சென்னை, அக்.14- பள்ளி வேலை நாள்களை 210 நாள்களாக குறைத்து, திருத்தப்பட்ட கல்வியாண்டு நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி வேலை நாள்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வி யாண்டு நாள்காட்டி 2018 முதல் ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு கல்வியாண்டுக் கான (2024-2025) நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஜூன் 8ஆம் தேதி வெளியிட்டது. அதில் 220 தினங்கள் பள்ளி வேலைநாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. மேலும் 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இதனால் பணிச் சுமையை குறைக்கும் வகையில் வேலை நாள்களை குறைக்க வேண்டுமென பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அதையேற்று பள்ளி வேலை நாள்களின் எண்ணிக்கையை 210 நாள்களாக குறைத்து கடந்த செப்டம்பரில் அறிவிப்பு வெளி யானது. தொடர்ந்து திருத்தப்பட்ட கல்வியாண்டு நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் 19 சனிக்கிழமைகளில் வகுப்புகள் இருந்ததை மாற்றி, 4 சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் என்று குறிப்பிடப்பட் டுள்ளன. அதில் ஏற்கெனவே 2 சனிக்கிழமைகளில் வகுப்புகள் முடிந்துவிட்டன.
இதனுடன் பழைய நாள்காட் டியில் பள்ளி இறுதி வேலை நாள்கள் ஏப்ரல் 25ஆம் தேதியாக இருந்தது. அது தற்போது ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வேலை நாள்கள் 210 நாள்களுக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.