சென்னை, அக். 11- தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு பன்னாட்டு நிதி நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். “புதிய திட்டங்களை தொடங்குவதிலும் அதை நேர்த்தியாக செயல் படுத்துவதிலும் திராவிட மாடல் அரசு முன்மாதிரியாக திகழ்கிறது. கிராமங்களில் மகளிர் தொழில்முனைவோராக உயர வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் அங்கீகரிக்கப்பட்டு இருப்பது திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ள பெருமை” என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; ‘புதிய திட்டங்களைத் தொடங்குவதில் மட்டுமல்ல, நடைமுறையில் இருக்கும் திட்டங்களை நேர்த்தியாக செயல்படுத்துவதிலும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது.
அதற்குச் சான்றாக, கிராமங்களில் உள்ள மகளிர் தொழில் முனைவோராக உயர – பொருளாதார தன்னிறைவு பெற வழி வகை செய்து வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், பன்னாட்டு நிதி நிறுவனத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் மகளிரின் மேம்பாட்டிற்காகச் செயல்படுத்தப் படும் திட்டங்களில் தலைசிறந்த திட்டமாக, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் அங்கீகரிக்கப்பட்டு இருப்பது, எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் நம் திராவிட மாடல் அரசுக்குக் கிடைத்துள்ள பெருமை.
இத்திட்டத்தின் வெற்றிக்காக உழைத்து வரும் அதிகாரிகள் – அலுவலர்களுக்கும், இதன் பயனாளிகளாக மட்டுமன்றி பங்கேற்பாளர்களாகவும் சாதனைப் படைக்கும் மகளிருக்கும் என் அன்பு நிறைந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.