திருப்பத்தூர் நகர் ஜலகாம்பாரை சாலையில் அமைந்துள்ள திருப்பத்தூர் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் ஆணையை மீறி அரசு அலுவலக வளாகத்தில் கோயில் கட்டிக் கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசாணை என்ன சொல்கிறது?
‘‘இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் ஆகிய எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் கடவுள்கள் படங்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றை பொது அலுவலகங்களிலிருந்து நீக்க வேண்டும்.
மேலும் நமது மாநிலம் மதச் சார்பற்ற ஆட்சி செய்யும் மாநிலம் ஆகையால், எந்த மதத்தைச் சார்ந்த சாமியார்கள், சாதுக்கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள் மற்றும் சிலைகளை அரசு அலுவலகங்கள் அல்லது அரசுக்குச் சொந்த மான இடத்தில் வைத்திருப்பது சரியல்ல என்று அரசாங்கம் கருதுகிறது. ஆகையால் இந்தக் கட்டிடங் களில் இப்போது அவைகள் இருக்குமாயின் அவற்றை அகற்ற வேண்டும் என்று அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது’’ என்று அரசாணை கூறுகிறது.
ஆனால், இந்த சட்டங்கள் எல்லாம் இவர்கள் பார்வைகளுக்கு செல்லுகிறதா? தெரிந்தே அரசை மதிக்காமல் இது போன்ற நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுகிறார்களா ? இவர்களுக்கு இந்த துணிச்சலை கொடுப்பது யார்?
உடனடியாக அரசு இதை கவனத்தில் கொண்டு, இது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இத்தகைய செயல்கள் இங்கு மட்டுமல்ல டாக்டர் கலைஞர் எந்த நோக்கத்திற்காக தந்தை பெரியார் சமத்துவபுரங்களை கொண்டு வந்தாரோ! அவைகளையெல்லாம் சிதைக்கும் வகையில் சமத்துவபுரங்களிலும் ஜாதிக்கொரு கோயில்களை கட்டிக் கொண்டு வருகிறார்கள்.
சட்டப்படி தவறான இவற்றை அரசு அனுமதிக்கலாமா?