவர்கள்.
சமஸ்கிருதம், புதிய மொழி சீரமைக்கப்பட்ட மொழி. புதிதாக சமஸ்கிருதி சீரமைக்கப்பட்ட ஒன்று.
இயல்பாக, இயற்கையாக இருந்த
மொழி பிராகிருதி!
அதற்கு முந்தைய மொழி பிராகிருதி. இயல்பாக, இயற்கையாக இருந்த மொழி.
அந்த மொழி அவர்களுக்குச் சாதகமாக இல்லாத காரணத்தினால், அந்த மொழிக்கு எழுத்து இருந்த காரணத்தினால், அந்த மொழியை ஒழிப்பதற்கு அனைத்தையும் செய்தார்கள்.
ஜேம்ஸ் பிரின்சப் மட்டும் இல்லாவிட்டால், அந்தப் பிராகிருதப் பழைமை குழிதோண்டிப் புதைக்கப்பட்டு இருக்கும்.
எழுத்தோடு இருந்த சிந்துவெளி நாகரிகம் – ஆரியர்களுடைய நாகரிகம் அல்ல!
ஆகவே, எழுத்தோடு இருந்த சிந்துவெளி நாகரிகம் – ஆரியர்களுடைய நாகரிகம் அல்ல. சிந்துவெளியில் பலமான கட்டடங்கள் உண்டு. இரண்டு அறைகளைக் கொண்ட கட்டடத்திலிருந்து, தூண்கள் கொண்ட கட்டடங்கள் வரை பல கட்டடங்கள் உண்டு. பண்டக சாலைகள் உண்டு.
ஆனால், எகிப்தில் இருந்தததைப்போன்ற கோவில்கள்கூட சிந்துவெளியில் கிடையாது. எகிப்தில் பிரமாண்டமான சிலைகள் உண்டு. சுமேரியர்கள் மார்துக் போன்ற தெய்வங்களுக்குச் சிலைகள் உண்டு, கோவில்கள் உண்டு.
ஆனால், சிந்துவெளியில் முத்திரைகளில் பார்க்கின்ற தெய்வங்களை, நீங்கள் கோவில்களாகப் பார்க்க முடியாது. பண்பாட்டு முறையே வேறு.
ஒரு சரசுவதி அல்ல;
பல சரசுவதிகள் இருக்கின்றார்கள்!
அனைத்திலும் மாறுபட்ட ஒரு நாகரிகத்தை இன்று, மார்ஷலை மறக்கச் சொல்லிவிட்டு, “சரசுவதி நாகரிகம்” என்று சொல்லுகிறார்கள்.
சரசுவதி என்கிற ரகசியத்தைப்பற்றி சொல்லி யாகவேண்டும். ஒரு சரசுவதி அல்ல; பல சரசுவதிகள் இருக்கின்றார்கள்.
ஆரியர்கள், கி.மு.600-க்கு முன்னால் அவர்கள் நக ரங்களை அமைத்து வாழ்ந்தது கிடையாது. புலம்பெயர்ந்து வருகின்றார்கள் என்று உலக வரலாறு சொல்லும். இந்திய வரலாற்றை அவர்கள் திரித்துவிட்டாலும்கூட, உலக வரலாறு அதைச் சொல்லுகின்றது.
வருகின்றபொழுது பல இடங்களில் உள்ள நதிகளை சரசுவதியின் பெயரால் அழைத்தார்கள். எந்த நதியும் சரசுவதி என்று கூறிவிடலாம். இந்தியாவிற்கு வருகின்றார்கள், ரிக் வேதத்தில் நதித் துதி என்ற ஒன்று உண்டு, ஒன்பதாம் மண்டலத்தில். நதிகளைப்பற்றி பாராட்டுவது.
அந்த நதித் துதிகளில் கங்கை என்கிற பெயர் கிடையாது. இன்றைக்கு ‘‘கங்கா ஜலம் இருந்தால்தான், ஒருவர் இறந்த பிறகு உங்கள் ஆத்மா சொர்க்கத்திற்குப் போகும்” என்பார்கள். கங்கையைக்கூட அறியாதவர்கள் அவர்கள்.
அவர்கள் கூறுகின்ற சரசுவதி எங்கே வருகின்றது என்றால், பராசரர், பரத்வாஜர், வசிஷ்டர் போன்றவர்கள் யக்ஞம் செய்த இடங்கள் – நகரங்கள் அல்ல; யக்ஞங்கள் செய்த நதிக்கரை சரசுவதி நதிக்கரை என்று கூறப்படுகிறது.
கொல்லுவதற்காக யாகம் செய்தீர்கள்; அந்த இடத்தைப் ‘புனிதம்’ என்று சொல்லுவார்கள்.
ஏன், இந்த சிந்துவெளியை சரசுவதி என்று மாற்ற வேண்டும்?
மூன்றாவது நதி கண்களுக்குப்
புலப்படாத நதி சரசுவதியாம்!
நம்முடைய மரபுகளில் பார்த்தீர்களேயானால், திரிவேணிசங்கமம் என்று சொல்வார்கள். யமுனையும், கங்கையும் சேரும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று சொல்கிறீர்களே? திரி என்றாலே நமக்குத் தெரியும்; மூன்றாவது ஒன்று இருக்கவேண்டும் என்று.
மூன்றாவது எங்கே என்று கேட்டால், அது கீழே வருகிற அம்மாவாம்; உங்கள் கண்களுக்குத் தெரியாது. ‘ஞானக்கண்களுக்கு’ மட்டும்தான் தெரியும்; ஊனக் கண்களுக்குத் தெரியாது.
ஒவ்வொரு திரிவேணி சங்கமத்திலேயும் இரண்டு நதிகள் நம் கண்களுக்குப் புலப்படும். மூன்றாவது நதி கண்களுக்குப் புலப்படாது. அப்படி புலப்படாத நதிகளெல்லாம் சரசுவதி என்று சொல்வார்கள்.
எங்கும் நிலைக்காத சரசுவதி. நிலைத்த ஒரு நாகரிகத்தின் பெயரை, நிலைக்காத சரசுவதியின் பெயரால் அழைக்கலாமா?
பெருநதியின் பெயரால்தான்
நாகரிகங்கள் அறியப்படும்!
நைல் நதியின் பெயரால் நாகரிகம். ஏனென்றால், அது பெருநதி. யுவாங்கோ, அது பெருநதி. யாங்சைக்கியாங், அது பெருநதி. நாகரிகங்கள் வருகின்றபொழுது, பெருநதியின் பெயரால்தான் அது அறியப்படுமே தவிர, சாக்கடையைப் போல ஓடுகின்ற சிறு குறு நதிகளால் அழைக்கப்படுவது கிடையாது.
அப்படி என்றால், சரசுவதிக்கு என்ன மகத்துவம்?
சரசுவதி மகத்துவம் என்றால், சிந்துவை மறக்கச் செய்வதற்கு சரசுவதியைக் கொண்டு வரவேண்டும். சரசுவதி வந்துவிட்டால், வேதம் வந்துவிடுகிறது. இதில் என்ன சதி?
இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல இனங்களின் அழிப்பால் உருவாக்கப்பட்ட பண்பாடு களைக் கொண்ட நாடு என்ற ஒரு பேருண்மையை மறைக்க விரும்புகின்றார்கள்.
‘ஆரியர்களை, நாகரிகம் தந்தவர்கள்’ என்று அவர்களை சொல்ல விரும்புகின்றார்கள்.
ஒற்றை வரலாறாகத் திணிக்கிறார்கள்!
வேதத்தை நாகரிகம் தந்த ஒன்றாக இவர்கள் நம் முன்னால் வைக்க விரும்புகிறார்கள். அது உண்மை யாக இருந்தால், அதனை ஏற்றுக்கொள்வதற்கு நமக்கொன்றும் தயக்கம் கிடையாது.
அது உண்மையாக இல்லாதபொழுது, அதை ஒற்றை வரலாறாகத் திணிப்பதற்கு நாம் எப்படி இணங்கிப் போக முடியும்?
இந்த சதியைப் புரிந்துகொள்ளவேண்டும். இன்று இந்திய வரலாற்றில், இது ஆரிய நாகரிகமாக, வேத நாகரிகத்தின் ஒரு பகுதியாக சிந்துவெளியை மாற்றியமைக்க, திரித்துக் காட்ட முயற்சிக்கிறார்கள் என்றால், நமது சொந்தத்தை, நமது உரிமையை, நமது தொன்மையைத் திருட முயற்சிக்கின்றார்கள் என்று பொருள்.
நமக்குரிய தொன்மையை
நாம் இழக்க விரும்பவில்லை!
நான், தொல்லியல் எல்லாம் சரியானது என்று சொல்லவரவில்லை. நமக்குரிய தொன்மையை நாம் இழக்க விரும்பவில்லை. களவாடப்பட அனு மதிக்க மாட்டோம்.
மார்ஷல் அதற்கான வழியைக் காண்பித்துவிட்டார். அவருக்கு நம்மீது தனியே காதல் கிடையாது. இன்னும்சொல்லப்போனால், அவர் திராவிட நாகரிகம் என்றே சொல்லவில்லை.
ஆரியருக்கு முற்பட்ட, ஆரியர் அல்லாத நாகரிகம் என்று சொன்னார்.
சரியான அடையாளப்படுத்தலுக்குக்
காரணமாக இருந்த இருவர்!
எப்படி நாம், பிராமணரல்லாதார் இயக்கம் என்று வைத்தோமோ, அது எப்படி திராவிட இயக்கமாக மாறிற்றோ, அதுபோல, ஆரியர் அல்லாத, ஆரியருக்கு முந்தைய நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்று சரியான அடையாளப்படுத்தலுக்குக் காரணமாக இருந்த இருவரை நாம் நினைவு கூரவேண்டும்.
சுளுக்கி குமார் சாட்டர்ஜி இந்திய மொழியில் அறிஞர். ஹென்றி இயர்ஆஃப்ஸ்.
இவர்கள்தான் திராவிட நாகரிகம் என்று சொன்னார்கள். திராவிடம் என்றால், இங்கே சிலருக்குக் கசக்கலாம். அவர்களுக்கு சிந்துமீது அக்கறை இல்லாமல்கூட போகலாம்.
ஏனென்றால், தமிழர்களை ஜாதிவாரியாகப் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு சிந்துவின் மகிமை புரியப் போவது கிடையாது.
நாம், நமது தொடக்கத்தை
மறந்துவிட முடியாது
ஆனால், நம்மைப் போன்றவர்கள், ஒரு பண்பாட்டுப் போராட்டத்தை 3 ஆயிரம் ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கும் நாம், நமது தொடக்கத்தை மறந்துவிட முடியாது. அதை இப்பொழுது நாம் தொன்மை இலக்கி யங்களுடன் பார்க்கின்றபொழுது, அவர்கள் கூறிய நகர அமைப்புகளை நாம் சங்க இலக்கியங்களில் பார்க்கின்றோம். பாலகிருஷ்ணன் அவர்கள், ‘‘விட்ட இடமும், தொட்ட இடமும்” என்ற மிகத் தெளிவாகச் சொன்னார்.
தொன்மை இலக்கியங்களில், நாம் நகரத்தை ஒரு மய்யப் பொருளாகக் கொண்டு இலக்கியங்களைப் படைத்திருக்கின்றோம்.
நகரத்தை மய்யப் பொருளாக்குவது என்றால், பல பிரிவினரை ஒன்றாக இணைப்பது என்று பொருள். பல தொழில்களை ஒன்றாக இணைப்பது என்று பொருள். வணிகத்தையும் பெரிதுபடுத்துவது என்று பொருள்.
சங்க இலக்கியங்கள் என்று சொல்லப்படும் இலக்கியங்களில் போரும், காதலும்தான் நமது பெருமை என்று சில தமிழாசிரியர்கள் சொல்லலாம்.
போரும், காதலும்தான் என்றால், எந்த விலங்கும் காதலுக்காகப் போரிடும். ஆனால், அதையும் மீறி தமிழ் இலக்கியங்களில் நாம் காண்பது, பொருள் தேடிச் செல்லுகின்ற வாய்ப்பு. திணை கடந்து இணக்கமாக இருக்கின்ற வாழ்க்கை. பிறரையும் மதிக்கின்ற வாழ்க்கை. அந்த இணக்கமான உயர்ந்த மனவலிமையை உருவாக்கிய இலக்கியங்கள் இங்கே இருக்கின்றன.
ஒப்பிட்டுப் பாருங்கள்; சிந்துவின் நகரங்களும், தமிழ்நாட்டின் நகரங்களும். இன்றைக்குத் தோண்டப்படு வது மறைக்கப்பட்ட உண்மைகள். இவற்றை மறைக்க விரும்புகின்றார்கள்.
தோண்டத் தோண்ட அவர்களுக்குப் ‘பூதம்’ கிளம்புவதுபோன்று தோன்றலாம். நமக்கு, நமது தொன்மை தெளிவாக மாறிவிடும்.
ஆகவே, தோழர்களே! நாம் மறக்க முடியாதது நம்மை – நமது தொன்மையை.
நாம் தொடங்கி வைக்கின்றோம்; நீங்கள் அதனைத் தொடர்ந்து கொண்டு செல்லவேண்டும்!
நமது தொன்மையைத் தக்க வைக்கவேண்டும் என்றால், நமது தொன்மையை நாம் மதிக்கவேண்டும் என்றால், தேசிய வரலாறு என்பது, நமக்கும் பங்களிக்கின்ற வரலாறாக இருக்கவேண்டும் என்றால், மார்ஷல் கண்டுபிடித்த சிந்துவெளி நாகரி கத்தைப்பற்றிய உண்மைகளை தொய்வில்லாமல், மறந்துவிடாமல், இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லவேண்டும். அந்தப் பணிக்காகத்தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. அதனை நாம் தொடங்கி வைக்கின்றோம்; நீங்கள் அதனைத் தொடர்ந்து கொண்டு செல்லவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து அமைகின்றேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.