இந்தியாவின் முதல் நிதியமைச்சர்
ஆர்.கே. சண்முகம் பிறந்த நாள் (17.10.1892)
‘எனது ஆசான் தந்தை பெரியார்’ என்று காந்தியாரிடம் பெருமையுடன் கூறினார் ஆர்.கே சண்முகம் அவர்கள்.
காந்தியார் அவர்கள் ஒரு சமயம் ஆர்.கே.சண்முகம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். இவர்கள் உரையாட லில் கடவுள், மதம், சாஸ்திரங்கள், பார்ப்பனர்- பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை முதலி யவைகள் முக்கிய இடம் பெற்றிருந்தன.
ஆர்.கே.சண்முகம் அவர்களின் அறிவாற்றல் மிக்க வாதத் திறமை கண்டு காந்தியார் அயர்ந்து போனார்.
காந்தியார் அவர்கள் சண்முகம் அவர்களைப் பார்த்து “ஆமாம் இவ்வளவு அழகாகவும், திறமையாகவும் விவாதிக்கின்றீர்களே இத்துறையில் தங்களுக்குக் குருவாக வாய்த்தவர் யார்? என்று கேட்டார்.
அதற்குச் சண்முகம் அவர்கள். இத்துறையில் எனக்குக் குரு தங்களின் மாஜி சீடரான நமது நண்பர் ஈரோட்டு இராமசாமி நாயக்கர் அவர்களேதாம்” என்று கூறினார்.
இந்தச் செய்தி காந்தியாருக்கு மிக்க ஆச்சரியத்தை அளித்தது. “நமது நாயக்கரா தங்கள் குரு! அவர் இப்படிப்பட்ட கொள்கை உடையவர் என்பது எனக்கு இதுநாள் வரை தெரியாதே. இந்தப் பிரச்சனைகளில் எனக்கும் அவருக்கும் இருக்கின்ற கருத்து மாறுபாடு களைப் பற்றி நாங்கள் இருவரும் சந்தித்து உரையாடித் தீர்த்துக் கொள்ள வேண்டும். எங்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறினார்.
சண்முகம் அவர்களும் அப்படியே ஆகட் டும் என்று கூறி விடைபெற்றுக் கொண்டு வந்து தந்தை பெரியார் அவர்களிடம் நடந்த செய்தியைக் கூறலானார்.
அய்யாவின் மாணக்கராக இருந்த காரணத்தால் காங்கிரஸ்காரராக இல்லாத போதும் காந்தியார் ஆர்.கே சண்முகத்தை இந்திய நிதி அமைச்சராக நியமிக்க நேருவிடம் பரிந்துரை செய்தார்.
ஆர்.கே. சண்முகம் இங்கிலாந்து சென்று பல பொதுக்கூட்டங்களில் இந்திய சுதந்திரம் குறித்து உரையாற்றினார். 1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார். உலக நாணய மாநாட்டில் பங்கேற்றார். 1945இல் மன்னர்கள் சங்கத்திற்கு அரசமைப்பு ஆலோசகராக பணியாற்றினார். இந்தியாவில் உள்ள மிகப் பெரிய – வீட்டு நூலகங்களில் இவருடையதும் ஒன்று. இங்கிலாந்திடம் சிக்கியிருந்த, பல கோடி ரூபாய் வெளிநாட்டுச் செலாவணியையும் தங்க இருப்பையும் சுதந்திரத்திற்குப் பின் தன் வாதத் திறமையால் மீட்டெடுத்தார்.