நெல்லை, அக்.17- நெல்லை மாவட்டத்திலுள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் அர்ச்சகர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் பரம்பரை அறங்காவலராக இருந்து வருபவர் ராதாகிருஷ்ணன். இக்கோவில் பூசாரிகள், தாங்கள் கோவில் பரம்பரை அர்ச்சகர்கள் என்றும், எங்களை கோவில் பரம்பரை அறங்காவலர் கட்டுப்படுத்த முடியாது என்று கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பரம்பரை அறங்காவலரின் ஒழுங்கு நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் நடக்க வேண்டும், பரம்பரை அர்ச்சகர்கள் என்று கூற உரிமை கிடையாது, அவர்களை பூஜை செய்ய அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டார். இதுகுறித்து கோவில் பூசாரிகள் இந்து அறநிலையத் துறை ஆணையர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து நெல்லை மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சுப்புலட்சுமி, ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் இந்திரா காந்தி, வள்ளியூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் மற்றும்
100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேற்று (16.10.2024) உவரி கோவில் முன்பு குவிக்கப்பட்டனர்.
அர்ச்சகர்கள் போராட்டம்
அதிகாரிகள், கோவில் அர்ச்சகர்களை அழைத்து உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து கூறினர். அதை ஏற்க மறுத்த அர்ச்சகர்கள், சுயம்புலிங்கசுவாமி கோவில், பிரம்மசக்தி அம்மன் கோவில்களில் மேல் பூட்டு போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் சார்பில் நியமிக்கப்பட்ட குருக்கள்கள் மணிகண்டன், ரத்தினசபாபதி ஆகியோரை பணி செய்ய விடாமல் கோவிலுக்குள் சென்று தடுத்தனர். காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது.
பின்னர் சுவாமி நகைகள் கணக்கீடு செய்து சரிபார்க்கப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது. தொடர்ந்து கோவிலில் காவல்துறை பாதுகாப்புபோடப்பட்டது.