திருவண்ணாமலை, அக்.20- திருவண்ணாமலை மாநகராட்சி பள்ளி எதிரே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் நேற்று (19.10.2024) காலை நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங் களை சேர்ந்த ஊராட்சி மன்றங்களை சேர்ந்த 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் உதவி மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது :
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கு
ரூ.37 கோடி ஒதுக்கீடு
திருவண்ணாமலையை சேர்ந்த விளை யாட்டு வீரர் யுவராஜ் தடகளப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள் ளார். தொடர்ந்து சாதனை படைக்க வாழ்த்துகிறேன். ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் மாபெரும் இயக்கமாக மாறியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தாண்டு 11லட்சம் பேர் ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி வீரர்களுக்கு பரிசு வழங்குவதற்காக ரூ.37 கோடியை ஒதுக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு வாகையர் பட்டா விளையாட்டு போட்டியில் 500 பேருக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் அரசுப் பணி ஆணை வழங்கப்பட உள்ளது. விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும்.
மகளிருக்கு அதிக வேலை வாய்ப்பு
இந்தியாவிலேயே 13 துறைகளில் தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ‘காலை உணவு திட்டம்’, ‘தமிழ்புதல்வன் திட்டம்’, ‘புதுமைப்பெண் திட்டம்’ போன்றவை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. அதிகமாக வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலமாகவும், பெண்கள் அதிகளவு வேலைக்கு செல்லும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. 48 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்வதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு பெருமை. மேலும் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
பன்னாட்டு விளையாட்டு அரங்கம்
திருவண்ணாமலையில் பன்னாட்டு ஹாக்கி ஸ்டேடியம் அமைக்கப்படும். யாரும் வீழ்த்த முடியாத தலைவராக விளங்கியவர் கலைஞர். அவரது பெயரில் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் 11.30 மணியளவில் திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன், மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துணை முதலமைச்சர் ஆய்வு நடத்தினார்.