கடந்த 10 நாட்களாக அரசு விழாவாக நடைபெற்று வந்த மைசூரு தசரா நிகழ்வுகளில் ஒன்றான ஜம்போ சவாரி எனப்படும் 750 கிலோ தங்க அம்பாரியில் யானை மீது சாமுண்டீஸ்வரி அம்மன் நிகழ்வு 12.10.2024 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மலர் தூவி யானை பவனியைத் தொடங்கி வைத்தார் கருநாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா.
அதற்கு முன்னதாக, கருநாடக மாநிலத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு வாகனங்களின் அணிவகுப்பையும் முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். புத்தர், அம்பேத்கர் சிலை மற்றும் படங்கள் இருந்த வாகனம் ஒன்றில் தந்தை பெரியாரின் படமும் இடம்பெற்றிருந்தது.
கருநாடகாவைச் சேர்ந்த இந்து சமய மக்களைப் புண்படுத்தி விட்டதாகவும், இதற்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கருநாடகா மாநில கலாச்சாரத் துறை அமைச்சர் ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க., நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும் கருநாடக மாநிலத்தின் விஜயப்புரா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க., உறுப்பினருமான பசனகவுடா பட்டீல், “தசரா திருவிழாவில் பெரியாரின் படத்தை இடம்பெறச் செய்து, பெருமைப்படுத்துவதாக எண்ணிய சித்தராமையா அரசு, கருநாடகா மக்களையும் சாமுண்டீஸ்வரியையும் அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஹிந்து மத மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் அவமானமாகப் பேசிய பெரியாரைப் பெருமைப்படுத்திய செயலுக்காக மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஆகிய இருவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சரணாரு மற்றும் தாசருவின் பூமியாகக் கருநாடகா இருக்க வேண்டும். பெரியார் மற்றும் அவரைப் பின்பற்றுவோரின் பூமியாக இருக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
தங்க அம்பாரியில் தந்தை பெரியாரின் படத்தை இடம் பெறச் செய்வதால், தந்தை பெரியார் அவர்களுக்குப் புதிதாகப் பெருமை வந்து சேரப் போவதில்லை.
தந்தை பெரியார் தவிர்க்க முடியாத சக்தியாகி விட்டார் என்பதுதான் இதன் உட்பொருள்.
கடலூர் ஞானியார் அடிகளும், மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் தந்தை பெரியாரை எப்படியெல்லாம் பாராட்டியிருக்கிறார்கள். அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
தசரா ஊர்வலத்தில் தந்தை பெரியார் படத்திற்காக ஓலம் போடும் சங்கிகளே, அதில் அம்பேத்கர் படமும், புத்தர் படமும் அலங்கரிக்கின்றனவே – அதற்கு என்ன பதில்?
அம்பேத்கர் ஹிந்து மதத்தை ஏற்றுக் கொண்டவரா? இந்துவாகப் பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன் என்று கூறியதோடு அல்லாமல் பல லட்சம் மக்களுடன் இந்து மதத்திற்குப் பெரு முழுக்குப் போட்டு, பவுத்தம் தழுவினாரே!
இராமன், கிருஷ்ணன் போன்ற இந்துக் கடவுள்களை வணங்க மாட்டேன் – ஏற்க மாட்டேன் என்பது உட்பட 22 உறுதிமொழிகளை – பல லட்சம் மக்கள் உறுதிமொழி கூறி தானே – இந்து மதத்தைப் புறந் தள்ளினர்.
புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று பார்ப்பனீயம் திருகுதாளம் செய்ததுபோல், அம்பேத்கரையும் தம் வயப்படுத்தலாம் என்று வஞ்சக வலை பின்னுகிறார்கள். புத்தர் படத்தையும் ஊர்வல வாகனத்தில் இடம் பெறச் செய்தது எப்படி?
பார்ப்பனீய வேத மதத்தின் கடும் எதிர்ப்பாளர் புத்தர் அல்லவா!
தந்தை பெரியாரையும் சரி, அண்ணல் அம்பேத்கரையும் சரி சங்கிகளால் ஜீரணிக்க முடியாது. அதே நேரத்தில் இவர்களை முன் வைத்துதான் மதம் போணியாக முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது என்பது தெரிய வருகிறது.
தந்தை பெரியாரைத் தவிர்க்கவே முடியாத சக்தியாக கருநாடக முதலமைச்சர் கருதியிருக்கலாம் – இதில் ஒன்றும் பெரியாருக்குப் புதிதாகப் பெருமைவந்து சேரப் போவதில்லை. தந்தை பெரியாரின் சமூகநீதி அங்கு இங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நின்று வழிகாட்டுகிறது என்பதுதான் இதன் முக்கிய அம்சமாகும். கடவுள் இல்லை இல்லவே இல்லை என்பதுதான் தந்தை பெரியாரின் அசைக்க முடியாத ஆளுமையாகும்.
பெரியார் படத்தை ஏன் வைத்தீர்கள் என்று கனவில் வந்து கடவுள் சொல்லவில்லையா?