இறுதி வெற்றி என்பது ராகுல் காந்தியின் பக்கமே!
இந்தியா கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
சென்னை. அக்.15 பெரியாரைப் பின்பற்றி ராகுல் காந்தி பச்சையாக சமூக நீதியைப் பேசுகிறார்! பி.ஜே.பி. எதிர்ப்புக்கு – வெறுப்புக்கு இது முக்கிய காரணம்! இறுதி வெற்றி ராகுல் காந்தியின் பக்கமே என்று இந்தியா கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையில் குறிப்பிட்டார்.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.ஆகிய பாசிச அமைப்பு களின் வெறுப்பு அரசியலைக் கண்டித்தும், எதிர்த்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நேற்று (14.10.2.24) மாலை 5 மணிக்கு மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகையின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ராஜேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், வி.சி.க. நிறுவனத் தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கே.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேணுகோபால், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் முரளி அப்பாஸ், தேவராஜ் அர்ஸ் பேரனும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளருமான சுராஜ் ஹெக்டே, காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ஈ.வெ.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகிேயார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பி.ஜே.பி. பெற்றது தோல்விக்கு
நிகரான வெற்றியே!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது, பி.ஜே.பி.யினர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்விக்குச் சமமான வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி நாற்காலியில் இரண்டு கால் ஒட்டு போடப்பட்டிருக்கிறது என்று கூறினார். மேலும், தனது உரையில், ‘‘இப்போது இரண்டு அணிகள் இருக்கின்றன. ஒரு பக்கம் உண்மையைத் தவிர வேறெதுவும் பேசாத அணி இந்தியா கூட்டணி. மற்றொரு பக்கம் பொய்யைத் தவிர வேறெதையும் பேசாத அணி பா.ஜ.க. அணி என்று உண்மையைப் போட்டுடைத்தார். ‘‘கொள்கை எதிரிகள் அரசியல் சட்டத்தை துளியும் மதிக்காதவர்கள்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘ராகுல் காந்தி மீது அவர்களுக்கு ஏன் இந்த வன்மம்?’’ என்று கேள்வி எழுப்பி, அதற்கு தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றி ராகுல் காந்தி பச்சையாக சமூகநீதியை பேசுகிறார். அதுதான் பி.ஜே.பி.க்கு ராகுல் காந்தி மீது கோபம் என்று அதற்கு பதிலைச் சொல்லி விளக்கினார்.
மேலும் அவர், ராகுல் காந்தி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இறுதியில் அவர்தான் வெற்றி பெறுவார் என்று அரங்கம் எழுச்சியுற பேசினார். தொடக்கத்தில் கருநாடகாவிலிருந்து வந்து கலந்துகொண்டிருகிற தேவராஜ் அர்ஸ் பேரன் சுராஜ் ஹெக்டே பற்றி சமூகநீதிக் கொள்கை ரீதியாக பாராட்டிப் பேசி ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தினார். ராகுல் காந்தி பெரியாரைப் பற்றி, சுயமரியாதை இயக்கம் பற்றி எழுதி அனுப்பி, தந்ைத பெரியார் 146 ஆம் பிறந்தநாள் ‘விடுதலை’ மலரில் வெளியாகி இருந்த அந்தக் கடித்தத்தை கூட்டத்தினரிடையே வாசித்துக்காட்டினார். இதுதான் ராகுல்காந்தியைப் பார்த்து ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அச்சம் கொள்ளக் காரணம். அதனால்தான் பந்தை அடிக்க முடியாத வர்கள் ஆடுகிறவர்களின் காலை அடிக்க முயல்கி றார்கள் என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சை அம்பலப்படுத்திப் பேசி, இந்திய கூட்டணிக்கட்சித்தலைவர்கள் இதே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
தோழர்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் கழகத்தின் துணைப்பொதுச்செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் பார்த்தசாரதி, பி.சி.ஜெயராமன், சுப. சந்திரசேகரன், மோகன்ராஜ், போரூர் தங்கராசு, குணசேகரன், தாமோதரன், சென்னகிருஷ்ணன், உடுமலை வடிவேல், பெரியார் திடல் கலைமணி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், நிலவன், கா.இளவரசன், அருள்தாஸ், பாண்டு உள்ளிட்டோருடன் காங்கிரஸ் மற்றும் அனைத்துக்கட்சி சார்பில் அரங்கம் நிரம்பி வழியும் அளவுக்கு மக்கள் திரண்டு வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.