‘மோசடியே!’

2 Min Read

‘விஜயபாரதம்‘ என்ற ஆர்.எஸ்.எஸ். வார இதழில் (20.9.2024, பக்கம் 8) ‘‘ஹிந்துக்களைப் பிரிக்க ஒரு தந்திரம்’’ என்ற தலைப்பில் ஒரு பெட்டிச் செய்தி:
‘‘அண்மையில் சமூக வலைத் தளங்களில் ஒரு விபரீதமான விளம்பரத் தட்டியைப் பலரும் பகிர்ந்து, அதற்குப் பதில் கருத்துகளை பகிர்ந்ததைக் காண நேர்ந்தது. ‘அம்பேத்கர் படத்துடன் ஒரு பேனரில், தலித் பகுதியில் வைதிக விநாயகர் சிலைகள் எதற்கு?’ என்று குறிப்பிட்டு, ‘‘ஹிந்து சமுதாயத்தின் ஓர் அங்கமான மக்களிடம் பிரிவினைச் சிந்தனையைத் தூண்டுகின்ற மத மாற்றத் தரகர்களுக்கு சமூக தளங்களில் தேசியவாதிகள் பலரும் பதிலடி கொடுத்திருப்பதைப் பார்க்க முடிந்தது’’என்பதுதான் ‘விஜயபாரதத்தின்‘ பெட்டிச் செய்தி.
அடேயப்பா!

தங்களுக்குத் தேவைப்படும்போது, தலித் மக்கள் தங்களின் (ஹிந்து மக்களின்) ஓர் அங்கமாகி விடுவார்கள் இவர்களுக்கு.
அந்த ஹிந்து மதத்தின் அங்கமான அவர்கள் ஹிந்து மதக் கோவில்களில், உரிய பயிற்சி பெற்று, அர்ச்சகராக வேண்டும் என்றால், அப்பொழுது அந்த அங்கமெல்லாம் பங்கமாகி விடுகிறது! என்னே இரட்டை வேடம்!
1956 ஆம் ஆண்டில், ‘‘அண்ணல் அம்பேத்கர்தான் ஹிந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு, பல லட்சக்கணக்கான மக்களுடன் பவுத்தம் தழுவிட்டாரே – அவரை ஹிந்து மதக் கடவுளான விநாயகருடன் ஒட்ட வைப்பது கடைந்தெடுத்த மோசடியல்லவா!
நாக்பூரில் அம்பேத்கர் ஹிந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு 22 உறுதிமொழிகளை எடுக்கவில்லையா?
அந்த உறுதிமொழிகளுள் மூன்றாவது உறுதிமொழி என்ன தெரியுமா?
‘‘கணபதி, லட்சமி மற்றும் ஹிந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று நான் வணங்கமாட்டேன்!’’ என்று உறுதிமொழி எடுத்தவராயிற்றே அண்ணல் அம்பேத்கர்.

இதில் கூறப்பட்டுள்ள கணபதிதானே இந்த விநாயகர். எப்பொழுது ஒரு தலைவர் உறுதிமொழி எடுத்து, வேறு மார்க்கத்திற்குச் சென்றுவிட்டாரோ, அந்தத் தலைவரை, முன்பு இருந்த மதத்தைச் சேர்ந்த ஒரு கடவுளுடன் முடிச்சுப் போடுவது அறிவு நாணயம் அற்றது என்பது மட்டுமல்ல – அசல் கடைந்தெடுத்த மோசடியாகும்.
அந்த அடிப்படையில், சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிவது நாணயமானது – நேர்மையானதே!
புத்தருக்குப் பெயர் விநாயகர் – அந்தப் பெயரை ஹிந்து மதக் கடவுள் ஒருவரின் பெயராக மாற்றுவது – மன்னிக்கப்படத்தக்கதா?
இவர்களால் கற்பிக்கப்பட்ட எந்த ஒரு கடவுளுக்காவது ஒழுக்கம் உண்டா? இந்த நிலையில், ‘விஜயபாரதங்களிடம்’ நேர்மையான விமர்சனத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

– மயிலாடன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *