சென்னை. அக், 2- குறும்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களுக்கு கழகப் பொருளாளர் வீ.குமரேசன் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு கலைத்துறை இணைந்து இரண்டாம் ஆண்டாக நடத்திய பகுத்தறிவு குறும்படப் போட்டி கடந்த 21.9.2024 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. வந்திருந்த குறும்படங்களில் 13 குறும்படங்கள் மட்டும் திரையிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தன. அவை முதலில் திரையிடப்பட்டன. பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை அமைப்பாளர் உடுமலை வடிவேல், பகுத்தறிவு கலைத்துறை மாநிலச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான மாரி கருணாநிதி இருவரும் நடுவர்களாக இருந்து மதிப்பீடு செய்தனர். 7 மணிக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஒளிப்படக்கலைஞர் சீனி முத்து ராஜேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பகுத்தறிவு ஊடகத்துறை மாநிலச் செயலாளர் ஆவடி முருகேசன் முன்னிலை வகித்தார். பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி தலைமையேற்க, உடுமலை வடிவேல் முன்னிலையேற்று உரையாற்றினார். கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற, கலந்து கொண்டவர்களை வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தலைவர், இயக்குநர் மங்கை அரிராஜன் 1.மெய்யுணர்வு, 2.இந்தியன் 3.சிறகொடிந்த பறவைகள் ஆகிய மூன்று படங்களுக்கு முறையே முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், கலை, கம்மி ஆகிய குறும்படங்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினார். பரிசுகள் அறிவித்தபடி பணமுடிப்பு, நினைவுப் பரிசு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. பகுத்தறிவு கலைத்துறையின் செயற்குழு உறுப்பினர் பேரா. ம.மாறவர்மன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் குறும்படம் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.