திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (6.10.2024) பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்றைய கால கட்டத்தில், நாட்டு நடப்புகளை மய்யப்படுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அவை.
‘தமிழ்நாட்டு மீனவர்களின் நலனும் உரிமையும்’ என்ற தலைப்பில் மூன்றாவது தீர்மானம்:
தமிழ்நாடு மீனவர்கள் நலனும் – உரிமையும் பாதுகாக்கப்படவேண்டும்!
‘‘கச்சத்தீவு – இலங்கை அரசுக்குத் தாரை வார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லும் தருணங்களில், கடற்கொள்ளையர்கள் தாக்குதல், மீன் வலைகள் உள்ளிட்ட மீன் பிடித் தொடர்பான கருவிகளைக் கொள்ளை அடித்தல், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது, பிறகு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவது, அபராதம் மற்றும் சிறைக் கொடுமையை அனுபவிப்பது – இவற் றையும் தாண்டி, தமிழ்நாட்டு மீனவர்களை அவமானப்படுத்தும் வகையில், மொட்டையடிப்பது வரை, தமிழின மீனவர்களின் வாழ்வு ஒவ்வொரு நாளும் அவமானமும், கேள்விக் குறியாகவும் ஆகிவிட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி, தமிழின மீனவர்களின் சுதந்திரமான மீன் பிடிக்கும் உரிமை நிலை நிறுத்தப்படவேண்டும் என்றும், இலங்கை அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்தும், சிறிது அசைவுகூட இன்றி, ‘யாருக்கோ வந்த இழவு’ என்ற போக்கில், ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடந்து கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும். மேலும், தமிழின மீனவர்களின் மீதான துயரம் தொடராமல் இருக்க, உறுதியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
இப்பிரச்சினைக்குச் சட்ட ரீதியான முடிவினை ஏற்படுத்திட, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தி, உரிய முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டம் ஒருமனதாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.’’
உலகின் பல்வேறு நாடுகளிலும் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்கின்றனர். அங்கெல்லாம் தமிழ்நாட்டு மீனவர் களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் போல, நடைபெறுவ தில்லை. கடலில் எல்லைக் கோடுகளை நிர்ணயிக்க முடியாது; காற்று வீசும் பாதையில் படகுகள் இழுத்துச் செல்லப்படும் என்ற அடிப்படை உண்மைகூட அறியாத முட்டாள்களா இலங்கைப் படையினர்?
இலங்கை அரசின் அனுமதியில்லாமலா இலங்கைக் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை சிறைபிடிக்கும்?
கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தமானது என்பதற்கு எத்தனையோ ஆதாரங்களை எடுத்துச் சொல்லியாயிற்று. என்றாலும் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல், கலந்து ஆலோசிக் கப்படாமல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது எந்த வகையில் சரியானது?
ஏதோ தி.மு.க. ஆட்சியின் ஒப்புதலோடு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதாக அபாண்டமான பொய்ப் புழுதிகளைச் சுமத்துவது ஆரோக்கியமானதல்ல!
இது ஜமக்காளத்தில் வடிகட்டப்பட்ட அபாண்டமான பழியாகும்.
தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அப்போது கடுமையாக எதிர்த்துப் பேசினர். ஒரு கட்டத்தில் தி.மு.க. உறுப் பினர்கள் இரா. செழியன், நாஞ்சில் கி. மனோகரன் ஆகியோர் வெளி நடப்பும் செய்தனர் என்பது எல்லாம் வரலாறாகும். நாடாளுமன்ற நடவடிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மைகள் இவை.
நரேந்திரமோடி பிரதமராவதற்கு முன்பு என்ன சொன்னார்? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே ஒரு தமிழ்நாட்டு மீனவரும் தாக்கப்பட மாட்டார்; கைது செய்யப் படவும் மாட்டார் என்று 56 அங்குல மார்பளவு கொண்ட பிரதமர் மோடி மார்பு தட்டிப் பேசவில்லையா? அது என்னாயிற்று?
14.2.2014 அன்று சென்னை அருகே வண்டலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திரு. நரேந்திரமோடி என்ன பேசினார்? ‘‘தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைச் சிறையிலும், பாகிஸ்தான் சிறையில் குஜராத் மீனவர்களும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஒன்றிய அரசுக்குப் போதிய அக்கறையில்லை. மீனவர்கள் பிரச்சினை தொடர்ந்து நீடிப்பதற்குப் பலவீனமான ஒன்றிய அரசே காரணம்’’ என்று பேசினாரே, இப்பொழுது அவர்கள் கூறும் அந்த ஒன்றிய அரசு என்பது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தானே! மீனவர்கள் ஏன் அவதிப்படுகிறார்கள்? மத்திய பிஜேபி அரசின் பலகீனம்தான் காரணம் என்பதை பிரதமர் ஒப்புக் கொள்கிறாரே?
எந்த அளவுக்கு நிலைமை சென்றுள்ளது என்றால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ரூ.5.40 கோடி அபராதம் விதிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது.
சுண்டைக்காய் நாடான இலங்கைத் தீவு ஒரு துணைக் கண்டமான இந்திய அரசை கால் தூசு அரசாக எடை போடுகிறதே!
பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை அரசு சந்தித்தபோது இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் நீட்டிய உதவிக்கரத்தைச் சற்றும் நன்றி உணர்ச்சியின்றி வாள் கொண்டு வெட்டுகிறதே!
நரேந்திர மோடி பிரதமராக இருந்தபோதுதான் 2016ஆம் ஆண்டு இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டது.
அக்குழுவில் இரு நாட்டு வெளியுறவு செயலாளர்கள், அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனரே! இந்தக் குழு 2020 ஜனவரிக்குப் பிறகு கூடாதது ஏன்? ஆறு மாதத்துக்கு ஒரு முறை இக்குழு கூடி மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். நடுக்கடலில் மீனவர்கள் தாக்கப்பட்டால் இது குறித்துத் தகவல் தெரிவிக்க ‘ஹாட்லைன்’ அமைக்கப்படவில்லையா?
இவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் ஆகி விட்டனவே. ஒவ்வொருமுறை தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும் பொழுதும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதி வருகிறார். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சுழியமாகத்தானே இருக்கிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர் டில்லி சென்று பிரதமரை சில நாள்களுக்கு முன் சந்தித்த நிலையில் முதல் கோரிக்கையே தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது தண்டிக்கப்படுவது குறித்துதான் (27.9.2024).
இந்தச் சந்திப்புக்குப் பின் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபரைச் சந்திக்கிறார். (4.10.2024)
அந்த சந்திப்பில் – உரையாடலில் தமிழ்நாடு மீனவர்கள் பிரச் சினைபற்றி ஒரே ஒரு சொல் உண்டா? ஈழத் தமிழர் பிரதிநிதிகளைச் சந்தித்ததுண்டா?
அவ்வளவு அலட்சியம்! அதே நேரத்தில் குஜராத் மீனவர்கள் பிரச்சினை என்றால் இந்தியப் பிரதமர் ஆடாவி்ட்டாலும் அவர் சதை ஆடுகிறது. இவ்வளவுக்கும் இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பிஜேபிக்கு புரட்டிப் போட்டு நன்கு பாடம் கற்பித்தாலும், ஒன்றிய பிஜேபி அரசு திருந்துவதாக இல்லையே!
தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து திட்டமிட்டு வஞ்சகம் செய்து வருவதால்தான் தங்கள் கட்சியைத் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள் என்ற சிறிய அளவு சிந்தனைக் கூட தோன்றாதா?
காரணம் தமிழ்நாடு தந்தை பெரியார் கொள்கை வேரூன்றிய திராவிட மண் – அவர்களோ அதற்கு நேர் எதிரான மதவாத ஆரிய சிந்தனைப் போக்கு கொண்டவர்கள். நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டமல்ல; ஆரியர் – திராவிடர் போராட்டமே என்பதுதான் தந்தை பெரியாரின் கூர்த்த சிந்தனையையும் – நிலைப்பாடும் ஆகும்.
இதனை பிஜேபிக்கு வால் பிடிக்கும் ஒரு சில தமிழர்களும் சிந்தனைத் துருப்பிடிப்பிலிருந்து அறிவு சாணைப்பிடித்து வெளியே வர வேண்டும் – அதுதான் தமிழன் என்பதற்கான அடையாளமாகும்.