அமிர்தசரஸ், அக்.5 பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர் மந்தீப் கவுர். இவரது கணவர் ஜக்ஜீத் சிங். நகை வியாபாரி. அவர் வெளியூர் சென்றிருந்தார். கடந்த 30.9.2024 அன்று மாலை வீட்டில் மந்தீப் கவுர் தனது 2 குழந்தைகளுடன் தனியாக இருந்தார். இதை கவனித்த முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையடிக்கத் திட்ட மிட்டனர். அந்த நேரத்தில் வீட்டில் துணி துவைத்துக்கொண்டு இருந்த மந்தீப்கவுர், கொள்ளையர்கள் தனது வீட்டைச் சுற்றி வந்து நிற்பதை அறிந்து திடுக்கிட்டார். உடனே புத்திசாலித்தனமாக யோசித்து மூன்று கொள்ளையர்களையும் தனது வீட்டில் நுழைய விடாமல் தடுத்து, கதவை அடைத்தார்.
அவர்கள் கதவை தள்ளி உள்ளே புகுந்துவிட முயன்றனர். அப்போது கூச்சலிட்டுக்கொண்டே கொள்ளையர்களைத் தள்ளிவிட்டு, கதவைத் தாழிட்டார். அதையும் அவர்கள் உடைக்க முயன்றபோது, வீட்டில் இருந்த சோபாவை இழுத்துக் கதவு அருகில் போட்டார். மேலும் கூச்சல் எழுப்பி அக்கம்பக்கத்தினரை வரவழைக்க முயன்றார். அதற்குள் முகமூடி கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இவை தற்போது வைரலாகி வருகிறது. மூன்று முகமூடி கொள்ளையர்களை விரட்டிய பஞ்சாப் பெண்ணுக்குப் பாராட்டு குவிகிறது.