ஒரு கண்ணோட்டம் (2)
* பேராசிரியர்
ப. காளிமுத்து எம்.ஏ., பி.எச்டி.,
‘பன்னோக்குச் சிந்தனை கொண்ட சமுதாய விஞ்ஞானி’ எனும் தலைப்பில் புலவர் பா. வீரமணி எழுதிய கட்டுரை மேலைச் சிந்தனையாளர்களோடு பெரியாரை ஒப்பிட்டு உயர்வு காண்கிறது. மேலை நாடுகளில் தோன்றிய மதச்சார்பற்ற சமத்துவ அமைப்புகள் எல்லாம் தொடர் இயக்கமாக, மக்கள் இயக்கமாக உருவாகவில்லை. அதைப் போலவே தமிழ்நாட்டில் தோன்றிய அமைப்புகளும் தொடர் அமைப்புகளாக நிலைத்து நிற்கவில்லை. ‘தத்துவ விசாரினி’ ‘தத்துவ விவேசினி’ ‘ஒரு பைசா தமிழன்’ போன்ற இதழ்களை நடத்தியவர்களும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இவர்கள் எல்லோரும் பின்னடைவைச் சந்தித்த இடத்தில் பெரியார் வெற்றி பெற்றார். அதற்குக் காரணம் பெண் முன்னேற்றத்திலும் சமத்துவத்திலும் பெரியாருக்கு இருந்த பேரீடுபாடும் பெரு நோக்கமும் மற்றவர்களுக்கு இல்லை. மேலும் தம் கொள்கைகளுக்குப் பொதுவுடைமைத் தத்துவத்தை துணையாக அவர் சேர்த்துக் கொண்டதைப் போல் மற்றவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை சிங்கார வேலரும் தனி இயக்கம் கண்டவர் அல்லர்.
‘தான் எங்கிருந்தாலும் சமதர்மவாதியே; சமுதாயத்தின் அனைத்துக் குறைகளுக்கும் சமதர்மமே மருந்தாகும் என்பதை முடிந்த முடிபாகக் கொண்டவர் பெரியார். இதிலிருந்து அவர் பொதுவுடைமையின்பால் கொண்ட உறுதியை உணரலாம். ஆய்வாளர்கள் பலர் இந்த உண்மைகளையெல்லாம் காணாமல், உணராமல் எளிமையாகக் கடந்து சென்று விடுவது மிக அவலமானது வரலாற்றுக் குருட்டுத்தனம் கொண்டது. இனியாவது அவர்கள் பார்வையில் உண்மை தோன்றட்டும். தந்தை பெரியார் தோற்றுவித்த இயக்கம் அவர் மறைவுக்குப் பின்னரும் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கின்றது’ என்று புலவர் பா. வீரமணி அய்யா அவர்கள் அரிய செய்திகள் பலவற்றைத் தம் கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
வகுப்புரிமைக் கோரிக்கையை ஏற்க மறுத்த தேசிய இயக்கத்திற்குள்ளேயே சுயமரியாதைச் சூறாவளியை உருவாக்கியவர் பெரியார் என்கிறார் திருமாவேலன். பெரியார் ஒரு பிறவிச் சீர்திருத்தவாதி, தம் தங்கை மகள் பருவமடைவதற்கு முன்பே கைம்பெண்ணான நிலையில் அவருக்கு மறுமணம் செய்து வைத்தவர். ஈரோட்டில் கொங்குப் பறைத் தெருவைத் திருவள்ளுவர் தெரு என்று மாற்றிப் புரட்சி செய்தவர் பெரியார். வகுப்புரிமைத் தீர்மானம் காங்கிரசால் புறந்தள்ளப்பட்ட நிலையில் அதனை விட்டு வெளியேறினார் பெரியார். வைக்கம் அறப்போர் நிகழ்வுகளையும் சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தையும் திருமாவேலன் விளக்கி வரைந்துள்ளார்.
1925 முதல் நாடெங்கும் சுயமரியாதைச் சங்கம், சுயமரியாதை வாலிபர் சங்கம், பார்ப்பனரல்லாதார் சங்கம், போன்ற பல பெயர்களில் (சுயமரியாதையை மய்யப்படுத்தி) பல சங்கங்கள் தோன்றின.
‘பார்ப்பனரல்லாதார்’ என்னும் எதிர்மறைப் பெயரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் திராவிடர் எனும் சொல்லைப் பெரியார் நடைமுறைக்குக் கொண்டு வந்தார் ‘திராவிடம்’ என்பது பண்பட்ட ஓர் இனக் குழுவின் பாரம்பரியத்தை வரலாற்றை உள்ளடக்கியது. ஆரியத்திற்கு எதிராகப் பெரியார் முன் வைத்த கொள்கையின் பெயரே ‘திராவிடம்’ என்கிறார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், மேலும் ‘சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன். நாங்களிருவரும் மாயவரம் சன்மார்க்கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளையே சுயமரியாதை இயக்கமாகும். அக்குழந்தை தாயுடன் வாழாது இதுகாலும் தந்தையுடன் சேர்ந்து வாழ்கிறது என்றாலும் அதன் வளர்ச்சியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன்’’ என்று திரு.வி.க.வின் உரையை எடுத்துக் காட்டி அவர் மகிழ்ச்சியடைவதைத் துரை சந்திரசேகரன் உணர்த்துகிறார்.
வழக்குரைஞர் அருள்மொழியின் ‘மலைமேல் பெய்த மாமழை’ எனும் கட்டுரை, திராவிடர் இயக்கத்தின் தியாகிகளை மலைமேல் பெய்த மழையாக உருவகப்படுத்திக் காட்டும் முறை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.
தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபோது பார்ப்பன ஆதிக்கத்திற்கெதிராக அவர் முன்னெடுத்த போராட்டங்கள், பார்ப்பனரல்லாத தலைவர்களை ஒருங்கிணைத்தது, மூவலூர் இராமாமிர்தம் அவர்கள் ஆச்சாரியார் தலைமையால் புறக்கணிக்கப்பட்டபோது திரு.வி.க.வும் பெரியாரும் அவருக்குத் துணை நின்றது.
(தொடரும்)