மகாராஷ்டிரர்கள் ‘நூல்வலை’யில் வீழாமல் தப்ப உறுதி கொண்டதன் பொருட்டு அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவதாக மகாராஷ்டிர மாகாண மகாநாட்டில் தலைமை வகித்த ஸ்ரீமான் தேசமுகர் கூறினாராம். சட்டசபையென்னும் மாயவலையில் சிக்குண்டவர்களுக்கு மகாத்மா அருளிய ‘பக்திவலை’யின் பெருமை எவ்வாறு புலனாகும்? ஆகவே, இவ்வாறு இவர் களிக்கூத்தாடுவதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் சுயராஜ்யக் கட்சியினர் பெல்காம் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைக்கும் நேர்மையைப் பற்றி மட்டும் இங்கு சிறிது ஆராய்வோம். சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தைப் பற்றி ஒத்துழையாதோர் சற்றே வாயைத் திறந்து “இம்” என்றால் போதும்; உடனே “குடிமுழுகிற்று”, “ஒற்றுமை குலைந்தது” என்று கூக்குரல் கிளம்புகிறது. ஆனால் மகாராஷ்டிர சுயராஜ்யக் கட்சியினரோ தங்கள் மாகாண மகாநாட்டில் நூல் சந்தா ஒழிய வேண்டுமென்று பகிரங்கமாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். காந்தியடிகளை, காங்கிரஸை விட்டு விரட்டிவிடுவதே இவர்கள் நோக்கமென்பதை அக்கிராசனர்* தமது உரையில் தெளிவாகக் கூறிவிட்டார்.
லோகமான்யர் பிறந்த மகாராஷ்டிரம் இந்நிலைக்கோ வந்துவிட்டதென்று நமது நேயர்கள் வருத்தமுறுதல் கூடும். ஒரு விஷயம் அவர்களுக்கு ஆறுதலை அளிக்குமென நம்புகிறோம். மாகாண மகாநாட்டில் கூடிய மேதாவிகளின் அபிப்பிராயம் மகாராஷ்டிரர்களின் உண்மையபிப்பிராயம் அன்று என்றும், அம்மாகாணத்தில் பெரும்பான்மையோர் காந்தியடி களிடத்தும் இராட்டையிடத்தும் அன்பு பூண்டவர்களென்றும் பம்பாய் ‘கிரானிகல்’ பத்திரிகை கூறுகிறது. நூல் சந்தா விஷயமாக விவாதம் நேரிடலாமென்று எண்ணி ஒத்துழையாதோர் எவரும் அம்மகாநாட்டுக்குப் போகவில்லை.
இதில் நகைச்சுவை பொருந்திய அம்சம் யாதெனில் ஒத்துழையாதார் அம்மகாநாட்டுக்குப் போகாமலிருந்ததும் அவர்களுடைய குற்றமாகிவிட்டது. “வேண்டாமென்ற மனைவி கைப்பட்டாலும் குற்றம், கால்பட்டாலும் குற்றம்” என்பார்கள். ஒத்துழையாதார் மகாநாட்டிற்குச் சென்றிருந்து ‘நூல் சந்தாவை’ ஆதரித்திருந்தால் “சண்டையிட்டு ஒற்றுமையைக் கெடுக்க வந்தார்கள்” என்று குறை கூறப்பட்டிருக்கும். மகாநாட்டுக்கு வராதிருந்ததால் அவர்கள் அஹிம்சையைக் கைவிட்டு ஹிம்சைக் குற்றத்திற்கு ஆளாகிவிட்டனர் என்று அக்கிராசனர் தேசமுகர் இப்போது கூறுகிறார். அஹிம்சையின் தத்துவத்தைப் பற்றி உபதேசங் கேட்க காந்தியடிகள் இவரிடந்தான் வரவேண்டும். சட்டசபைக்குச் செல்லா திருத்தலே ஹிம்சையென்று இனி இவர் சொல்வார் போலும்! ஏன்? ஒத்துழையாதார் உயிருடன் இருத்தலே ஒரு குற்றமாய் விடுதலுங்கூடும்.
காந்தியடிகளின் தலைமையின் கீழ் ஒத்துழையாதார் ஒவ்வொரு தடவையிலும் சுயராஜ்யக் கட்சியாருக்கு விட்டுக்கொடுத்து வந்திருக்கும் விஷயம் உலகமறியும். இவர் பொருட்டு பகிஷ்காரப் பிரசாரத்தை, ஏன்? ஒத்துழையாமையையே ஓராண்டிற்கு நிறுத்தி வைத்ததோடன்றி, தமது திட்டத்தின் உயிர்நிலையான கதர் விஷயத்திலும் மகாத்மா இவர்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தத்தை உண்மையுடன் நிறைவேற்றி வைப்பார்களென்று காந்தியடிகள் மனப்பூர்வமாக நம்பினார். ஆனால் சுயராஜ்யக் கட்சியினரோ தொடக்கத்திலிருந்து நூல் சந்தாத் திட்டம் தோற்றே போய் விடுமென்று உறுதிகொண்டுவிட்டார்கள். இவ்விஷயத்தில் இவர்களுக்கு “விருப்பம் எண்ணத்திற்கு தந்தை”யாக இருந்திருக்கின்றது. மகாராஷ்டிர சுயராஜ்யக் கட்சியினர் தீர்மானத்தைப் பற்றி முன்னர் கூறினோம். மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஸ்ரீமான் ஐயங்கார் இவர்களைவிட ஒருபடி முன்சென்றுவிட்டார். இவர் இந்திய சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியின் பிரபல அங்கத் தினராயிருப்பவர். காங்கிரÞ காரியக்கமிட்டி அங்கத்தினர். நாகபுரி புகைவண்டி நிலையத்தில் இவர் காந்தியடிகளைப் பார்க்க வந்தபோது கதராடை அணிந்து வரவில்லையாம். தாம் காங்கிரÞ காரியமாக வரவில்லை யென்று சமாதானம் கூறினாராம். இச்சம்பவத்தைப் பற்றிக் காந்தியடிகள் ‘யங் இந்தியா’ வில் மனம் வருந்தி எழுதியுள்ளார். தமது குடும்ப நலத்தை அறியும் பொருட்டு அவர் தம்மைப் பார்க்கவர நியாயமில்லையென்றும், அவர் கூறியது போலிச் சமாதானமென்றும் காந்தியடிகள் எடுத்துக் காட்டுகிறார். சுயராஜ்யக் கட்சியார் நூல் சந்தா திட்டத்தை மனப்பூர்வமாக நடத்தி வைப்பார்களென்று எண்ணி, மகாத்மா காங்கிர காரியக் கமிட்டியில் அநேகமாக எல்லோரையும் சுயராஜ்யக் கட்சியினராகவே பொறுக்கி எடுத்துக் கொண்டார். ஆகவே ஸ்ரீமான் அய்யங்காரின் செயல் அவருக்குப் பெரும் ஏமாற்றம் அளித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
– ‘குடிஅரசு’ – தலையங்கம், 17.05.1925