பெரியாருடைய உலகப் பயணங்களுக்கும், மற்ற தலைவர்களின் பயணங்களுக்கும் வேறுபாடு உண்டு!
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகத்தான் தந்தை பெரியார் மலேயா சென்றார்!
சென்னை, அக்.9 தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் மலேயா சென்றார். பெரியாருடைய உலகப் பயணங்களுக்கும், மற்ற தலைவர்களின் பயணங்களுக்கும் வேறுபாடு உண்டு. மற்ற தலைவர்கள் சில முக்கியமான இடங்களைப் பார்த்துவிட்டும், சில தலைவர்களைப் பார்த்தும், கைகுலுக்கிவிட்டு வருவார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் மக்களைச் சந்தித்தார். மக்கள் எங்கே இருக்கிறார்களோ, அங்கே போய் அவர்களைச் சந்தித்தார். தந்தை பெரியாருடைய அறிவுரைகளை அந்த மக்கள் மிகப்பெரிய அளவிற்கு வரவேற்றனர். என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – பெரியார் பெருந்தொண்டர் வீரா.முனுசாமிக்கு பாராட்டு விழா
கடந்த 5.10.2024 காலை காணொலிமூலம் நடை பெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா- வீரா.முனுசாமி அவர்களுக்குப் பாராட்டு விழாவில் – திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
1953 ஆம் ஆண்டு, உலக பவுத்தர்கள் மாநாடு!
குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய நிகழ்ச்சியாகும். பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆதிகாலத்திலேயே மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பின்பற்றி, தந்தை பெரியார் அவர்களை 1929 ஆம் ஆண்டிலும், 1953, 1954 ஆம் ஆண்டிலும் அழைத்து, மிகச் சிறப்பாகப் பெருமைப்படுத்தினார்கள். அதேபோலத்தான், பர்மா நாடு, 1953 ஆம் ஆண்டு, உலக பவுத்தர்கள் மாநாடு அங்கு நடைபெற்ற நேரத்தில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், தந்தை பெரியார் அவர்களை மாநாட்டிற்கு அழையுங்கள் என்று அன்றைய மல்லையா சேகரா அவர்களிடத்தில் சொன்னார்கள்.
அதன்படி, அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, உலக பவுத்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார் கலந்துகொண்டு, இரு தலைவர்களும் கலந்தா லோசித்துப் பேசி, மிக முக்கியமான ஒரு பெரிய திருப்பத்தை உண்டாக்கினார்கள்.
பர்மா சுயமரியாதை இயக்கம்
மியான்மா நாடு என்று இப்பொழுது பெயர் பெற்றுள்ள அப்படிப்பட்ட இந்த நாட்டிலே, ஆரம்ப காலத்தில் இருந்து பர்மா சுயமரியாதை இயக்கம் என்ற தலைப்பில், வீரா.முனுசாமி தலைவராகக் கொண்டு நடத்திய அந்தக் காலகட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள் சென்றபொழுது, ஒரு தொண்டனாக, ஓர் இளைஞனாக இருந்து மிகப்பெரிய அளவில் தொண்டாற்றி, தொடர்ந்து, தனக்கு எவ்விதமான சிக்கல்கள் வாழ்க்கையில் ஏற்பட்டாலும், அதைப்பற்றி கவலைப்படாது புறந்தள்ளி, அனைத்து மக்களையும் ஒன்றாக்கி, ஒரு நல்ல ஒருங்கிணைப்பை பர்மா நாட்டிலே, மியான்மா நாட்டிலே அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசியல் கலவாமல் நடந்துகொண்டிருக்கக் கூடிய எங்கள் பெருமைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துதலுக்கும் உரிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை வீரர் 91 வயது காணக்கூடிய அய்யா வீரா.முனுசாமி அவர்களே,
30 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கின்ற பெரியார் பன்னாட்டமைப்பு!
அதேபோல, இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கக் கூடிய பெரியார் பன்னாட்டமைப்பு – 30 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கின்ற ஓர் அமைப்பு. உலகம் முழுவதும் அதன் சிறகை விரித்துப் பறந்துகொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட அமைப்பினுடைய மிகச் சிறப்பான செயல்படும் தலைவராக இருக்கக்கூடிய அய்யா டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே,
அந்த அமைப்பிற்குப் பெருந்துணையாக இருக்கக் கூடிய அருமை இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்களே,
மியான்மா நாட்டுத் தோழர்கள் சந்திரசேகர் அவர்களே, ராஜ்குமார் அவர்களே, மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தின் மதியுரைஞரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான அருமைச் சகோதரர் முத்தையா அவர்களே,
அமெரிக்காவில் இந்தப் பணியை செய்து கொண்டிருக்கக்கூடிய பெரியார் பன்னாட்டமைப்பின் மகளிர் அணியின் பொறுப்பையும் ஏற்று, சிறப்பான உழைப்பாளராக இருக்கக்கூடிய அருமைத் தோழர்கள் டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்களே,
விஜய் சாந்தலிங்கம் அவர்களே, இளமாறன் அவர்களே, மதுரை சிவக்குமார் சண்முகம் அவர்களே, மியான்மா கலைச்செல்வன் கருணாநிதி அவர்களே, மும்பை ரவிச்சந்திரன் அவர்களே, நன்றியுரை கூறவி ருக்கக்கூடிய கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,
மலேசிய திராவிடர் கழகத்தின் சார்பிலும், தனித்த முறையிலும் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர் நல்ல சிந்தனையாளர், எழுத்தாளரான அன்பழகன் அவர்களே,
‘திராவிடப் பொழில்’ இதழின் நிர்வாக ஆசிரியர்களில் ஒருவரான மதுரை தோழர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு அவர்களே,
பெரியார் உயராய்வு மய்யத்தின் தலைவரும், சீரிய எழுத்தாளருமான பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களே,
பகுத்தறிவு முறையில், ஓர் அற்புதமான ஊடகத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மா.அழகிரிசாமி அவர்களே, நம்முடைய இயக்கத்திற்குத் தோன்றாத் துணையாக இருக்கக்கூடிய, எப்பொழுதும் பெரியார் திடலுக்கு உகந்தவராக இருக்கக்கூடிய முனைவர்
த.கு. திவாகரன் அவர்களே,
அதேபோன்று, விரைவில் 50 ஆண்டுகள் – பவள விழா காணுகின்ற தோழியர் தமிழ்மணி வேலாயுதம் அவர்களே,
மற்றும் இந்த நிகழ்வினைப் பார்த்து, கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய பல நூற்றுக்கணக்கான தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத
ஓர் அற்புதமான மகிழ்ச்சி!
இந்த நாள், தலைவர் சோம.இளங்கோவன் அவர்கள் சொன்னதைப்போல, ஒரு மகிழ்ச்சியான வாழ்வியல் திருநாள். காரணம், நான் எல்லையற்ற மகிழ்ச்சியை, வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத ஓர் அற்புதமான மகிழ்ச்சியை இன்றைக்கு நான் வீரா.முனுசாமி அவர்களைப் பார்க்கின்றபொழுது பெறுகிறேன்.
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு,
வீரா.முனுசாமியை பார்க்கின்றேன்
என்னுடைய சகோதரர் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, அவரைப் பார்க்கின்றேன். கோவிட் காலத்தில், யார் யார் இருக்கிறார்கள். யார் இல்லை என்கிற செய்திகள் தெரியாத காலகட்டத்தில், அவருடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், பல தோழர்கள் அங்கே இருந்து வரும்பொழுதெல்லாம், அவரிடம் கடிதத்தை வாங்கிக் கொண்டு வருவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், பெரியார் பிறந்த நாள் மலர் வெளியிடும்பொழுது, அவரிடமிருந்து கட்டுரை வாங்கிப் போடுவோம். மியான்மா நாட்டில், சுயமரியாதை இயக்கத்தினுடைய பெருமைகளைப்பற்றி எழுதுவார்.
மறைந்தும் மறையாமல் நம்முடைய நெஞ்சங்களில் நிறைந்திருக்கக் கூடிய அருமை நண்பர் சுயமரியாதைச் சுடரொளி நாரா.நாச்சியப்பன் அவர்கள், அங்கே பெரியார் சென்றபொழுது, அவர்களும், பெரியாரோடு ஒத்துழைத்தார்கள்.
அவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூலின் ஒரு பகுதியை எடுத்து, இந்த ஆண்டு மலரில் வெளியிட்டு இருக்கின்றோம்.
இந்த ஆண்டு, சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு – இந்த நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் – உலகம் முழுவதும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல – இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேசத்திலிருந்து பெரியார் விழாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அங்கே இருக்கின்ற ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அழைத்தார்கள்.
‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்!’’
அதேபோன்று, எல்லா இடங்களிலும் ‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்!” என்றாகி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக, மியான்மா நாட்டில் அம்பேத்கர் – பெரியார் சந்திப்பு என்பது, நான்காவது, அய்ந்தாவது முறை சந்திப்பாகும். ஏறத்தாழ, அதுவே கடைசி சந்திப்பு என்றுகூட சொல்லலாம்.
அப்படிப்பட்ட ஒரு பெரிய வரலாறு இந்த நாட்டிற்கு உண்டு. அதேநேரத்தில், நம்முடைய வீரா.முனுசாமி அவர்கள் எளியவர் என்றாலும், வலிமைமிக்கவர். கொள்கை வாய்ப்புள்ளவர்கள், தொண்டறத்தைத் தவிர, இல்லறத்தைப்பற்றி கூட அவர்கள் கவலைப்பட்டதே கிடையாது. அப்படிப்பட்ட தன்னலங்கருதாத ஒருவரு டைய உழைப்பால், பவுத்த மொழியில், பேராசிரியர் சாகு அவர்கள், பெரியார் வாழ்க்கை வரலாற்றை பர்மிய மொழியில், மொழியாக்கம் செய்வதற்கு, மிகப்பெரிய உறுதுணையாகவும், உந்துசக்தியாகவும் இருந்தார்.
நமக்கெல்லாம் பேராதரவாளராக இருந்த சர்மா!
இரண்டு முறை அவர்களுடைய அழைப்பை ஏற்று, நான் அங்கு சென்றேன். காலஞ்சென்ற சர்மா அவர்கள், ஹிந்து அமைப்பினுடைய தலைவராக அங்கே இருந்தாலும், அவருடைய விருந்தினராகவும், வீரா.முனுசாமி அவர்களுக்குப் புரவலராகவும், நமக்கெல்லாம் பேராதரவாளராகவும் அவர் இருந்தார். அவருடைய மறைவு என்பது ஒப்பற்ற ஓர் இழப்பு.
அதேபோல, எண்ணற்ற தோழர்கள் அங்கே உழைத்தார்கள், மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றார்கள்.
அப்படிப்பட்ட சூழலில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டை கொண்டாடுகின்றபொழுது, இந்த இணைப்பிற்கு ஏற்பாடு செய்ததன்படி நம்முடைய தோழர்களுக்கு மிக முக்கியமான ஒரு வாய்ப்பாகும்.
அவர் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அங்கே வந்து, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றக் கூடிய சகோதரர்தான், நீண்ட நாள்களாக விடுபட்டிருந்த இணைப்பை சரிப்படுத்தியவர். அவருக்கு என்னுடைய அன்பான நன்றியை இந்த நேரத்தில் உரித்தாக்கிக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
அய்யா முனுசாமி அவர்களைப்பற்றி, எனக்கு ஒரு தகவலும் வரவில்லையே என்று நாங்கள் எல்லாம் மிகவும் கவலையுடன் இருந்தோம்.
காணாமல் போன புதையலைக் கண்டெடுத்த மகிழ்ச்சியைப் பெறுகிறோம்!
ஆனால், இப்பொழுது அவரை நேரில் பார்த்த பொழுது, ஏதோ காணாமல் போன புதையலைக் கண்டெடுத்த மகிழ்ச்சியை நாங்கள் எல்லாம் பெறு கிறோம். அப்படிப்பட்ட அவருடைய உழைப்பு சாதாரணமானதல்ல.
அந்தக் காலத்தில் முதன்முறையாக, மூன்று நாடுகள்தான் – தென்கிழக்கு ஆசியப் பகுதியில். முத லில் மலேசிய நாடு – 1929 ஆம் ஆண்டில், அன்னை நாகம்மையார் அவர்களோடு தந்தை பெரியார் சென்றார்.
1953-1954 ஆம் ஆண்டில், அன்றைய பர்மா, இன்றைய மியான்மாவுக்கு அன்னை மணியம்மை யாரோடு தந்தை பெரியார் சென்றார்.
பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரில்….
அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு பெரிய எதிர்ப்பு களை சமாளித்து வந்தார்கள் என்பது சாதாரணமான விஷயமல்ல – அந்தச் செய்திகளையெல்லாம் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய அருமை நண்பர் கவிஞர் நாரா.நாச்சியப்பன் அவர்கள் எழுதிய நூலிலிருந்து, இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரில் ஒரு பகுதியை எடுத்து வெளியிட்டு இருக்கின்றோம். அதனை இளைஞர்கள் படித்துத் தெளிவுபெறவேண்டும்.
இந்த ஆண்டு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மலராக இருக்கின்ற காரணத்தினால், இந்த மலரில், மிக முக்கியமான கட்டுரையாக இரண்டு கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.
ஒன்று, நம்முடைய வீரா.முனுசாமி அவர்களிடமிருந்து வந்த கட்டுரை. அந்தக் கட்டுரையில், வீரா.முனுசாமி அவர்களும், நானும் இருக்கக்கூடிய ஒளிப்படத்தையும் போட்டிருக்கின்றோம்.(ஒளிப்படம் 6 பக்கம் காண்க).
‘‘மியான்மா சுயமரியாதை இயக்கத் தலைவர் மானமிகு வீரா.முனுசாமி (வயது 91)” என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கின்றோம்.
அதில்,
‘நீங்கள் என் பிள்ளைகள் –
இலவசமாகவே படம் எடுத்துக் கொள்ளலாம்: தந்தை பெரியார்!
‘‘பெரியார் தம்முடன் புகைப்படம் எடுத்துக்கொள்பவர்களுக்கு ரூபாய் அய்ந்து கட்டணம் வைத்தார்; பலர் அய்ந்து ரூபாய் கொடுத்து பெரியாருடன் படம் எடுத்துக்கொண்டார்கள். பர்மா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஒருவர் – ஏழைத் தொழிலாளி.
“நாங்கள்கூட பணம் கொடுத்துத்தான் படம் எடுத்துக் கொள்ள வேண்டுமா?” என்று கேட்டார்.
‘‘நீங்கள் என் பிள்ளைகள். உங்களுக்குக் கட்டாயமில்லை. பர்மா தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் இலவசமாகவே படம் எடுத்துக்கொள்ளலாம்” என்று பெரியார் விதிவிலக்கு அறிவித்துவிட்டார்.” அந்தச் செய்திகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சின்னச் சின்ன பெட்டிச் செய்திகள்!
தந்தை பெரியாரின் பர்மா பயணத்தில் நடைபெற்ற சின்னச் சின்ன செய்திகளைப் பெட்டிச் செய்திகளாகப் பதிவு செய்திருக்கிறோம்.
உலக அளவில் தந்தை பெரியாரின் தொண்டு எப்படியெல்லாம் சிறப்பாக இருந்தது என்பதை இங்கே எடுத்துக் காட்டக்கூடிய ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் பர்மா பயணத்தின்போது நடைபெற்ற இன்னொரு சுவையான நிகழ்வினை சொல்கிறேன், கேளுங்கள்.
அவர் (தந்தை பெரியார்) இந்தியப் “பொங்கி!’’
‘‘பர்மாவில் கார் வைத்திருந்த நண்பர் ஒருவர் பெரியாருக்கு நகர் சுற்றிப் பார்ப்பதற்கென்று ஒரு நாள் தம் காரைக் கொடுத்திருந்தார்.
துறைமுகப் பகுதியில் சென்று கொண்டிருந்தோம். போலீஸ்காரர்கள் யாரும் காணப்படவில்லை என்ற எண்ணத்தில் காரோட்டி ‘நோ என்ட்ரி’ போட்டிருந்த பகுதியில் நுழைந்தார். உடனே ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்த போலீஸ்காரன் காரை நிறுத்தினான்.
அவன் காரோட்டியைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது, சற்றுத் தொலைவிலிருந்து ஓர் அதிகாரி ஓடிவந்தார்.
அந்தப் போலீஸ்காரனைக் கோபித்துக் கொண்டார். ‘உள்ளே இருப்பவரை நீ பார்க்கவில்லையா? அவர் இந்தியப் “பொங்கி”, (பவுத்த பிட்சு) பேசாமல் இரு’ என்று சொல்லி, காரைப் போக அனுமதித்தார்.
காரோட்டி, சரியான பாதையில் செல்வதற்காக காரைப் பின்னுக்குச் செலுத்தினார்.
‘‘அப்படிப் போனால், சுற்றுவழி. நீ இப்படியே போ’ என்று ‘நோ என்ட்ரி’ வழியாகவே போக வற்புறுத்தினார் அந்தப் போலீஸ் மேலதிகாரி.”
அன்றைக்கு 15 வயது இளைஞர்
வீரா.முனுசாமி அவர்கள்!
பழைய வரலாறை நினைவூட்டி நம்முடைய வீரா.முனுசாமி அவர்கள் சொல்லுகிறார். அவர்களுக்குத்தான் அந்த வரலாறு தெரியும், மற்றவர்களைவிட. அன்றைக்கு 15 வயது இளைஞராக இருந்தபொழுது தன்னை இந்த இயக்கத்தில் ஒப்படைத்துக் கொண்டவர் அவர். இன்றைக்கு அவருக்கு வயது 91.
ஆகவே, பர்மாவில் சுயமரியாதை இயக்கத்தினுடைய வரலாறே, ஓர் ஆராய்ச்சிக்குரிய, பிஎச்.டி., ஆய்வுக்குரிய வரலாறாகும். அங்கே அரசியல் கிடையாது.
தந்தை பெரியார் அவர்கள் அங்கே சென்றபொழுது, அங்கே அவர் என்ன பேசினார் என்கிற குறிப்புகளும் இருக்கின்றன.
தோட்டத் தொழிலாளர்களிடையே
தந்தை பெரியார்
‘‘நீங்கள் இங்கே தொழிலாளர்களாக, பணியா ளர்களாக நம்முடைய நாட்டிலிருந்து வந்து, இங்கே கடுமையாக உழைக்கின்றீர்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் செலவு செய்து விடாதீர்கள். அதை சேமித்து வைத்து, உங்களை நீங்கள் முன்னேற்றிக் கொள்ளுங்கள்.
எந்த நாட்டில் இருந்தாலும், எந்த அரசாக இருந்தாலும், நீங்கள் எல்லாம் அந்த அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருங்கள்; அந்த அரசாங்கத்திற்குக் கீழ்படிந்து நடந்துகொள்ளுங்கள்; அதன்மூலம் உங்கள் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பிருக்கும்” என்று மிக அழகாக பொறுப்போடு ஒரு தலைவர், அந்த நாட்டிற்குப் புலம்பெயர்ந்த மக்களுக்கு, அங்கே போய் இருக்கக்கூடிய மக்களுக்கு அறிவுரை சொல்லி, அவர்களுடைய வாழ்வில், வளமும் முன்னேற்றமும் எவ்வளவு கொண்டு வர முடியுமோ அதனைச் செய்தார்.
தோழர் வீரா.முனுசாமியின் கட்டுரை
தோழர் வீரா.முனுசாமி அவர்கள் ‘பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரில் எழுதியுள்ள கட்டுரையில்,
‘‘17.9.1973 இல் இரங்கூனில் மேலை நாட்டின் முதுபெரும் புத்தகுரு பிரிட்ரீஜ் (The Most Rev. FRIEDRICH V.LUSTIG) தலைமையில் நடைபெற்ற தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – மேற்படி விழாவிற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அனுப்பிய வாழ்த்து செய்தி, அன்னை மணியம்மையார் மறைவையொட்டி பர்மா திராவிடர் கழகத்தின் சார்பில் 16.7.1978 இல் மலகானில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தின் துண்டறிக்கை, பர்மாவில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய ஒளிப்படம் என நிறைய செய்திகளைச் சேகரித்து அனுப்பி வைத்திருந்தார்.
1973இல் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா குறித்த செய்தியில் அரிய தகவல்களைக் காண முடிந்தது.
பர்மாவில் சுயமரியாதை இயக்கம் அமைக்கப்பெற்ற ஆண்டு 1931. பழம்பெரும் தேசத்தியாகி கொ.நா.சுப்பையா நாயுடு, டி.எம்.எஸ்.கனகசபை, சண்முகானந்தம் முதலியோர் அவ்வியக்கத்தில் முக்கிய பொறுப்பேற்று செயலாற்றியுள்ளனர். இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு அந்த இயக்கம் செயல்படவில்லை.
1950இல் கம்பை வட்டாரத்தில் ஏ.என்.குருசிங்கம் (வள்ளல் ஆ.ஆ.நாகலிங்கத்தேவர் அவர்களின் மைந்தர்), வீரா.முனுசாமி, வி.கருப்பையா, நா.தங்கவேலு, அ.நட ராஜன் ஆகியோர் முயற்சியில் பாரதிதாசன் வாசகசாலை அமைக்கப்பட்டது. ஏ.என்.குருசிங்கம் தலைமையில் பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி வந்துள்ளனர்.
திரு. ஏ.என்.குருசிங்கம் மறைவிற்குப் பின் வீரா.முனுசாமி தலைமையில் இளந்தமிழர் முன்னேற்ற இயக்கம், திருவள்ளுவர் கல்விக்கழகம் ஆகிய அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. பின்னர் 1971 இல் தந்தை பெரியார் பிறந்தநாளில் மீண்டும் அவகலாப்பா நகரில் சுயமரியாதை இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
1961 ஆம் ஆண்டு
பர்மாவில் பெரியார் பிறந்த நாள் விழா!
பர்மாவில் பெரியார் பிறந்தநாள்விழா முதன்முதலாக 1961 இல் கொண்டாடப்பட்டுள்ளது. பெரியார் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பிவந்த திருவள்ளுவர் கல்விக் கழகத்தின் சார்பில் இரங்கூன் தென் அவ கலாப்பா நகரில் 22.10.1961 இல் அந்த விழா நடை பெற்றுள்ளது. அப்போது திருவள்ளுவர் கல்விக் கழகத்தின் தலைவராக இருந்து அதற்கு முழு முயற்சி எடுத்தவர் வீரா.முனுசாமி அவர்கள்.
வீரா.முனுசாமி, 1957இல் பெரியார் வாழ்க்கை வரலாற்றை ‘பகுத்தறிவியக்கத் தோன்றல் பெரியார்’ என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை ‘தொண்டன்’ நாளிதழில் 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16, 18 ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளது.
ஏ.என்.குருசிங்கம்
தோழர் வீரா.முனுசாமி அவர்கள் 17.3.1934 இல் திருக்கம்பை மாநகரில் சேது.வீராச்சாமி – வள்ளியம்மை தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். திருக்கம்பை மாநகரில் இயங்கிவந்த பாரதிதாசன் வாசக சாலைதான் தனக்கு ‘தமிழின் குருகுலம்’ என்றும் அந்த இயக்கத்தை வழி நடத்திய ஏ.என்.குருசிங்கம் அவர்கள்தான் பள்ளிப் பருவத்திலேயே பெரியாரின் பகுத்தறிவுக் கோட்பாடுகளைப் போதித்துத் தன்னைப் பொதுவாழ்க்கையில் தடம் பதிக்கச் செய்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1950-களிலேயே மியான்மா நாட்டில் வெளிவந்த ரஸிகரஞ்சனி, தொண்டன் போன்ற நாளிதழ்களில் எழுதியவர் அருமைத் தோழர் வீரா.முனுசாமி. ‘தொண்டன்’ நாளிதழில் ‘முடிகொண்டான் முனுசாமி’ என்ற புனைபெயரில் ‘திராவிடத் தலைவர் பெரியார்!’ என்ற தலைப்பில் சிறப்பாக அவர் எழுதிய கட்டுரை 1962 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 இல் வெளிவந்துள்ளது.
பர்மா வரலாற்றை தற்போது எழுதிக் கொண்டிருப்ப தாகவும் அது நிறைவு பெற்றால் தந்தை பெரியார் பர்மா வருகை, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வருகை குறித்த வெளிவராத செய்திகளை எல்லாம் அந்தப் புத்தகத்தில் காணலாம்” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
அருமைத் தோழர்களே, தோழர் முனுசாமி அவர்க ளுக்கு நமது அனைவருடைய பாராட்டும், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கம், உலகத்தில் ஆழ்ந்து வேரோடி இருக்கிறது மிகப்பெரிய அளவில். அது ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி இருக்கக்கூடிய இந்த இயக்கத்தினுடைய வேர்களில் மிக முக்கியமானவர் தோழர் வீரா.முனுசாமி அவர்கள்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்று பாடுபடக் கூடிய ஓர் இயக்கம்!
விழுதுகள், நம் கண்ணுக்குத் தெரியாமலேயே உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்த இயக்கம் அரசியல் இயக்கம் அல்ல. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்; மக்கள் நலன்சார்ந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று பாடுபடக் கூடிய ஓர் இயக்கம்.
‘குடிஅரசு’ பத்திரிகையின்
மோனோகிராம்!
‘குடிஅரசு’ பத்திரிகைதான் அதனுடய தொடக்கம். அந்தக் ‘குடிஅரசு’ பத்திரிகையில், மோனோகிராம் என்ற முனைப்பிலேயே,
‘‘அனைத்துயிர் ஒன்றறென்றெண்ணி,
அரும்பசி யெவற்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும்தானே!” என்று கேள்வி கேட்டார்.
சுயமரியாதை இயக்கத்தின் தொண்டு உலகளாவிய தொண்டு!
இது எந்த நாட்டிற்கும் பொருந்தும். உலக மனித குலத்திற்கே பொருந்தக்கூடியது. எனவே, பெரியாரின் பார்வை, சுயமரியாதை இயக்கத்தின் தொண்டு உலகளாவிய தொண்டு.
‘‘இன்னார்க்கு இது” என்பதைத் தவிர, ‘‘எல்லோருக்கும் எல்லாம்” என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம்.
சுயமரியாதை இயக்கம் என்பதைப்பற்றி தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், ஒரு என்ஜினுக்குத் தோல் பட்டையைப் போட்டு சுற்ற வைத்தால், அந்த என்ஜின் முதலில் மெதுவாக சுழல ஆரம்பிக்கும். பிறகு அது வேகமாக சுழலும்.
அதுபோலத்தான், இன்றைக்கு நாம் தமிழ்நாட்டில் சிறு வகுப்பாரோடு போராடி சமூகநீதிக்காகப் பாடுபட வேண்டும் என்று சொன்னாலும், எதிர்காலத்தில், அது உலகளாவிய இயக்கமாக ஆகும் என்றார்.
அந்த உலகளாவிய இயக்கத்தை, தான் வாழும்போதே அதனுடைய வெற்றியைக் கண்டார் தந்தை பெரியார்.
சுயமரியாதை இயக்கம் என்ன சாதித்துவிட்டது என்று இந்த நூற்றாண்டிலே கேட்டால், சுயமரியாதை இயக்கத்தால் பலன் பெறாதவர்கள் தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி, எந்தப் பகுதிகளில் இருப்ப வர்களானாலும் சரி, இல்லை என்று சொல்ல முடியாது.
ஒருவருக்கு காற்றின் முக்கியத்துவம்
எப்பொழுது தெரியும்?
சுவாசிக்கின்றவர்கள் காற்றைப் பற்றி கவலைப்படு வதில்லை. எப்பொழுது அந்தக் காற்றின் முக்கியத்துவம் மிகத் தெளிவாக தெரியும் என்று சொன்னால், ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்பொழுதுதான். அந்த மூச்சுத் திணறலின்போதுதான், ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும். அதேபோன்று அறுவைச் சிகிச்சை செய்யும்பொழுதும் தேவைப்படும். அப்பொழுதுதான் அந்த மூச்சுக் காற்றின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்வார்கள்.
அதுவரை மூச்சுக் காற்றின் முக்கியத்துவம் யாருக்கும் தெரியாது. அது ஓய்வெடுக்காத ஒன்றாகும். அதுபோல, தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம், தமிழ் மக்களுடைய, உலக தமிழ் மக்களுடைய, மானிடப் பரப்பின் ஓய்வெடுக்காத, ஓய்வெடுக்கக் கூடாத ஓர் அற்புதமான தொண்டறம் செய்யக்கூடிய இயக்கமாகும்.
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பிரச்சினை உண்டு. அந்தந்த நாட்டில் தேவைப்படுகின்றபொழுது, அதனை மக்கள் முன் நிறுத்திக் கொண்டிருக்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.
அவருடைய காலத்திலேயே இன்னொரு வெற்றி என்னவென்று சொன்னால், இன்றைக்கு சிங்கப்பூர் நாட்டில் அதனைப் பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள்.
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை!
‘‘ஊர் திரும்பியவர்கள் – வேர் ஊன்றியவர்கள்” இந்திய மரபுடைமை அமைப்பின் சார்பாக, அற்புதமான நல்ல ஆய்வாளர்களைக் கொண்டு, ஒரு நூலைத் தொகுத்திருந்தார்கள். அந்த நூலைத்தான், கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் ஆய்வுரையாகச் செய்து, பெரியார் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள். பெரியார் சமூக சேவை மன்றத்தினர்.
அதிலே ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்று சொன்னால், திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம் பெற்ற வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஏனென்றால், 1929 ஆம் ஆண்டிற்குமுன்பு, ஒரு நூற்றாண்டிற்கு முன்பாக புலம்பெயர்ந்தார்கள்.
பெரியாருடைய உலகப் பயணங்களுக்கும், மற்ற தலைவர்களின் பயணங்களுக்கும் வேறுபாடு உண்டு
முதன்முறையாக மலேயாவிற்குத் தந்தை பெரியார் அவர்கள் 1929 ஆம் ஆண்டில் சென்றபொழுது, அங்கேயுள்ள தோட்டத் தொழிலாளர்களைத்தான் சந்தித்தார். மாட மாளிகை, கூட கோபுரங்களை வைத்தி ருந்தவர்களிடம் செல்லவில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் அங்கே சென்றார்.பெரியாருடைய உலகப் பயணங்களுக்கும், மற்ற தலைவர்களின் பயணங்களுக்கும் வேறு பாடு உண்டு. மற்ற தலைவர்கள் சில முக்கிய மான இடங்களைப் பார்த்துவிட்டும், சில தலைவர்களைப் பார்த்தும், கைகுலுக்கிவிட்டு வருவார்கள்.
தந்தை பெரியாருடைய அறிவுரைகளை மலேய மக்கள் மிகப்பெரிய அளவிற்கு வரவேற்றனர்!
ஆனால், தந்தை பெரியார் அவர்கள் மக்களைச் சந்தித்தார். மக்கள் எங்கே இருக்கிறார்களோ, அங்கே போய் அவர்களைச் சந்தித்தார். தந்தை பெரியாருடைய அறிவுரைகளை அந்த மக்கள் மிகப்பெரிய அளவிற்கு வரவேற்றனர்.
‘‘மலேசியாவில் சிங்கப்பூரில் பெரியார்!’’
தோட்டத் தொழிலாளர் தோழர்களின் மத்தியில் மலேசியாவில் பேசினார். அந்த உரை நூலாகத் தொகுக்கப்பட்டு ‘‘மலேசியாவில் சிங்கப்பூரில் பெரியார்” என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கின்றோம். வரலாறை என்றைக்கும் திசை திருப்பிவிட முடியாது.
அந்த வகையில், திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம் அதனுடைய ஒவ்வொரு அடியிலும், மியான்மா நாடு உள்ளிட்ட நிகழ்வுகள் உள்பட வெளிநாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகள் எல்லாம் பதிவாகி இருக்கின்றன.
உங்கள் பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுத்து,
ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!
அப்படிப்பட்ட சூழ்நிலையில், தந்தை பெரியார் அவர்கள் அங்கே உரையாற்றும்பொழுது, ‘‘இங்கே கள்ளுக் கடைகளும், வேறு சில கோவில்களும்தான் இருக்கின்றன. நம்முடைய பிள்ளைகள் படிக்க வேண்டாமா? அந்தப் பிள்ளைகள் எல்லாம் அரைக்கால் சட்டைகூட இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். அடுத்த முறை நான் இங்கே வரும்பொழுது, பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வையுங்கள். ரப்பர் தொழிலாளியாக இருக்கின்ற நீங்கள், ரப்பர் பால் எடுக்கக்கூடிய தொழிலாளியாக இருக்கக்கூடிய நீங்கள், உங்கள் பிள்ளைகளை அதே தொழிலுக்கு அனுப்பாமல், அவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து, ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்துங்கள்” என்று சொன்னார்.
பெரியாரை நன்றிப் பெருக்கோடு
வரவேற்ற இளைஞர்கள்!
1953 ஆம் ஆண்டு பர்மாவிற்கு செல்கின்ற நேரத்தில், மலேசியா, சிங்கப்பூருக்கும் சென்றார் தந்தை பெரியார் அவர்கள். அப்பொழுது அவருக்கு வரவேற்புக் கொடுத்த இளைஞர்கள் யார் தெரியுமா? அவருடைய அறிவுரையால் மாற்றம் செய்யப்பட்டு, பள்ளிக்கூடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று பட்டதாரிகளாகவும், அரசு அதிகாரிகளாகவும் உயர்ந்த வர்கள், பெரியாரை நன்றிப் பெருக்கோடு வரவேற்றனர்.
ஒரு தலைமுறை மாறியது. மாறியதைப் பார்த்து மகிழ்ந்த தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியாரைப்பற்றி அறிஞர் அண்ணா!
அதனால்தான், அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள், ‘‘தந்தை பெரியார் அவர்களே, உங்களு டைய பெருமை என்னவென்று சொன்னால், உலகத்தில் எத்தனையோ சீர்திருத்தவாதிகள் வந்திருக்கிறார்கள்; அதை வரலாற்றில் படித்திருக்கின்றேன் நான். ஆனால், அவர்கள் யாரும், தன்னுடைய வாழ்நாளிலேயே, தான் விதைத்த கொள்கைகளின் விளைச்சலை அறுவடை செய்து பார்த்ததில்லை. தான் விதைத்த அந்தக் கொள்கை களிலிருந்து முகிழ்த்ததை கைகளில் எடுத்து சுவைத்தது கிடையாது. நீங்கள்தான், அதுபோன்ற வெற்றிகளை உங்கள் வாழ்நாளிலே கண்டு களித்திருக்கிறீர்கள் என்று சொன்னார்.” அது எவ்வளவு அற்புதமான பெரிய வரலாற்று உண்மை. ஆகவேதான், அதற்கெல்லாம் அடித்தளம் என்னவென்று சொன்னால், தொண்டர்கள், தோழர்கள்தான்.
தந்தை பெரியார் அவர்கள் சொல்வார், ‘‘என்னுடைய தோழர்களைப் போல கட்டுப்பாடு மிகுந்த தொண்டர்கள் இல்லை” என்று. எங்களுடைய தொண்டர்கள், வீரா.முனுசாமியைப் போன்றவர்கள், இளங்கோவனைப் போன்றவர்கள், இன்னும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தொண்டர்களுக்கும், மற்ற கட்சித் தொண்டர்களுக்கும் வேறுபாடு உண்டு.
இயக்கத்திற்கு நாம் என்ன செய்தோம்
என்பதைத் தாண்டி…
‘‘மற்றவர்கள் எல்லாம் இயக்கம் தங்களுக்கு என்ன செய்தது என்று பார்ப்பார்கள். ஆனால், என்னுடைய தொண்டர்கள், இயக்கத்திற்கு நாம் என்ன செய்தோம் என்பதைத் தாண்டி, இயக்கம்கூட பின்னால்தான், நம் நாட்டு மக்களுக்கு நாம் என்ன செய்தோம்? நம் இனத்தின் அடிமை நிலையை மாற்றுவதற்கு, அறியாமையைப் போக்குவதற்கு, இல்லாமையை நீக்குவதற்காக, போதாமையைப் பூர்த்தி செய்வதற்காக எப்படியெல்லாம் பணி செய்யவேண்டும் என்று திட்டமிடக்கூடிய ஓர் அற்புதமான வாழ்க்கையை இந்த சுயமரியாதை இயக்கம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது” என்பார் தந்தை பெரியார்.
அதனால்தான் ‘‘என்னுடைய தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள்” என்றார்.
துறவிக்கும் மேலான தொண்டர்தான்,
தோழர் வீரா.முனுசாமி!
அந்தத் துறவிக்கும் மேலான தொண்டர்தான், தோழர் வீரா.முனுசாமி அவர்கள். கிடைக்க முடியாத காய்த்து, பழுத்து, இருக்கக்கூடிய கனி.
எதையும் அவர் எதிர்பார்த்ததே இல்லை. ஒருவர் இந்த இயக்கத்தில் சேர்ந்தால், இந்தக் கொள்கையை ஏற்றால், அதுவே அவருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி!
என்னுடைய தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள் என்று சொன்னாரே தந்தை பெரியார், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
அதற்கு அவரே விளக்கம் சொன்னார், ‘‘துறவிகள்கூட ஏன் துறவுக்கு வந்தீர்கள் என்று அவர்களிடம் கேட்டால், அந்த உலகத்திற்குப் போய் நான் பரவசமாக இருக்க வேண்டும்; இந்த உலகம் சிற்றின்பம்; அந்த உலகம் பேரின்பம்” என்பார்கள்.
நன்றி பாராத தொண்டு;
மானம் பாராத தொண்டு!
ஆனால், தந்தை பெரியார் சொன்னார், ‘‘சுயமரி யாதை இயக்கத் தோழர்களுக்கு அதுபோன்று எந்த உலகத்தின்மீதும் நம்பிக்கை கிடையாது. நன்றி பாராத தொண்டு; மானம் பாராத தொண்டு. எதிர்நீச்சல் அடிக்கக்கூடிய தொண்டு; எப்பொழுதும் மக்களுக்காகத் தொண்டாற்றக் கூடிய அளவிற்குரியவர்கள்.”
தனக்கு வசதி இருக்கிறதா, இல்லையா? என்பது முக்கியமல்ல. பொருள் இல்லையா, உழைப்பு இருக்கிறது. ‘‘வெறுங் கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்து என்பது மூலதனம்” என்று கவிஞர் தாராபாரதி சொன்னார்.
அந்த விரல்கள் பத்து. இவருக்கோ கை, கால்கள் எல்லாம் சேர்த்து 20 விரல்கள்.
காலம், என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை!
தோழர்களே, நீண்ட நாள்களுக்குப் பிறகு உங்க ளையெல்லாம் சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி! சுருக்கமாக உரையாற்றினால் போதும் என்றார்கள். ஆனால், உங்களையெல்லாம் பார்த்த மகிழ்ச்சியினால், காலம் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
வீரா.முனுசாமி அவர்களின் குரலைக் கேட்க வேண்டும்; அவர் பேசவேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி!
மலேசிய திராவிடர் கழகத் தலைவர்
டத்தோ அண்ணாமலை!
நேச முத்தையா போன்றவர்கள், இன்றைக்கு நூற்றாண்டு விழாவினை சிறப்பாக மலேசியா திராவிடர் கழகம், மலேசியா மாந்தநேய திராவிடர் கழகம் சார்பில் கொண்டாடுகின்றனர். அதேபோல, கோவிந்தசாமி அவர்கள் சிறப்பான நூல்களையெல்லாம் மலேசியாவில் பரப்பிக் கொண்டிருக்கின்றார். மலேசிய திராவிடர் கழகத்தினுடைய தலைவர் டத்தோ அண்ணாமலை அவர்கள், கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஜப்பானில் நடைபெற்ற அண்ணா – பெரியார் பிறந்த நாள் விழாக்கள்!
அண்மையில் நான் இலங்கைக்குச் சென்று வந்தேன். அதற்குப் பிறகு, ஜப்பானில் நடைபெற்ற, அண்ணா பிறந்த நாள் விழா – தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிற்குச் சென்று வந்தேன். அவ்விழாவில் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் அவ்விழாக்களை நடத்தியது கண்டு மிகவும் பெருமையாக இருந்தது.
இந்த நாட்டில் ஒவ்வொருவரையும் வீரா.முனுசாமியாகத்தான் இயக்கத்திற்கு உழைத்தவர்களைப் பார்த்தேன் நான். அதுபோலவே, சிங்கப்பூர் நாடு. அதுபோலவே, மலேசிய திராவிடர் கழகத்திற்கு 75 ஆண்டுகால வரலாறு உண்டு – பவள விழாவைத் தாண்டிய வரலாறு.
தோழர்கள் பல குழல்களாக, பெரியாரிய அமைப்புகளாக இருக்கிறார்கள். என்றாலும், ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல. மாறாக, பலமுனை தாக்குதல்களையும், பல முனைகளிலிருந்து அவர்கள் நடத்தி, இயக்கத்தைக் காத்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள்.
எல்லா இடங்களிலும் ஜாதியம் இன்றைக்குத் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. அந்த ஆபத்து நீங்கவேண்டுமானால், சுயமரியாதை இயக்கம் அன்று எப்படி தேவைப்பட்டதோ, அதுபோல இன்றும் தேவை! என்றும் தேவை!
சுயமரியாதை இயக்கம் என்பது, மாந்த நேயத்தினுடைய மாந்தப் பரப்பினுடைய பள்ளிக்கூடம்!
எப்படி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, தீயணைப்பு நிலையம், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என்றைக்கும் நிரந்தரமாகத் தேவையோ, அதுபோல சுயமரியாதை இயக்கம் என்பது, மாந்த நேயத்தினுடைய மாந்தப் பரப்பினுடைய பள்ளிக்கூடம்.
மூடநம்பிக்கை நோய்கள் வரும்பொழுது, அதனைத் தடுக்கக் கூடிய நிலை.
அதுபோல, வெறித்தனமான நிகழ்ச்சிகள் நடந்தால், அவர்களுக்கு அறிவுரை கூறி, தீயணைப்பு நிலையம்போல, அந்த வெறித் தீயை அணைக்கக்கூடிய தீயணைப்பு நிலையம்தான் சுயமரியாதை இயக்கம்.
அதையும் மீறி நடந்தால், காவல்துறை எப்படி பொதுவாக செயல்படுகிறதோ, அதுபோல, சமூகத்தினுடைய காவல்துறை.
நம்முடைய பண்பாட்டைப் பாதுகாப்பது முக்கியம்!
சுயமரியாதை இயக்கம், ஒரு குறுகிய இனவாத அமைப்பு அல்ல. இனவாதம் ஒழிக்கப்படவேண்டும்; தமிழ் செம்மொழி, அதனுடைய தனித்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லும்பொழுது, வெறும் மொழிக்காக மட்டுமல்ல – உரிமைக்காக -மான வாழ்வுக்காக – சமத்துவத்திற்காக – பகுத்தறிவுக்காக பாடுபடுவதற்கு, நம்முடைய கலாச்சாரம், நம்முடைய பண்பாட்டைப் பாதுகாப்பது என்பதுதான் மிகவும் முக்கியமாகும்.
எனவேதான், ஆபத்துகளில், அரசியல் படையெடுப்பைவிட, பொருளாதார படையெடுப்பை விட, மிக முக்கியமான, ஆபத்தான வேதனையான படையெடுப்பு, பண்பாட்டுப் படையெடுப்புதான்.
தோழர் வீரா.முனுசாமியின் நூற்றாண்டு விழாவையும் நாம் கொண்டாடவேண்டும்!
எனவேதான், அங்கே பண்பாட்டை காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதற்குத்தான் பண்பாட்டுப் போராளியாக, போராளிகளுடைய தலைவராக அருமைத் தோழர் வீரா.முனுசாமி அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட நாள் வாழவேண்டும்; அவருடைய நூற்றாண்டு விழாவையும் நாம் கொண்டாடவேண்டும்; நாமெல்லாம் இருந்து கொண்டாட வேண்டும். இளைஞர்கள் அதைப் பின்பற்றவேண்டும்.
சுயமரியாதைச் சுடரொளியால், நல்ல இளைஞர்களைத் தயாரிக்கவேண்டும்!
எனவேதான், தந்தை பெரியார் ஏற்றிய அறிவுச் சுடரை, உலகெங்கும் இருக்கக்கூடியவர்கள், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு வகையில் அவர்கள் ஏந்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், மியான்மா நாட்டினுடைய ஒப்பற்ற பெரியார் பெருந்தொண்டர் வீரா.முனுசாமி அவர்களின் கைகளில் இருக்கின்ற சுயமரியாதைச் சுடரொளியால், நல்ல இளைஞர்களைத் தயாரிக்கவேண்டும்; அவருக்கு முதுமை என்றாலும், அளவுகடந்த முதிர்ச்சி உண்டு.
ஆகவேதான், முதிர்ச்சி, பல பேருக்குப் பயிற்சி கொடுக்கக்கூடிய வாயப்பை உருவாக்கும். ஆகவே, அவர்கள் அத்துணை பேரும் அதனை செய்யவேண்டும் என்று கேட்டு, உங்களை சந்தித்ததால், வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாத மகிழ்ச்சியை நாங்கள் எல்லோரும் பெறுகிறோம்.
தொடர்ந்து நீங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; உடல்நலம், உள்ள நலத்தைப் பொறுத்ததுதான்.
ஆகவே, உள்ளத்தில் உரம் இருந்தால், உடல் சரியாகிவிடும். நீங்கள் அலட்சியமாக இருக்காதீர்கள்.
வாய்ப்பிருந்தால், தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு மற்ற தோழர்கள், மியான்மா நாட்டு நண்பர்கள் ஒத்துழைப்பு நல்கினால் நல்லது. என்றாலும், சுயமரியாதை இயக்கம் என்பது எப்பொழுதுமே கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்களையும் கொண்டது; கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்களையும் கொண்டதாகும்.
சுயமரியாதை வீரர் மானமிகு அய்யா
வீரா.முனுசாமி அவர்களை வாழ்த்துகிறோம்!
ஆகவே, அதனைக் காத்து வருகின்ற எங்கள் ஒப்பற்ற காவலர், சுயமரியாதை வீரர் மானமிகு அய்யா வீரா.முனுசாமி அவர்களுக்கு, பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய எங்கள் சகோதரர்கள், எங்கள் சக பணியாளர்கள், கூட்டுப் போராளிகள் வாழ்த்துகின்றனர்.
வாழ்க சுயமரியாதை இயக்கம்!
பெரியார் உலக மயம் –
உலகம் பெரியார் மயம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.