தூத்துக்குடி, அக். 4– தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு பரிவர்த்தனைக்காக 3 தோணிகள் தயார் நிலையில் உள்ளன. கடல் கால நிலை காரணமாக ஓரிரு நாட்களில் தோணி போக்குவரத்து துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சரக்கு தோணிகள் இயக்கப்பட்டு வருகிறது. 15 முதல் 25 தோணிகள் சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மே முதல் செப்ட்டம்பர் வரையில் அதீத கடல் கால நிலை உருவாகிறது. இந்த வானிலை இந்த சரக்கு போக்குவரத்தான கடற்பயணத்திற்கு உகந்ததல்ல என்பதால் நிறுத்தப்படும். பின்னர் மீண்டும் கால நிலை சரியான பின்னர் செப்டம்பர் இறுதியில் துவக்கப்படும். தற்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு மீண்டும் சரக்கு தோணி போக்குவரத்து தொடங்க இருக்கிறது. இங்கிருந்து தற்போது மாலிக்கு 20 சரக்கு தோணிகளும், லட்சத்தீவுகளுக்கு 15 தோணிகளும் என 25 சரக்கு தோணிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
உரங்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், பல்லாரி, முட்டை உள்ளிட்ட சில காய்கனிகள் மட்டும் கொண்டு செல்லப்படுகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான இணைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேயான நேரடி தோணி சேவை மீண்டும் துவங்கப்படவுள்ளது. அட்டு, ஹிதிதாதூ மற்றும் மாலத்தீவு போன்ற முக்கிய இடங்களுக்கு நேரடி சரக்கு தோணி போக்குவரத்து துவங்குகிறது.