மகாராட்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘இந்து தர்மம்’ என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதோ அல்லது உருவாக்கப்பட்டதோ அல்ல. மாறாக அனைத்து மனித இனத்திற்கும் சொந்தமானது என அங்கீகரிக்கப்பட்டு, அது உலகிற்கு ஒரு மதமாக மாறுகிறது.
தர்மம் என்பது இந்தியாவின் ஸ்வா (சுய)மே தவிர, மதம் அல்ல. இந்தியாவில் பல மதங்கள் இருந்தாலும், அவற்றை இணைக்கும் அடிப்படையான ஆன்மிகமே தர்மத்தை வரையறுப்பதாக இருக்கிறது. தர்மம் இந்தியாவின் உயிர்; அது நமது உத்வேகம்.
அதனால்தான் நம்மிடம் வரலாறு உள்ளது. அதற்காக மக்கள் தங்களை தியாகம் செய்தனர். நாம் யார்? இந்த தர்மம் சர்வசாதாரணமானது; ஸநாதனமானது; மேலும், பிரபஞ்சத்துடன் உருவானது; இது அனைவருக்கும் சொந்தமானது. எனவே, இதை இந்து தர்மம் என்று அழைக்கிறோம். இது மனிதநேயத்திற்கும் உலகத்திற்கும் ஒரு மதம்” என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு ஏதோ பேசி இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் புளகாங்கிதத்தோடு துள்ளிக் குதிக்கிறாரே – முதலில் ஒரு கேள்விக் குப் பதில் சொல்லட்டும்!
‘ஹிந்து மதம்’ என்ற பெயர் இவர்கள் மதத்திற்கு எப்பொழுது பெயர் வந்தது?
இதற்கு நாம் பதில் சொல்வதைவிட மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியை விட்டுப் பதில் சொல்ல வைப்பது தான் சரியாக இருக்கும்.
‘நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு வைத்த பெயர் – ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ஹிந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வோர் ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருகபக்தர், பிள்ளையார் உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனை கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாகப் பிரித்துக் கொண்டிருப்போம்’’ (தெய்வத்தின் குரல் தொகுதி I பக்கம் 266) என்று கூறி இருக்கிறாரே சங்கராச்சாரியார். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் திருவாளர் மோகன் பாகவத்.
சங்கராச்சாரியாரைவிட இந்து மதம் பற்றிப் பேசுவதற்கு அதிக அதிகாரம் படைத்தவரா
ஆர்.எஸ்.எஸ். தலைவர்?
இந்த மதத்துக்குள்ளே ஸ்மார்த்தம், வைணவம், வைணவத்துக்குள்ளேயே வடகலை – தென் கலைச் சண்டைகள்! சிறீரங்கம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென் கலை நாமம் போடுவதா என்ற வழக்கு வெள்ளைக்காரன் ஆட்சியின்போது லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்று சிரிப்பாய்ச் சிரித்ததே!
ஆர்.எஸ்.எஸின் தலைவர்கள் எல்லாம் சித்பவன் பார்ப்பனர்களாக வருவது ஏன்? (இடையில் ஒரே ஒருவரைத் தவிர).
இந்த யோக்கியதையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்து மதம்பற்றி ‘ஆகா ஊகா’ என்று சிலாகிப்பதைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லையே!