சென்னை, அக்.5- நீர்வளத் துறை சார்பில் ரூ.83 கோடி செலவில் 19 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தடுப்பணைகள்
நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் 5.83 கோடியே 19 லட்சம் செலவில் செயல் படுத்தப்பட்டு உள்ள 19 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (4.10.2024) நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா கொளப் பாக்கம் கிராமத்தில் ரூ.11 கோடியே 72 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கால்வாய், காஞ்சிபுரம் வாலாஜாபாத் தாலுகாவில் உள்ளா வூர் கிராமத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு, காஞ்சீபுரம் உத்திரமேரூர் தாலுகா இருமரம் கிராமத்தில் ரூ.3 கோடியே 6 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை உள்ளிட்ட திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கல்வி நிதி
அதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒரு கால பூஜை திட்ட கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகளின் மேல்படிப்புக்காக 500 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதனை நிறை வேற்றும் விதமாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவி தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் சிறீதர், கூடுதல் ஆணையர்கள் சுகுமார், ஹரிப்பிரியா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேசிய நல்லாசி யர் விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள் கோபிநாத் மற்றும் முரளிதரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் மதுமதி, இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.