எழுத்துரிமை, கருத்துரிமை, ஜனநாயக உரிமைக்குப் போராடுவதுதான் அவருக்கு நாம் காட்டக்கூடிய மிகப்பெரிய நினைவஞ்சலி – புகழஞ்சலி!
இறுதி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்’
சென்னை, அக்.11 ஒப்பிலாத, ஒப்பிடப்பட முடியாத ஒரு சிறந்த மனிதர், தலைசிறந்த எழுத்தாளர், கருத்தாளர். எழுத்துரிமைக்கான ஒரு போராளி என்ற பெருமை பெற்ற அருமைச் சகோதரர் ‘முரசொலி’ செல்வம் அவர்கள் மறைந்தார் என்பதை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; ‘முரசொலி’ செல்வம் அவர்கள் காத்த அந்த எழுத்துரிமை, கருத்துரிமை, ஜனநாயக உரிமைக்குப் போராடுவதுதான் அவருக்கு நாம் காட்டக்கூடிய மிகப்பெரிய நினைவஞ்சலி – புகழஞ்சலி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கழகத் தலைவர் இறுதி மரியாதை!
மறைந்த ‘முரசொலி’ செல்வம் அவர்களின் உடலுக்கு இன்று (11.10.2024) மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
அருமைத் தோழர் ‘முரசொலி’யில் ஏறத்தாழ 50 ஆண்டுகாலத்திற்குமேல் பொறுப்பாளராகவும், ஆசிரியராகவும் இருந்த தலைசிறந்த எழுத்தாளர், கருத்தாளர். எழுத்துரிமைக்கான ஒரு போராளி என்ற பெருமை பெற்ற அருமைச் சகோதரர் ‘முரசொலி’ செல்வம் அவர்கள் மறைந்தார் என்பதை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், அவருடைய எழுத்துகள்.
சற்று நேரத்திற்கு முன் முதலமைச்சர் அவர்க ளிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது சொன்னார், ‘‘நேற்றுகூட அவர் எழுதுவதற்கு முயற்சி செய்து, கடைசிவரையில் சிலவற்றை எழுதி, நான் அடுத்த படியாக எழுதவேண்டிய செய்திகள் இருக்கின்றன என்று ஆரம்பித்திருக்கிறார். பிறகுதான், அவர் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டிய நேரத்தில் மறைந்தார்’’ என்று அவர் சொன்னது அதிர்ச்சிக்குரியதாக இருந்தது.
அவரை கூண்டுக்குள்ளே நிறுத்தினாலும் சரி, அல்லது ‘முரசொலி‘ அலுவலகத்தில் இருந்தாலும் சரி, ஒரு தலைசிறந்த ஆசிரியராக இருந்தார். அதைவிட, சிறந்த திராவிட இயக்கத்தினுடைய ஒப்பற்ற கருத்து ரிமை போராளியாகவும் அவர் கூண்டுக்குள்ளே நின்றார்.
ஒப்பிலாத, ஒப்பிடப்பட முடியாத
ஒரு சிறந்த மனிதர்
எல்லா தோழர்களிடமும் மிக அருமையாகப் பழகக்கூடிய ஒப்பிலாத, ஒப்பிடப்பட முடியாத ஒரு சிறந்த மனிதர் அவர்.
அவருடைய இழப்பு என்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்றாலும், தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப்போல, ‘‘எதைத் தவிர்க்க முடியாதோ, அதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்’’ என்பதுதான் பகுத்தறிவாளர்களுடைய கருத்தாகும்.
அதுபோலவே, அண்ணா அவர்கள் ‘‘எதையும் தாங்கும் இதயம்’’ என்று சொன்னார்கள். இதையும் தாங்கவேண்டும்.
‘முரசொலி’ செல்வம் அவர்கள் காத்த அந்த எழுத்துரிமை, கருத்துரிமை, ஜனநாயக உரிமைக்குப் போராடுவதுதான் அவருக்கு நாம் காட்டக்கூடிய மிகப்பெரிய நினைவஞ்சலி – புகழஞ்சலி அதுதான் மிக முக்கியமானதாகும்!
தாய்க்கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல், ஆறுதல்!
அவருடைய குடும்பத்திற்கு, குறிப்பாக அவரு டைய வாழ்விணையரான அருமை செல்வி அவர்க ளுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், நம்முடைய மானமிகு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் எங்களுடைய தாய்க்கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்; அவர்கள் ஆறுதல் பெறவேண்டும்.
செல்வி போன்றவர்கள் மீண்டும் தனது பணியை, இயக்கப் பணியைத் தொடர்வதுதான் அவருக்கு ஆறுதல் என்று கூறி முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறினார்.
தமிழர் தலைவர் ஆசிரியருடன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேசு, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், க.கலைமணி, நிலவன், முரளிகிருஷ்ணன், பூவரசன், யுகேஷ், அருள், விஜயகுமார், வெங்கடேசன் ஆகியோர் சென்றிருந்தனர்.