சென்னை, அக்.18 புழல் வள்ளுவர் நகரில் வரசக்தி விநாயகர் கோயில் உள்ளது. 15.10.2024 அன்று பெய்த கனமழையால் இந்த கோயிலை சுற்றி மழைநீர் தேங்கியது.மேலும், கோயிலின் இரும்பு கதவில் மின்கசிவும் ஏற்பட்டிருந்தது. இதனை அறியாத கோயில் பூசாரி, கோயில் கதவை திறக்க முயற்படவே, அவரை மின்சாரம் தாக்கியது.இதனை கண்ட பொதுமக்கள், அவரை மீட்டு முதலுதவி அளித்து காப்பாற்றினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் சென்னையில் பெய்த மழையின் அளவு – ஓர் ஒப்பீடு
சென்னை, அக்.18- சென்னையில் 2 நாட் களில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் கணக்கிடப்பட்டுள்ளது. அதே போல் கடந்தாண்டுடன், இந்தாண்டு மழை அளவு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் சராசரியாக கடந்த 14ஆம் தேதி 65.53 மில்லி மீட்டர் மழையும், 15ஆம் தேதி 133.46.மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ஆகமொத்தம் இந்த 2 நாட்கள் மூலம் சென்னைக்கு சராசரியாக 99.49 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.
அதில் 15ஆம் தேதி கத்திவாக்கத்தில் 231.9 மி.மீ, மணலியில் 205.8 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. மற்ற இடங்களில் எல்லாம் 200 மி.மீட்டருக்கு குறைவாக தான் மழை பெய்து இருக்கிறது. அதே போல் 14ஆம் தேதி 100 மி.மீட்டருக்கு கீழ் தான் மழை பெய்து இருக்கிறது. சென்னையில் 14, 15ஆம் தேதிகளில் பெய்த மழை மூலம் மொத்தம் 2.99 டி.எம்.சி. நீர் கிடைத்து இருக்கிறது.
கடந்தாண்டு மிக்ஜம் புயல்மூலம் சென்னையில் அதிகளவு மழை பெய்தது. அப் போது டிசம்பர் 3ஆம் தேதி 135.9 மி.மீட்டர் மழையும், 4ஆம் தேதி 117.73 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. ஆக மொத் தம் இந்த 2 நாட்களில் சராசரியாக 126.8 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.
அதில் கடந்தாண்டு டிசம்பர் 3ஆம் தேதி 13 இடங்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக பெருங்குடி யில் 291.6. ஆலந்தூர் – 250, அடையார் – 235.2, மீனம்பாக்கம்- 231.5, எம்.ஜி.ஆர். நகர் 219.6 இடங்களில் மழை பதிவானது. அதேபோல் டிசம்பர் 4ஆம் தேதி 14இடங்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவானது. அதிக பட்சமாக தண்டையார் பேட்டையில் 250.2, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 247.3, டி.ஜி.பி. அலுவலகம் 237 மில்லி மீட்டர் அளவுகளில் மழை பெய்தது. சென்னையில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் மூலம் மொத்தம் 3.82 டி.எம்.சி. நீர் கிடைத்து இருக்கிறது.
மழையளவுடன் ஒப்பிட்டு பார்த்தால் கடந்தாண்டு பெய்தமழைதான் கடும் மழை. இந்தாண்டு குறைந்தளவுதான் மழை பெய்து இருக்கிறது.இருப்பினும் கடந்தாண்டு ஒரே நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது. இந்தாண்டு மழை ஒரே அளவாக கொட்டாமல் நாள் முழுவதும் சீராக பெய்தது.
ஹமாஸ் தலைவா் கொல்லப்பட்டாலும் சண்டை தொடருமாம்! : இஸ்ரேல் அறிவிப்பு
டெல்அவில், அக்.18 கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் நடைபெற்ற கொடூர தாக்குதல்களின் பின்புலத்தில் உள்ளவராக கருதப்படும் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவா் யாஹா சின்வா், காஸா வில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் நேற்று (17.10.2024) அறிவித்தது.
இஸ்ரேலின் நடவடிக்கையைப் பாராட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், சின்வார் உயிரிழந்துவிட்டது மரபணு பரிசோதனை முடிவுகள் மூலம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் நல்லதொரு நாள்.
ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்கள், அமெரிக்கர்கள், 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் உயிரிழப்புகளுக்கு ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் சின்வார்தான் காரணம். 7.10.2023 அன்று நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், பாலியல் வன்புணர்வுக் கொடூரங்கள், கடத்தல்கள் ஆகியவற்றுக்கு பின்புலத்தில் முக்கியப் புள்ளியாக இருந்தவர் சின்வார்.
சின்வாரின் உத்தரவின்பேரிலேயே, ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குல் ஊடுருவி பொதுமக்களை படுகொலை செய்தனர்” எனத் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவா் யாஹா சின்வாா் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காஸாவில் போர் நிறுத்தத்தம் ஏற்படுமென அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். எனினும், ஹமாஸ் தலைவா் உயிரிழந்தாலும், காஸாவில் போர் இன்னும் முடியவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.