ஆவடி, அக்.8 ஆவடி மாநகராட்சி பகுதியில் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48ஆவது வார்டில், வடகிழக்கு பருவமழை தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆவடி மேயர் ஜி.உதயகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு அதிக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 பகுதிகள் கண்டறி யப்பட்டு வெள்ள தடுப்பு நிதி திட்டத்தின் கீழ் 3 பிரதான கால்வாய்கள் ரூ.11.80 கோடி மதிப்பீட்டில் பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 10 கால்வாய்களில் ரூ.30.61 கோடி மதிப்பீட்டில் 9 கால்வாய் பணிகள் முழு மையாக முடிக்கப்பட்டன. ஒரு வடிகால் பணியும் முடியும் தருவாயில் உள்ளது.
மாநகராட்சி கட்டுப்பாட்டில் 6.62 கி.மீ நீளமுள்ள மழைநீர் பிரதான கால்வாய்கள், 199 கி.மீ நீளமுள்ள சிறிய மழைநீர் வடிகால்வாய்கள், 633 சிறுபாலங்கள் (கல்வெட்டுகள்) ஆகியவற்றில் உள்ள சேறு, சகதிகள் அகற்றி மழைநீர் செல்ல ஏதுவாக பணி முடிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையின்போது பாதிப்புக்குள்ளாகும் என 8 இடங்கள் கண்டறியப்பட்டு அதற் கான வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், நிரந்தர தீர்வுகள் காணப்பட்டன.
மேலும், அதிக மழையின் போது பாதிப்புக்குள்ளாகும் என்ற சூழ்நிலை உருவானால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 10 பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 9 கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வெள்ளத் தடுப்பு நடவடிக்கையும், தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1,500 மணல் மூட்டைகள், 5 மரம் அறுவை இயந்திரம், 18 மின் ஆக்கிகள், ஹோஸ் பைப், 2 மெ.டன் பிளீச்சிங் பவுடர், 4000 லிட்டர் குளோரின், 20 குடிநீர் தொட்டிகள், தேவையான அளவு தார்பாலின், டார்ச் லைட் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
குடிநீர் விநியோகம் செய்யும் இடங்களில் சூப்பர் குளோரினேசன் முறையில் 4 பிபிஎம் குளோரின் கலந்து நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 11 நிவாரண மய்யங்கள், நிவாரண நடவடிக்கைகளுக்கு போதுமான அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுக்களின் திட்டத்துடன் தயார் நிலையில் உள்ளது. மேலும் அதிகமாக தேவைப்படும் பட்சத்தில் வாடகை அடிப்படையில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
மக்கள் தொடர்பு கொள்ள 1800 425 5109 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் பொதுமக்களின் புகார்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர். இந்த பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.