1931 அக்டோபர் மாதத்தில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் முதல் தமிழாக்கம் வெளிவந்தது. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க வார ஏடான ‘குடிஅரசு’, 1931 அக்டோபர் 4 முதல் தொடர்ச்சியாக அய்ந்து இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையின் முதல் பிரிவான பூர்ஷ்வாக்களும் கம்யூனிஸ்ட்டுகளும் தமிழாக்கத்தை வெளியிட்டது.
மொழிபெயர்ப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் முதல் பகுதி தந்தை பெரியாரின் அறி முக உரையுடன் வெளியிடப்பட்டது. இன்றும் பொருத்தப் பாடுடைய அந்த அறிமுக உரையில் தந்தை பெரியார் எழுதியது: ‘உலக அரசாங்கங்களிலெல்லாம் ரஷ்ய ஜார் அரசாங்கமே மிக்க கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனாலேயே அங்கு சமதர்ம முறை அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று.
இந்த நியாயப்படி பார்த்தால், அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷ்யாவைவிட இந்தியாவிற்கே முதன்முதலாக ஏற்பட்டிருக்க வேண்டியதாகும், இங்கு அனேகவித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும் சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகுஜாக்கிரதையாகவே கல்வி அறிவு, உலக ஞானம், சுயமரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் அல்லாமல், காட்டுமிராண்டித்தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது, அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதலில் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி, ரஷ்யாவுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று.’
ஆனால், உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் மற்ற தேசத்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்ன வென்றால், மற்ற நாடுகளில் ஒரு விடயம்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால், இந்தியாவிலோ மேல் ஜாதியார் – கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால், அது பணக்காரன்-ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக்கொண்டு வருகிறது’ (‘குடிஅரசு’ 04.10.1931).
– – – – –
புட்டபர்த்தி சாய்பாபாவின் மோ(ச)டி வித்தைகளை தோலுரித்துக் காட்டிய கேரள பகுத்தறிவாளர் பசவ பிரேமானந்த் அவர்கள் நினைவு நாள் 04.10.2009 நினைவைப் போற்றுவோம்.