எவ்வளவு அக்கறையோடு இந்த அணி இருக்கிறது என்பதை ஒரு செய்தியை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், டெசோ அமைப்பின் சார்பில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், 15.4.2013 அன்று மாலை 5.30 மணியளவில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், தி.முக.. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கேவான், மூத்த வழக்குரைஞர் சண்முகசுந்தரம், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார், கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் தீர்மானம் என்னவென்பதைப் பார்ப்போம். இன்றைக்கு நடக்கின்ற பிரச்சினைக்கு, அந்தத் தீர்மானத்தைப் படிக்கவேண்டும்; பதிவு செய்யவேண்டும்; மற்றவர்களுக்குப் பரப்பவேண்டும். தலைவர்களுக்கெல்லாம் இது பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும் என்று சொல்வார்கள். அந்த ஞாபக மறதியை வைத்துத்தான் பல பேர் அரசியலை நடத்துகிறார்கள்.
அந்த முதல் தீர்மானத்தைப் பாருங்கள்,
‘‘இராமேஸ்வரத்தை ஒட்டிய ‘‘ஆதாம் பாலம்” மற்றும் நாகை மாவட்டம், கோடி யக்கரை ஆகிய பகுதிகளின் இடையில் இந்தியா வுக்கும், இலங்கைக்கும் இடையி லுள்ள கடற்பகுதி ‘‘பாக் ஜலசந்தி” என்று அழைக் கப்படுகிறது. இப்பகுதி வரலாற்று அடிப்படையில் உருவான நீர்ப் பரப்பாகும்.
‘‘பாக் விரிகுடா” கடல் பகுதி பல நூற்றாண்டு காலமாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.
பாரம்பரியமாக இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் முழு உரிமையோடு இக்கடற்பரப்பு முழுமையிலும் மீன் பிடித்து வந்தனர். இருநாடுகளின் விடுத லைக்குப் பின்னரும் இவ்வுரிமை இரு நாட்டு மீனவர்களிடையே நீடித்து வந்தது.”
‘‘1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பிரிவு 6-இன்படி இரு நாட்டு மீனவர்களுக்கும், மீன்பிடிக்கும் உரிமை தொடர்ந்து வழங்கப் பட்டது.
அதாவது ‘‘பாக் விரிகுடா” கடலில் இருநாட்டு மீனவர்களுக்கும் காலங் காலமாக இருந்து வந்த மீன் பிடிக் கும் உரிமை எந்த மாறுதலுக்கும் உட்படுத் தப்படாமல் தொடர்ந்து நீடிக்கும் என்ற வகையிலேயே மேற்படி ஒப்பந்தம் அமைந்தது. இந்திய அரசும், இலங்கை அரசும் இந்த ஒப்பந்தத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும், கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
இலங்கையோ அல்லது இந்தியாவோ மீனவர்கள் அனுபவித்து வரும் பாரம்பரிய உரிமைகளைத் தடை செய்ய இயலாது. மேலும் இந்திய அரசாக இருந்தாலும், இலங்கை அரசாக இருந்தாலும் மீனவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கவேண்டிய பொறுப்பும் உள்ளது. சர்வதேச சட்டத்திற்குப் புறம்பாக இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது இலங்கை அரசு எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்களை மீன் பிடிக்கவிடாமல் தடுக்க முடியாது. ஆனால் இதற்கு மாறாக இலங்கை அரசு நாள்தோறும் இந்திய மீனவர்கள் பாரம்பரிய உரிமையின் அடிப்படையில் மீன் பிடிப்பதை ஏதாவது ஒரு வகையில் தடை செய்து வருகிறது.
இந்திய மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்தல், அவர்களுடைய மீன் வலைகளை அறுத்துச் சேதப்படுத்துதல், மீனவர்களைக் கைது செய்தல், மற்றும் அவர்கள் பிடித்த மீன்களைக் கைப்பற்றிக் கொள்ளுதல் போன்ற சர்வதேசச் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் இலங்கை அரசின் கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய மீனவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு நிரந்தர தீர்வைக் காணவில்லை. 1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், அங்கே நடைபெறும் கோவில் விழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள் ளும் உரிமையும், மீனவர்களின் வலையை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழக அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன. ஆனால் 1976 ஆம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கப்பட்டு, அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டு, ஆளுநர் ஆட்சி தமிழகத்திலே நடை பெற்ற போது, அந்த ஒப்பந்தத்தில் இருந்த இந்த ஷரத்துகள் நீக்கப்பட்டு விட்டன. எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் மீனவர்களுக்கு வழங்கியுள்ள மீன் பிடிப்பதற்கான பாரம் பரிய உரிமையையும் மீனவர்களின் உயிரையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய ஒன்றிய அரசுக்குள்ளது. ஆனால், இதுவரை இந்திய மீனவர்கள் ஏறத்தாழ அறுநூறுக்கும் மேற்பட்டோர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய கொடுஞ்செயலைத் தடுக்கவும், இந்திய மீனவர்களைக் காப்பாற்றவும் இந்திய அரசு ஒரு நிரந்தரமானத் தீர்வு எதையும் இதுவரைக் காணவில்லை.
வரலாற்று ரீதியான நீர்ப்பரப்பில் ‘‘நாடு சார்ந்த கடல் என்று எந்தப் பரப்பையும் அறுதியிட்டுக் கூற முடியாது. ஒரு நாட்டின் இறையாண்மை என்பது குறிப்பிட்ட பூகோள வரையறையைக் கொண்டது. ஆனால், மீன் பிடிக்கும் உரிமையைத் தடுப்பதற்கு ஏற்ற ‘‘கடல் எல்லை எதுவும் வரலாற்று ரீதியில் உருவான கடல் நீர்ப் பரப்பில் கிடையாது என்பது உலகம் முழுவதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் நியதியாகும். எனவே இலங்கை அரசு; 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத் தில் அங்கீகரிக்கப்பட்ட பாரம் பரியமான மீன் பிடிக்கும் உரிமை யையும் தொடர்ந்து மீறிச் செயல்பட்டு வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வருகின்ற கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமென்ற நோக்கிலும், வரலாற்று அடிப்படையில் உருவான ‘‘பாக்-விரிகுடா பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப் பட வேண்டும் என்ற அவசியத்திலும், 1974ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே செய் யப்பட்ட ஒப்பந்தத்தை அறவே ரத்து செய்திட இந்திய அரசு முன் வரவேண்டும் என்று “டெசோ வின் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப் படுகிறது. மேலும் கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்
அது 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத் தின் படி இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் நாம் தெரிவித்த எதிர்ப்பு களை யெல்லாம் மீறி விட்டுக் கொடுக் கப்பட்டது. இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368 ஆவது பிரிவின்படி நாடாளு மன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும். கச்சத் தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பது தான் உண்மை. எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், ‘‘டெசோ” அமைப்பின் மூலம் உச்சநீதிமன்றத்தை அணுகுவதென இந்தக் கூட்டம் தீர்மானிக் கின்றது.”